படிப்படியாகப் பார்ப்போம்.
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.
திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள். ‘கொஞ்சம் கை குடுங்கோ… வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று… ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.
ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.
அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.
பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு – சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.
“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”
“பெண்ணே… நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்… வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”
இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.
“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே…” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்…” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்… இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
“கடவுள் பெயரை சொல்லியும்… கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?
உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம்.
கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்…”என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், ( தொடரும் )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.