மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு விரைந்த கொண்டிருந்த புலிகள் அணிக்கு தலைமை தாங்கியவர் இரா.பரமதேவா.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதப்போருக்கு அணிதிரண்ட இளைஞர்களில் முதலிடம் வகிப்பவர்களில் முக்கியமான இடம் இரா.பரமதேவா உண்டு.
இரா.பரமதேவா பற்றி சுருக்கமாக சில விபரங்களை சொல்லி விட்டு தாக்குதலுக்கு செல்லலாம்.
1975 – அக்கால கட்டத்தில் இலங்கையின் சுதந்திர தினம் என்றாலும் சரி, குடியரசு தினம் என்றாலும் சரி தமிழர் விடுதலைக் கூட்டணி தீ உமிழும் வார்த்தைகளோடு போராட்டங்களை அறிவிக்கும்.
1975 மே மாதம் 22 ஆம் திகதி இலங்கையின் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமான அகிம்சை வழி எதிர்ப்பை தெரிவித்தது கூட்டணி.
பாடசாலை பகிஷ்கரிபு்பும் அதில் ஒரு அங்கம்.
பகிஷ்கரிப்பு போராட்டத்தின் முன் வரிசையில் நின்ற பரமதேவாவை பாடசாலையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.
கல்வி கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன் கருவி ஏந்திப் போராடும் களத்துக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினான்.
1977ம் ஆண்டு மட்டு நகரில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பரமதேவாவை தேடியது பொலிஸ்.
அத்தோடு வீட்டிலிருந்தும் அவன் வெளியேறினான். தலைமறைவு வாழ்க்கை.
“நாகபடை” என்று ஒரு அமைப்பை உருவாக்கினான். கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை திரட்டிச் சேர்த்தான்.
இயக்கத் தேவைகளுக்கு நிதி தேவை. 1978 இல் செங்கலடி மக்கள் வங்கி பணத்தை “நாகபடை” பறித்தெடுத்தது.
துரத்தி வந்த பொலிசார் “நாகபடை”யினரை சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பொலிஸ் அதிகாரி ஒருவரும் பரமதேவாவும் வீதியில் கட்டிப் புரண்டு மோதினார்கள்.
பரமதேவாவின் கையின் மேற்பாகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
பொலிஸார் பரமதேவாவை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை நடந்தது. 1981இல் பரமதேவாவுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
நீண்டகால சிறை
1978 முதல் 1983 வரை பரமதேவாவுக்கு சிறை வாழ்க்கை. தமிழ் போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவன் பரமதேவர் என்றுதான் நினைக்கிறேன்.
1983 யூலையில் வெளிக்கடை சிறைப் படுகொலையின் பின்னர் “மகர” சிறையில் இருந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டான்.
1983 செப்டம்பர் 28ம் திகதி முதலாவது மட்டக்களப்பு சிறையுடைப்பின் போது தப்பி வந்த பரமதேவர் புலிகள் அமைப்போடு இணைந்துகொண்டான்.
1984 ஆகஸ்ட் 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் தாக்கப்பட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.
அத்தாக்குதலில் பிரதான பங்குவகித்தவர் பரமதேவா. அந்த நேரத்தில்தான் கிழக்கிலும் ஒரு பொலிஸ் நிலையத்தை தாக்கவேண்டும் என்ற சிந்தனை பரமதேவாவுக்கு ஏற்பட்டது.
1984 செப்டம்பர் 10 திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலிலும் பரமதேவா பங்கு கொண்டிருந்தான்.
அத்தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்பு சென்று, களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு பரமதேவா ஆயுத்தம் செய்தான்.
தயார் நிலையில் பொலிசார்
இனி களவாஞ்சிக் குடித்தாக்குதலுக்கு செல்லலாம்.
தாக்குதல் பிரிவை சேர்ந்தவர்கள் பொலிஸ நிலையம் முன்பாக வேனை நிறுத்திவிட்டு குதிப்பதற்கு இடையில்.
முன் கூட்டியே தகவலறிந்து தயாராக இருந்த பொலிசாரின் இயந்திர துப்பாக்கிகள் முழங்கத்தொடங்கின.
புலிகளும் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.
மோதல் மூண்டுவிட்டது.
முன்னரே பாதுகாப்பான இடங்களில் பொலிசார் தற்காப்பு நிலை எடுத்துக்கொண்டதால் புலிகளைவிட பொலிசாருக்குதான் நிலமை சாதகமாக இருந்தது.
ஒரு குண்டு பரமதேவாவின் மார்பில் பாய்ந்தது.
அப்படியே சரிந்தான் பரமதேவா.
ரவி என்றழைக்கப்படும் இன்னொரு புலி உறுப்பினரும் வீழ்த்தப்பட்டார்.
பொலிசாரின் கை மேலோங்கியதை உணர்ந்துகொண்ட புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டார்கள்.
இது கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட முதலாவது பெரிய தோல்வி.
பரமதேவாவின் மரணம் புலிகளுக்கு பேரிழப்பு.
பரமதேவாவின் சகோதரர் இரா-வாசு தேவா.
புளொட் அமைப்பில் அரசியல் துறை செயளாளராக இருந்த வாசுதேவா புலிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
1984 அக்டோபர் 31.
புதுடெல்லி இந்தியாவின் தலைநகரம்
இனிதாய் மலர்ந்த ஒரு காலைப் பொழுது ஒரு கொடிய சம்பவத்தால் சோகமானது.
வேட்டுச்சத்தங்கள் –அந்தோ!!
பாரத நாட்டின் தவப் புதல்வியை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக்கொலை செய்துவிட்டார்.
இந்தியாவே ஸ்தம்பித்தது. அகில உலகமும் அதிர்ந்து போனது.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் விழிகளில் கண்ணீர் அருவி.
செய்தியறிந்த மறுநிமிடமே கறுப்பு-வெள்ளைக் கொடிகள் வடக்கிலும்-கிழக்கிலும் மலையகத்திலும் துக்கம் அறிவித்துக்கொண்டிருந்தன.
இந்தியா என்றால் இந்திரா என்று சொல்லப்படுமளவுக்கு சாதனைகள் படைத்த பெண் பிரதமர்.
1983 யூலையில் கலவரத்தீயில் தமிழர்கள் எரிந்துகொண்டிருந்த போது இந்திராவின் கண்டணம் தமிழ் மக்களின் கண்டனம் தமிழ் மக்கள் இதயங்களை வருடிக்கொடுத்ததை எப்படி மறக்கலாம்?
மரணம் அவரை அணைத்த செய்தி கேட்டபோது தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து போனதாகவே இலங்கை தமிழ் மக்கள் சோகம் சுமந்தனர்.
அன்னை இந்திரா கொல்லப்பட்டபோது ஈழப்போராளி அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டில்தான் தங்கியிருந்தார்கள்.
கொலைக்கு கண்டனம் போராளி அமைப்புகளின் தலைவர்கள் உடனே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
அன்னை இந்திராவின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார்.
அன்னையின் மைந்தனும் அவரைப்போலவே எங்கள் பிரச்சனையில் அனுதாபம் உள்ளவராக இருப்பாரா? இலங்கைத் தமிழ் மக்களின் கேள்வி அதுதான்.
ஈழப்போராளி அமைப்புகளின் தலைவர்கள் புதிய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தனர்.
அந்த வாழ்த்துச் செய்திகளில் ஒன்று பிரபாகரனிடமிருந்தும் சென்றது.
இந்திராவைக் கொன்றவர்கள் கொடியவர்கள் என்று கூறியிருந்த பிரபாகரனின் கடிதத்தின் இறுதியில் பின்வரும் வாசகங்களும் இருந்தன..
” எந்த உன்னத இலச்சியங்களுக்காக அன்னை இந்திராகாந்தி வாழ்ந்து போராடி இறந்தாரோ
அந்த இலச்சியங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள் என்றே நாம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
நீங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துகள்.”
இந்திரா காந்தி பற்றி பிரபா கூறியதில் மிக முக்கியமான கருத்து இது.
“தமிழ் மக்களின் பெரும் காவலராக திகழ்ந்த அன்னை இந்திராவின் தனிப்பட்ட அக்கறை இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்து போயிருக்கும்.
தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மீக வலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார். என்று கூறியிருந்தார் பிரபாகரன்.
மதகுருமார் முயற்சி
மதகுருமார் தூதுக்குழுக்கள் சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக தற்போதும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
1984 அக்டோபர் மாதத்தில்தான் மதகுருமார் குழுவொன்று முதன் முதலாக போராளி அமைப்புகளை சந்திக்கப்போவதாக அறிவித்தது.
அறிவித்தது மட்டுமல்ல போராளி அமைப்பின் தலைவாகளை சந்திப்பதற்காக தமிழ் நாட்டுக்கும் சென்றது.
ஆனால எந்தவொரு போராளி அமைப்பும் மதகுருமார் தூதுக்குழுவை சந்திக்க வரவில்லை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏதோவொரு தந்திரத்தோடு பௌத்த மதகுருமார்களை அனுப்பிவைக்கிறார் என்றே இயக்கங்கள் நினைத்தன.
ஈரோஸ்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தன.
“மத தலைவாகள் தூதுக்குழுவோடு பேச்சு நடத்த மாட்டோம். இவர்கள் வந்து பேச்சு நடத்துவதால் அரசியல் தீர்வும் ஏற்படபோவதில்லை” என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்திருந்தன.
ராகுல தேரோவின் அழைப்பு
இதேவேளை பௌத்த மத தலைவர்களில் ஒருவரான ராகுலதேரோவால் தமிழ் போராளிகளுக்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
“போராளிகள் சமாதான பேசு்சுக்கு வரவேண்டும். வன்செயல்களை நிறுத்தி விட்டு”
என்பதுதான் ராகுலதேரோவின் அழைப்பு.
அழைப்பு விடுத்த ராகுல தேரோ குறித்து போராளிகள் நன்கு அறிவர்.
ஐக்கிய தேசியக்கட்சியில் இனவாதத்துக்கு பெயர்போன அமைச்சராக இருந்தவர் சிறில் மத்தியூ.
“ஹௌத ஹொட்டியா? (யார் இந்த புலிகள்) என்ற நூலை எழுதியதோடு “சிங்கப்படை” என்ற அமைப்பை உருவாக்கியவர் சிறில் மத்தியூ.
சிறில் மத்தியூவின் வலதுகரமாக இருந்தவர் ராகுல தேரோ.
ராகுல தேரோவின் அழைப்பை அடுத்து புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். ராகுல தேரோவின் அழைப்புக்கு பதிலாக அது அமைந்தது.
அதிலிருந்த பிரதான வாசகங்கள் இவைதான்.
“தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு நீங்கள் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.
சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக எம்மை சமாதான பேச்சுக்கு அழைத்திருக்கிறீர்கள்.
இந்த அழைப்பின் ஒரு முன் நிபந்தனையாக வன்முறை செயல்களை நிறுத்தி, சட்டமீறல்களை நிறுத்தி சமரசம் பேசுவோம் வாருங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.
உங்களது இந்த அழைப்பு வேடிக்கையாக இருக்கிறது.
நாம் வன்முறையானவர்கள் அல்லர். அஜராகவாதிகளும் அல்லர். நாம் அடிமையாக வாழ விரும்பவில்லை.
நாம் சுதந்திரமாக நிம்மதியாக வாழ விரும்புகின்றோம். எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆயுத பலாத்கார அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ளவே நாம் ஆயுதம் தரித்திருக்கிறோம்.
பௌத்தத்தின் சார்பில், தர்மத்தின் சார்பில் சமாதானத்தை நீங்கள் விரும்புவதாயின் வன்முறைவாதிகளான உங்கள் ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
அதர்மமான அடக்குமுறை நீங்கி எமது மக்கள் சுதந்திரமான வாழ்வை தழுவிக்கொள்ளும்வரை நாம் ஆயுதங்களை கைவிடப்போவதில்லை.
அடிமைத்தளைகள் அகன்ற சுதந்திரமான, சமாதானமான நிம்மதியான வாழ்வை இலச்சியமாக கொண்டே நாம் ஆயுதப்போரை வரித்துக்கொண்டோம.
நாம் சமாதானத்தை விரும்புகிறோம.
சமாதானத்தை உங்களிடம் இரந்து கேட்டு ஏமாந்து போவதைவிட போராடி பெறுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்” புலிகள் ராகுலோதேரோவுக்கு கொடுத்த பதில்.
குடியேற்றம் மீது தாக்குதல்
இதற்கிடையே புலிகள் நடத்திய ஒரு தாக்குதல் பெரும் சர்சைகளையும், விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது.
முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் அரசாங்கத்தால் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன.
மீனவ குடும்பங்களே அவ்வாறு குடியேற்றப்பட்டிருந்தனர். குடியிருப்புகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
குடியேறியிருந்த குடும்பங்களில் 54பேர்வரை புலிகளின் தாக்குதலினால் பலியானார்கள்.
இத்தாக்குதல் மாத்தையாவின் தலைமையில் நடத்தப்பட்டது.
சிங்கள குடியேயற்றம் மீது வேறு தமிழ் இயக்கம் எதுவும் அதற்கு முன்னர் இவ்வாறான பாரிய தாக்குதல் எதனையும் நடத்தியிருக்கவில்லை.
சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்துவது முறையல்ல என்று பலத்த கண்டனங்கள் எழுந்தன.
இவ்வாறு கண்டனங்கள் எழும் என்று முன் கூட்டியே உணர்ந்திருந்தத புலிகள் அத்தாக்குதலுக்கு உரிமை கோராமல் இருந்து விட்டார்கள்.
இத்தாக்குதலை அடுத்து அரசு வடபகுதி கடலில் கண்காணிப்பு .வலயம் ஏற்படுத்தியது.
மன்னார் முதல் முல்லைதீவு வரையுள்ள கரையோரப் பகுதிகளை மனித நடமாட்டம் இல்லாத சூன்னிய பிரதேசமாக மாற்றியது.
இதனால் அப்பகுதிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் மீனவ குடும்பங்கள் அகதிகளா வேண்டிய நிலை ஏற்பட்டது.
1984 இல் யாழ்பாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் அரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.
அது அடுத்த வாரம்
தொடரும்..
எழுதுவது அற்புதன்