இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிராம மட்டத்திலான அரச நிர்வாகத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் 11 பேரை இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமின் பயிற்சிக்காக அதிகாரிகள் அனுப்பியிருக்கின்றனர்.
இலங்கை இராணுவத்தினர் ( ஆவணப்படம்)
இவர்களுக்கு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில், கடந்த வாரம் முதல் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் இளம் தாய் ஒருவர் உட்பட பெண்களும் அடங்குவார்கள் என கூறப்படுகின்றது.
நான்கு வருடங்கள் வரையில் பணியில் இருந்த இவர்கள் தொடர்பான பாதுகாப்பு அறிக்கைக்காகவே இவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறினார்.
இவர்கள் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். இவர்களில் ஒருவருடைய குடும்ப உறவினர் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்து புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று சமூகத்தில் இணைந்துள்ளார் என்ற காரணத்தைக் காட்டி புனர்வாழ் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சிறிதரன் கூறினார்.
நீதிமன்ற உத்தரவின்றி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய கடிதம் மூலமான உத்தரவுக்கு அமைவாகவே இவர்கள் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அது நீதி நடைமுறைகளுக்கு முரணானது எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா இல்லையா என்பதும் தெளிவில்லாமல் உள்ளது என்றும் சிறிதரன் கூறினார்.
இந்த விடயங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளின் கருத்தை உடனடியாகப் பெற முடியவில்லை.