“சேர், எனக்கு சகோ­தர சகோ­த­ரிகள் இல்லை. சிறிய வயதில் இருந்து நான் நண்­பர்­க­ளி­டையே ஒதுக்கப்பட்டிருந்தேன்.

அதனால் நான் அழ­கிய நண்­பர்­க­ளுடன் பழக கைவீசி செல­வ­ழித்தேன். கடை­சியில் கையி­லி­ருந்த பணம் நிறைவுற்­றது.

அதனால் வேறு வழி­யின்றி நண்­பர்கள் பிரிந்து விடு­வார்கள் என்ற பயத்தில் இந்த வேலையை செய்தேன்…” உஷா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) கண் கலங்­கி­ய­வாறு பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­ம­ளித்தாள்.

உஷா 28 வய­தான யுவதி. தந்தை முன்னாள் டிப்போ அதி­காரி. தாய் முன்னாள் சமுர்த்தி அத்­தி­யட்­சகர். வீட்டின் ஒரே பிள்ளை உஷா. பணக்­காரக் குடும்பம். கூடவே அறிவும் இருந்­தது.

அறிவு, பணம், செல்வம் என அனைத்­தையும் உஷா­வுக்கு கொடுத்­தி­ருந்த கடவுள் நட்பை மட்டும் கொஞ்சம் தூரமாக்கி வைத்­தி­ருந்தார்.

யார் இந்த உஷா? ஏன் அவளைப் பற்றி இத்­தனை பில்டப்? எதற்­காக மேற்குறிப்பிட்ட வாக்கு மூலம் என கேள்விக் கணை­களை நீங்கள் தொடுப்­பது புரி­கின்­றது.

ஆம் கடந்த ஒரு­வா­ரத்­துக்கு முன்னர் பாணந்­துறை பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமன் ரத்­னா­யக்­க­வுக்கு ஒரு உளவுத் தகவல் கிடைக்­கி­றது.

“சேர் …. நல்ல கேஸ் ஒன்று இருக்­கி­றது…. வாகன விற்­பனை தொடர்­பா­னது ….. கண்­டிப்­பாக பெரிய அளவில் நடக்­கி­றது… சில தக­வல்கள் இப்­போ­தைக்கு உள்­ளன” என பாணந்­துறை புலன் விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்த தகவல் பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமன் ரத்­னா­யக்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

ஹொரணை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜனக நந்­த­னகே, ஹொரணை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பத்ம குமார ஆகி­யோரின் வழி­ந­டத்­தலின் கீழேயே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக பொலிஸ் பரி­சோ­தகர் தரிந்து ஹெட்டி ஆரச்­சியின் கீழ் விசேட குழுவும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்தக் குழுவில் பொலிஸ் பரி­சோ­தகர் தரிந்­துவை தவிர ஏனையோர் பாணந்­துறை புலன் விசா­ரணைப் பிரி­வி­லி­ருந்தே தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

பாணந்­துறை புலன் விசா­ரணைப் பிரிவில் கட­மை­யாற்­றிய கான்ஸ்­ட­பிள்­க­ளான சமிந்த (38049), ஜய­சூ­ரிய (69615), ஆரிய சிங்க (77842), மது­சங்க (88117), பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் கமகே (1875) ஆகி­யோரே அந்த குழுவின் ஏனை­யோ­ராவர்.

இந் நிலையில் புலன் விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றி­ருந்த புலன் தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னது.

பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றி­ருந்த தக­வல்­க­ளுக்கு அமை­வாக பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பொல்­கொட பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சுற்­றி­வ­ளைத்­தனர்.

அது சமன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) எனப்­படும் கராஜ் உரி­மை­யாளர் ஒரு­வரின் வீடாகும்.

அந்த வீட்டை சுற்­றி­வ­ளைத்த போது அங்கு “அல்ட்ரோ” ரக சொகுசு கார் ஒன்றும் இருந்­தது. வீட்டை சுற்­றி­வ­ளைத்த பொலிஸ் பரி­சோ­தகர் ஹெட்டி ஆரச்சி தலை­மை­யி­லான குழு வீட்­டி­லி­ருந்த பெண் ஒரு­வ­ரிடம் அந்த அல்ட்ரோ கார் தொடர்பில் விசா­ரணை செய்­தது.

மோச­டி­க்கார பெண் விற்­பனை செய்த கார், குறித்த வீட்டில் இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்­தி­ருந்த தகவல்­க­ளுக்கு அமை­வா­கவே இந்த சுற்­றி­வ­ளைப்பு இடம் பெற்­றி­ருந்­தது.

இந்த கார் யாரு­டை­யது? பொலிஸார் வீட்டுப் பெண்­ணிடம் வின­வினர். “சேர்……. இது ஹொர­ணையில் உள்ள மிஸ் ஒரு­வ­ரிடம் வாங்­கி­யது. குறைந்த விலையில் விற்­பனை செய்­ததால் கொள்­வ­னவு செய்தோம்.

ஒரு இலட்சம் ரூபா முற்­பணம் கொடுத்தே எடுத்து வந்தோம். அப்பெண் எல்லா ஆவ­ணங்­க­ளையும் தயார் செய்து கொண்­டு­வ­ரு­வ­தாக குறிப்­பிட்டார்.

அதன் பின்னர் மிகுதி பணத்தை செலுத்த நாம் கதைத்துக் கொண்டோம்.” பொலி­ஸாரின் கேள்­விக்கு மூச்­சு­வி­டாது பதில் சொல்லி முடித்தாள் அவ் வீட்டுப் பெண்.

காரை விற்­பனை செய்­த­தாக கூறும் பெண்ணை எப்­படித் தெரியும்? எவ்­வாறு நம்பி கொள்­வ­னவு செய்­தீர்கள்? அவர் எங்­கி­ருந்து இந்த வர்த்­த­கத்தை மேற்­கொள்­கிறார்? என பொலிஸார் தொடர்ந்தும் துருவித் துருவி விசா­ரித்­தனர்.

இதன் பல­னாக ஐக்­கிய நாடுகள் சபையின் அலு­வ­ல­கத்தில் தான் வேலை செய்­வ­தா­கவும் அங்கு சேவையாளர்களின் தேவைக்­காக வரி இன்றி கார் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அதனை குறைந்த விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் எனக் கூறி­யுமே வாட­கைக்கு பெறப்­பட்ட கார் ஒன்று இவர்­க­ளுக்கு விற்பனை செய்­யப்­பட்­டுள்­ளதை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தினர்.

அப்­போது தான் தாம் நன்­றாக ஏமாற்­றப்­பட்­டுள்­ளதை அந்தப் பெண் உணர்ந்­துள்ளார்.

இந்­நி­லையில் விசேட திட்டம் ஒன்றை வகுத்த விசா­ர­ணைக் குழு­வினர் இந்த வாகன விற்­ப­னையின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான பெண்ணை கைது செய்ய திட்டம் வகுத்­தனர்.

பொலிஸ் பரி­சோ­தகர் தரிந்து ஹெட்டி ஆரச்சி தீட்­டிய திட்­டத்தின் பிர­காரம் ஒரு இலட்சம் ரூபா முற்­பணம் செலுத்தி அல்ட்ரோ வாக­னத்தை வாங்­கிய பெண்ணை வைத்து விற்­பனை செய்த பெண்­ணுக்கு தொலை­பேசியில் அழைக்கச் செய்­தனர்.

அவ்­வாறு தொலை­பே­சியில் அழைத்த பெண் “உஷா…. நான் மிகுதிப் பணத்­தையும் தயார் செய்­து­விட்டேன் என்ன செய்ய” என பொலிஸார் சொல்லிக் கொடுத்­ததை அப்­ப­டியே வின­வி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து ஹைப்­ரிட் ரக கார் ஒன்றில் மிகுதிப் பணத்தை பெற உஷா வந்த போது அவரை பொலிஸார் கைது செய்­தனர்.

அவர் செலுத்தி வந்த ஹைப்ரிட் ரக காரும் வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டது என்­ப­தையும் பொலிஸார் வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து உஷாவை ஹொரணை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து வந்த பொலிஸார் விசேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

28 வய­தாகும் உஷா அவ­ளது குடும்­பத்தில் ஒரே பிள்ளை. அவள் தனது ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்­சையில் 190 புள்­ளி­களைப் பெற்று உயர் சித்­தியை பெற்­றி­ருந்த நிலையில் கொழும்பில் உள்ள பிர­சித்­த­மான பெண்கள் பாட­சா­லை­யொன்றில் மேல­திக கல்­வியை தொடர்ந்­துள்ளார்.

உயர்­தரப் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­கலைக் கழகம் செல்லும் வரத்­தையும் பெற்­றுள்ள உஷா அங்கு முதற் தரத்தில் சித்தி செய்து பட்டம் பெற்­றி­ருந்தாள்.

அதன்­பின்னர் பிரசித்திபெற்ற பல்­க­லையின் மொழி தொடர்­பி­லான விரி­வு­ரை­யா­ள­ராக இருந்­துள்ள உஷா அக்காலப் பகு­தியில் 2013 ஆம் ஆண்டு வரை ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை அலு­வ­ல­கத்தில் திட்டப் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார்.

ஆங்­கில மொழி தொடர்பில் உஷா­வுக்கு இருந்த பரிச்­ச­யமும் ஆழ்ந்த அறிவும் பல்­வேறு உயர் கல்­லூ­ரி­களில் அவரை பகுதி நேர விரி­வு­ரை­யா­ள­ராகும் அள­வுக்கு உயர்த்­தி­யது. அதனை தொடர்ந்தும் உஷா ஆங்­கிலம் கற்­பிக்கும் வகுப்­புக்­க­ளையும் நடத்­தி­யுள்ளார்.

பணம் அறிவு என அனைத்தும் இருந்தும் உஷா­வுக்கு ஒரு பிரச்­சினை இருந்­துள்­ளது. அதா­வது அவ­ளது பரு­மனான உடலும் அலங்­கோ­ல­மான முகமும் அவளை நண்­பர்கள் ஒதுக்கி வைக்கும் அல்­லது பெரி­தாக கணக்­கெ­டுக்­காது விடும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது. இது உஷாவை உள ரீதி­யாக பெரிதும் பாதித்­துள்­ளது.

இந்­நி­லையில் நண்­பர்கள் தன்னை கண்டு கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக பணத்­தை கொட்டிச் செல­வ­ழிக்கும் ஒரு யுக்­தியை உஷா கையாண்­டுள்ளார். அத­னூ­டாக நண்­பர்­களை தன்னைச் சுற்றி வைத்துக் கொள்ள உஷா முயற்­சித்­துள்ளார்.

நண்­பர்­களை தனது செலவில் உல்­லாச பிர­யா­ணங்களுக்கு அழைத்துச் செல்லல், அவர்­க­ளுக்கு உணவு குடி­பானம் பெற்றுக் கொடுத்தல் என பணத்தை வீசிச் செலவு செய்­துள்ளார் உஷா.

இந்­நி­லையில் தாயின் இழப்­பா­னது உஷாவை மேலும் கவலை கொள்ளச் செய்­துள்­ளது. இத­னை­ய­டுத்து தனது நண்­பர்கள் தன்னை விட்டுச் சென்­று­விடக் கூடாது என்­ப­தற்­காக உஷா மேலும் பல ஆயு­தங்­களை நண்­பர்­க­ளுக்­காக வீசி­யுள்ளார்.

சம்­பா­திக்கும் பணம் நண்­பர்­களின் செல­வு­க­ளுக்கே சரி­யா­கி­விட பல சந்­தர்ப்­பங்­களில் தனது தந்­தை­யிடம் உஷா பணம் கேட்டு வற்­பு­றுத்­தி­யுள்ளார்.

தனது ஒரே பிள்­ளை­க்­காக எதையும் செய்யத் துணிந்த தந்தை ஒரு கட்­டத்தில் தனது காணி­யையே விற்று கோடிக் கணக்­கான ரூபாவை உஷாவுக்கு வழங்­கி­யுள்ளார்.

இறு­தி­யாக அவர்கள் வசித்த வீட்டைக் கூட அட­மானம் வைத்து 2 1/2 கோடி ரூபாவை தந்தை மக­ளுக்கு கொடுத்­துள்ளார்.

இப்­படி தந்தை கொடுத்த பணத்­தை­யெல்லாம் நண்­பர்­க­ளுக்­கா­கவே செல­வ­ழித்த உஷா ஒரு நண்பன் தொடர்பில் அவ்­வப்­போது கொடுத்­து­த­விய பணத்­தொகை மட்டும் 70 இலட்சம் ரூபா­வுக்கும் அதிகம் என்­கின்­றனர் விசா­ரணை அதி­கா­ரிகள்.

குறித்த நண்பர் அந்த பணம் ஊடாக வீடும் கட்டி வாக­னமும் கொள்­வ­னவு செய்­துள்­ளாராம். எனினும் நண்பர் வீடு கட்டி முன்­னேறும் போது உஷா­வுக்கோ அவ­ரது சொந்த வீடு கூட சொந்­த­மில்­லா­ம­லேயே இருந்­துள்­ளது. உஷா பய­ணங்­க­ளுக்கும் வாடகை வாக­னங்­க­ளையே பயன்­ப­டுத்த நேர்ந்­தது.

உஷா நண்­பர்­க­ளுக்­காக செய்­தது அவை மட்­டு­மல்ல. நண்­பர்­களின் சந்­தோஷத்­துக்­காக பத்­தரமுல்ல ஒபேரா குழு­வுக்கு மட்டும் உஷா சுமார் 60 இலட்சம் ரூபாவை செலவு செய்­தி­ருந்தார்.

இறு­தியில் நண்­பர்­க­ளுடன் அவர் கழித்த சொகுசு வாழ்­வுக்கு பணத் தட்­டுப்­பாடு ஏற்­ப­டவே தனது தகை­மை­க­ளையும் அறி­வையும் மாற்று வழியில் பயன்­ப­டுத்த உஷா ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸார் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

அதனால் 2013 ஆம் ஆண்டு ஐ.நா.வின் இலங்கை அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து உஷா வில­கி­யி­ருந்­தாலும் தொடர்ந்தும் அங்கு வேலை செய்­வது போன்று உஷா நடித்­துள்­ள­தாக குறிப்­பிடும் பொலிஸார் தனியார் வகுப்­புக்­க­ளையும் ஏக காலத்தில் நடத்தி அங்கு வரும் பிள்­ளை­களின் பெற்­றோரை ஏமாற்­றியே இந்த வாடகை கார்­களை விற்­பனை செய்யும் ஏமாற்று வேலையை உஷா செய்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எனக்கு ஐ.நா.வுக்கு வரும் வாக­னங்­களை குறைந்த விலைக்கு எடுக்­கலாம். ஒரு இலட்சம் கிலோ­மீட்டர் ஓடிய பின்னர் அக்­கார்­களை இன்று பெறலாம்.

20 இலட்சம் ரூபா காரை 9 இலட்­சம் ரூபாவுக்கு பெற்றுத் தரலாம் எனக் கூறியே உஷா இந்த வாகன விற்­பனை மோச­டியை அரங்­கேற்­றிள்ளார்.

உஷா­வுக்கு இருந்த சமூக அந்­தஸ்தை வைத்து அவர் மீது சந்­தேகம் கொள்­ளாத மக்கள் உஷாவின் கதையை நம்பி அவ­ச­ர­மாக வாகனம் ஒன்றை வாங்கும் அவாவில் கொள்­வ­னவு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இப்­படி ஆசை காட்­டியே 2000 ரூபா செலுத்தி பெற்ற அல்ட்ரோ காரையும் கராஜ் உரி­மை­யாளர் சமனின் மனை­விக்கு உஷா விற்­றுள்ளார். பிறகு ஆவ­ணங்­களை தந்து மிகுதி பணத்தை பெறு­வ­தாக உறு­தி­ய­ளித்த பின்னே முற்­கொ­டுப்­ப­னவில் இந்த வர்த்­தகம் இடம் பெற்­றுள்­ளது.

சமனின் மனை­வி­யிடம் பெற்ற முற்­ப­ணத்தை நண்­பர்­க­ளுக்­காக செல­வ­ழித்து விட்டு அதில் ஒரு தொகையை செலுத்தி இரு வண்­டி­களை வாட­கைக்கு பெற்­றுள்ளார் உஷா.

அவ்­வி­ரண்டு வண்­டி­க­ளையும் மக­ர­கம மற்றும் புளத்­சிங்­கள பிர­தே­சங்­களை சேர்ந்த இரு­வ­ருக்கு 12 இலட்சம் ரூபா முற்­பணம் பெற்றுக் கொண்டு விற்­பனை செய்­துள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

இதில் ஒரு வாக­னத்தின் பெறு­மதி 20 இலட்சம் ரூபா என்­ப­துடன் இது தொடர்பில் அவர் 9 இலட்சம் ரூபா­வி­னையே பெற்­றுள்ளார்.

இந்­நி­லையில் தனது கள்ள வர்த்­தகம் வெளியே தெரிந்­து­வி­ட­ாமலும் வாட­கைக்கு வழங்­கிய நிறு­வ­னங்கள் வாக­னத்தை தேடா­மலும் இருக்க நாளாந்தம் அவற்­றுக்­கான வாடகைத் தொகை­யையும் செலுத்த உஷா தவ­ற­வில்­லையாம்.

உஷா இவ்­வ­ளவும் செய்­தது அவ­ளது அழ­கான 10 தோழர்­களும் 4 தோழி­களும் அவளை விட்டு சென்று விடக் கூடாது என்­ப­துடன் அவர்­களை தன் பக்கம் வைத்­தி­ருப்­ப­தற்­காகும்.

எது எப்­படி இருப்­பினும் உஷா இறு­தியாக கைது செய்­யப்­படும் போது அவ­ளிடம் 2000 ரூபா மட்­டுமே இருந்­த­தாக பொலிஸார் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

கைதாகும் போது அவர் வருகை தந்­தி­ருந்த ஹைப்­ரிட் கார் 5000 ரூபா வீதம் செலுத்தி வாட­கைக்கு பெறப்பட்டது என குறிப்பிடும் பொலிஸார் அதனையும் 35 இலட்சத்துக்கு விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு நாள் தான் சிக்குவேன் என்பதை அறிந்திருந்த உஷா இத்தாலிக்கு செல்லவும் ஆயத்தமாக விசாவையும் செய்து வைத்திருந்துள்ளார். இதனிடையேதான் அவர் பொலிஸ் வலையில் சிக்கியுள்ளார்.

உஷா பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு பகுதியை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தந்திருந்தோம். அதன் இன்னொரு பகுதி இதோ…..

“சேர்…. உண்மையில் இந்த சிக்கலில் இருந்து விடுபட முடியாமல் நான் தவித்து வந்தேன். பின்னணியை தெரிந்து கொள்ள முடியாமல் பைத்தியக்காரியாய் அலைந்தேன்.

எனக்கு தூக்கம் கூட வரவில்லை. நீங்கள் என்னை கைது செய்து எனக்கு பாரிய உதவியை செய்துள்ளீர்கள். எனக்கு இப்போது தான் சுதந்திரமாக தூங்க முடியும் என கூறியவள் பொலிஸ் கூண்டுக்குள் நிம்மதியாக நித்திரைக்கும் சென்றுள்ளார்.

பின்னர் ஹொரணை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட உஷா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எம்.எப்.எம்.பஸீர்

Share.
Leave A Reply

Exit mobile version