இந்த முறை எப்படியாவது 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்ற இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டி ருந்தாலும் அது, நடைமுறைச் சாத்தி யமானதா என்பது சந்தேகம் தான்
றைந்த கால அவகாசத்துக்குள் நடத்தப்படவுள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இறங்கியிருக்கிறது.
இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் போட்டியிட்டது.
போர் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில், வடக்கிலும் கிழக்கிலும், பெரும்பாலான மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க நேரமோ, அதற்கான சூழலோ இல்லாத நிலையில் நடத்தப்பட்ட தேர்தல் அது.
அந்தத் தேர்தலில், கடுமையான அழுத்தங்கள், அரசியல் அதிகாரம் என்பனவற்றுடன் போராடியே, 14 ஆசனங்களைக் கைப்பற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அதற்குப் பின்னர் நடந்த உள்ளூராட்சி சபை, மாகாணசபைத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வெற்றிகளைப் பெற்றிருந்தது.
ஆனால், இம்முறை தேர்தல், கடந்த முறைகளை விட சற்று வித்தியாசமான கோணத்தில், சூழலில் நடைபெறுகிறது.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியிலிருந்த போதெல்லாம், இராணுவ அடக்குமுறைகளும், அரச அதிகாரமும் கோலோச்சிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளை வசீகரிப்பதற்கு கணிசமாகப் போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை, தமிழ்மக்கள் மத்தியில் அப்போதிருந்த தீவிர அரச எதிர்ப்பு அலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால், தற்போது, மஹிந்த ராஜபக் ஷ அரசு இல்லை. அதுபோலவே தீவிர அரச எதிர்ப்பு அலையும் இரு ப்பதாக கருத முடியவில்லை.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு வகையில் சாதகமற்ற நிலை தான். கடந்த காலங்களில் வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக இருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான்.
ஈ.பி.டி.பி.யை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எப்படியும் வடக்கில் அதிகாரத்துக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக் ஷ தனது எல்லா வல்லமைகளையும் தேர்தல்களில் பயன்படுத்தியிருந்தார். ஆனால், அந்த இலக்கை அவரால் ஒருபோதும் அடைய முடிந்திருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருந்தாலும், வாக்களிப்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் கணிசமான இடைவெளிகள் இருந்து வந்தது வரலாறு.
ஆனால், இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியே அரச எதிர்ப்பு, மஹிந்த எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தாமல் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்திருக்கிறது.
அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்கின்ற ஒரு நிலைக்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் வந்திருக்கின்ற சூழலில், தமிழரின் இருப்பு, அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு என்பன விடயத்தில் காத்திரமான வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்திய போதிலும் அதில் வெற்றிகாண முடியவில்லை.
இடைநடுவில் நின்றுபோன அந்தப் பேச்சுக்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் ஒரு பேச்சுக்கான கதவைத் திறந்திருக்கிறது.
அது எந்தளவுக்கு தேர்தலுக்கு முன்னர் சாதகமாக நகரும் என்று கூறமுடியாது.
ஆனாலும், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான தேர்தல் அறிக்கை ஒன்றே எல்லாத் தரப்புகளாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆணை, தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஒரு தேர்தல் அறிக்கையை அது வெளியிட வேண்டியிருக்கும்.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ்மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற ஒரு நிர்வாக கட்டமைப்பு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்பதை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.
அவரது இந்த நிலைப்பாட்டுக்கு வெளியுலக ஆதரவு கிடைத்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதற்கு தமிழ்மக்களின் தெளிவான ஒரு ஆணையை பெற வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது.
இந்தநிலையில் தான், இம்முறை பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து சுட்டிக்காட்டப்படும் என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப் போகும் தேர்தல் அறிக்கை ஒரு கொள்கைப் பிரகடனமாக அமைய வேண்டியது அவசியமாகிறது.
அதற்கு கிடைக்கப்போகும் அங்கீகாரமும் மக்கள் ஆணையும் தான், தமிழர் பிரச்சினைக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய தீர்வுத் திட்டத்தின் அடிப்படையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறுவதாக இருக்கும்.
இந்த தேர்தலில், ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலையைத்தான் எல்லாத் தரப்பினரும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.
ஏனென்றால், ஏற்கனவே நடந்த தேர்தல்களின் மூலம் தமிழ்மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அவர்கள்.
அதுபோலவே, சர்வதேச சமூகமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் முன்னிறுத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப் போகும் மக்கள் அங்கீகாரத்தின் பரிமாணத்தை எல்லாத் தரப்பினரும் உன்னிப்பாகக் கவனிப்பது இயல்பே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து முன்வைக்கப் போகும் விடயங்களுக்கு கிடைக்கப்போகும், மக்கள் ஆணை சர்வதேச கவனத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை திருப்திப்படுத்தும் வகையில் வேட்பாளர் தெரிவு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்த விடயங்களில் விடப்படக் கூடிய எந்தச் சிறு தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிக்கலாம்.
அது மக்களின் ஆணையை பலவீனப்படுத்தும் வகையில் அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மத்தியிலான ஒற்றுமை இந்தக் கட்டத்தில் முக்கியமாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும்.
உள்முரண்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேர்தல் காலத்தில் வருவதுண்டு. அத்தகைய நிலைக்கு இடம்கொடுக்காமல், புத்திசாலித்தனமாகச் செயற்படுவதில் தான், கூட்டமைப்பின் வெற்றி மட்டுமன்றி, அதற்கான மக்கள் ஆணையும் உறுதி செய்யப்படும்.
அதேவேளை இந்த பாராளுமன்றத் தேர்தலில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நிலையை ஏற்படுத்துவதும் கூட கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகத் தெரிகிறது.
அத்தகைய தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாது போனாலும், வெளியில் இருந்து ஆதரவளிப்பதன் மூலம் பேரம் பேசும் திறனை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
இந்த முறை எப்படியாவது 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்ற இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது, நடைமுறைச் சாத்தியமானதா என்பது சந்தேகம் தான்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளது அதற்கு முக்கியமானதொரு பின்னடைவு.
உச்சஅளவில் தமிழ் மக்களின் வாக்களிப்பை உறுதிப்படுத்தினால் கூட, 20 ஆசனங்கள் என்பது மிகவும் கடினமான இலக்கு.
இன்றைய நிலையில், தமிழ்மக்களின் வாக்குகள் பிரிந்து போகாமல் செய்வதும், உச்சஅளவில் அவர்களை வாக்களிக்கச் செய்வதும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமாண்ட வெற்றியை உறுதிப்படுத்தும்.
அதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.