மொழி, மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டி இருமனமும் இணைவது தான் காதல் என்ற விளக்கம் கொடுக்கும் காலம்மாறிப்போய் வெவ்வேறு ஜாதியினர் காதல் கொண்டால் மரணம் தான் பரிசு என்ற காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆம், தமிழகத்தில் அப்படி ஒரு அவலம் தான் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது.

தருமபுரி இளவரசனின் காதல் கதை சுவடு மக்கள் மத்தியில் மறைந்துபோவதற்குள், மீண்டும் ஒரு தலித் இளைஞன் காதலுக்காக பலியாயிருக்கிறான்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கடத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

love_caste_002இதற்கு வேற்று ஜாதி பெண்ணோடு கொண்ட காதல் தான் காரணம், தனது கல்லூரி காதலியான சுவாதியை அழைத்துக்கொண்டு திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார் கோகுல்நாத்.

அங்கு தான் அவருக்கு விதி விளையாடியுள்ளது, இந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பில்லாத மூன்றாம் நபரான யுவராஜ் மற்றும் கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் கோகுல்ராஜ்.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் மோசமான முன் உதாரணம் தமிழகத்தில் ஆகிவிடக் கூடாது. யுவராஜ் போன்றவர்களுக்குப் பின்னால் ஜாதி அமைப்புகள் இருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டியது.

திருச்செங்கோடு பகுதியில் சுற்றித் திரியும் பல காதலர்களை அவர்களுடைய சமூகம் பற்றி விசாரிப்பதுக்கும் தலித்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுக்கும் அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.

தனக்கு பிறந்த ஒரு மகனையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் தாய் சித்ராவின் மனக்கவலையை இந்த ஜாதி தீர்த்துவிடுமா?

காதலை இதுபோன்ற ஜாதி, மத வக்கிரமுடையவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. காதல் காலங்காலமாக கொடிய அடக்குமுறைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறது, காதலுக்கு எந்த காலத்திலும் சக்தி குறைய வாய்ப்பில்லை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னால் தர்மபுரி மாவட்டத்தில் இதுபோன்ற காதல் விவகாரத்திலும் ஒரு தலித் இளைஞனான இளவரசன் பலியானது குறிப்பிடத்தக்கது.

இளவரசன் – திவ்யா காதல் விவகாரம், ஜாதி, அரசியல், வன்முறை எல்லாம் கலந்துவிட்ட ஒரு கரடுமுரடான சம்பவம்.

தலித் இளைஞரான இளவரசன் மேல் காதல் கொண்ட திவ்யா, அவரை திருமணமும் செய்து கொண்டார்.

அதன் விளைவாக திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதால், தலித் சமூகத்தினருக்கும், வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

இந்த கலவரம் ஊடகங்களின் மூலம் வெளிஉலகத்திற்கு வந்தது.

தந்தையின் உயிரிழப்பு, ஜாதிக்கலவரத்தால் மனமுடைந்த திவ்யா, இனி இளவரசனோடு வாழமாட்டேன், என் தாயாரோடுதான் வாழ்வேன் என்று கூறிய மறுநாளே மரணித்தார் இளவரசன்.

இளவரசனின் மரணத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது, ஆனால், இளவரசனின் மரணம் தற்கொலைதான் என பிரேதபரிசோதனையில் தெரியவந்த நிலையிலும், இளவரசன் குடும்பத்தார் அதனை ஏற்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் அது திட்டமிட்ட கொலை என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அது தொடர்பான விசாரணைகள் ஏதும் நடத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை.

காதலிப்பவர்கள் வெவ்வேறு சமூகத்தவர்களாக இருந்தாலும் அது அவர்கள் இரண்டு வீட்டு பிரச்சனையாக மட்டுமே இருந்துவிட்டால், அது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சமூக பிரச்சனையாக மாறாது.

இளவரசன், திவ்யா காதல் விவகாரம் அவர்கள் இருவீட்டார் பிரச்சனை என்பதை கடந்து இரண்டு ஜாதிகளின் கைக்கு மாறியதால்தான், வன்முறை வெடித்தது.

இரண்டு ஜாதிகளுக்கும் அரசியலில் பலமான கட்சிகளும் இருக்கவே அவ்வளவுதான், காதல் பிரச்சினை கடினமான காவிரி பிரச்சனையானது.

இந்திய மாநிலங்களிலேயே முன்னோடியாக தமிழகம்தான் சமத்துவம், பகுத்தறிவில் பெரியாரை போன்ற சீர்திருத்தவாதிகளால் விழிப்புணர்வு அடைந்திருக்கிறது.

காதல், கலப்பு திருமணங்கள் சமுதாயத்தில் உள்ள ஜாதி, மதம் போன்ற பிரிவினைகளை நீர்த்துப்போக செய்ய வல்லதுதான். ஆனால் காதலர்கள் பக்குவப்பட்ட பருவத்தினராக இருப்பது அவசியமானது.

அப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்களும் முரட்டுத்தனமாக கண்டிக்க முற்படுவதில்லை. அவர்கள் சார்ந்த சமூகத்தினரும் தலையிட விரும்புவதில்லை.

படிக்கிற வயதில் ஒரு பெண்ணை காதலிக்க வைத்துவிடுகிற ஒரு ஆணின் தகுதி, அந்த பெண்ணை கடைசி வரை வாழவைக்கும் தகுதியாகவும் அமைகிறது என்று சொல்ல முடியாது.

கலப்பு திருமணமே சமத்துவத்துக்கு சரியான வழி என்று கருதி சில சீர்திருத்தவாதிகள் இளைஞர்களை காதலிக்க முடுக்கிவிட நினைக்கின்றனர்.

கலாச்சாரம், பாரம்பரியம் பேசும் பழமைவாதிகள் அதை தடுத்துவிட நினைக்கின்றனர். இதனால், காதலர்களை வைத்து இரு வேறு கொள்கையாளர்கள் மோதிக்கொள்ளும் போக்கு தமிழகத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.

இவர்களிடமிருந்து காதலர்களையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பது அரசின் கையிலேதான் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version