ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது.
படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இருக்கும் தியேட்டர் ஒன்றில் பாகுபலி படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.
படம் வெற்றி பெற வேண்டி ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் உள்ள பாகுபலி போஸ்டர் முன்பு ஆடு ஒன்றை வெட்டி பலி கொடுத்துள்ளார். ஆட்டை வெட்டியதோடு இல்லாமல் அதன் ரத்தத்தை எடுத்து போஸ்டர் மீது தெளித்துள்ளார் அந்த ரசிகர்.
பாகுபலி.. முதல் நாள் வசூல் ரூ. 30 கோடியைத் தாண்டும் – இது பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு!
சென்னை: இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் பாகுபலி படம், முதல் நாள் முடிவில் 30 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் பாகுபலி, 2 பாகங்களில் இன்று முதல் பாகம் உலகெங்கும் வெளியாகி உள்ளது.
படம் வெளியான எல்லா மாநிலங்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி அனைத்து மொழிகளிலும் படம் தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்டு வெளியில் தொங்கும் காட்சியை இன்று காண முடிகிறது, இதனால் தியேட்டர் அதிபர்கள் பலரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் சுமார் 4000அரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது, இதைத் தவிர அமெரிக்காவில் கிட்டத்தட்ட 118 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமாக படம் வசூலித்து இருக்கிறது என்று கூருகிறார்கள். இந்தியா முழுவதும் பாகுபலி எவ்வளவு அள்ளி இருக்கிறது என்று இன்று இரவு அல்லது நாளைக் காலையில்தான் தெரியவரும்.
எனினும் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருப்பதால், இன்று சுமார் 30 கோடியை பாகுபலி வசூலிக்கலாம் என்று திரையுலகைச் சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் 250 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது, இதே வேகத்தில் சென்றால் வசூலில் போட்ட பணத்தை விட இருமடங்குத் தொகையை பாகுபலி எடுத்து விடும்.