9 வயது சிறுமியொருவரை 14 வயதான சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் யாழில் நடந்துள்ளது.
வேலணை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு 3ம் வட்டாரப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வீட்டிலிருந்து 100 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணற்றில் நீர் எடுக்க சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுமி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த சிறுவன், துவிச்சக்கரவண்டி ஓட்டக்கற்றுத் தருவதாக கூறி, சிறிது நேரம் சிறுமியுடன் சில்மிசம் செய்துவிட்டு, பின்னர் அருகிலிருந்த பாழடைந்த வீடொன்றிற்கு கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளான்.
சிறுமி வீட்டிற்கு மிக தாமதமாக சென்றபோது, தாயார் விசாரித்துள்ளார். நடந்தவற்றை ஒன்றும்விடாமல் சிறுமி ஒப்புவித்துவிட்டார்.
இதனையடுத்து. பெற்றோரால் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சிறுவனும் சிறுமியும் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, குருநகரிலுள்ள சிறுவர், பெண்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த பதில் நீதவான், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். சிறுவனை, சான்றுபெற்ற சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையில் மன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.