எதிர்வரும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அவ்வாறு தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தான் இறங்கப்போவதில்லை என்றும் தான் தேர்தலில் போட்டியிடுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினர் தான் ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை எதிர்த்து கட்சிக்குள் இருந்து போராட போவதாகவும் அனந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பில் அனந்தி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நான் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைய என்றுமே விரும்பியதில்லை. எனது கணவர் மற்றும் அவரைப்போன்று காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தேன்.
கடந்த வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும் எனது முயற்சிக்குப் பலன்கிட்டவில்லை.
எனது கணவரான எழிலன் பெயர் பிரபலமாக இருந்ததாலும் அவர் சர்வதேச மத்தியஸ்தர்களின் அறிவுரையின் பிரகாரம் சரணடைந்ததாலும் நான் அவரையும் அவருடன் இணைந்து காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரையும் கண்டறிவதில் அதீத முயற்சி எடுத்துக்கொண்டதாலும் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டது.
அதற்கிணங்க நானும் தேர்தலில் போட்டியிட்டு எமது மக்களின் அமோக ஆதரவுடன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்கினைப் பெற்று வெற்றிபெற்றதுடன் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கும் உதவிபுரிந்தேன்.
கூட்டமைப்பிற்காக வந்த என்னை இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி செயலாளராக நியமித்தது. தலைமையின் வேண்டுகோளை மறுக்கமுடியாது ஏற்றுக்கொண்டேன்.
இருந்தும் நான் எனக்கென்று அமைச்சுப் பதவியையோ அல்லது வேறு பதவிகளையோ எதிர்பார்க்கவில்லை. நாளாந்தம் மனக்கவலையுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், எனது கணவரின் கனவான தமிழ் தேசியத்திற்கு உதவ முடிந்ததையிட்டு பெருமையடைந்து கொண்டிருந்த வேளையில், தனது தேவை முடிந்தவுடன் கறிவேப்பிலையைப் போன்று என்னைத் தூக்கியெறிவதற்கான தருணத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்பார்த்திருந்தது.
அவர்களின் எதிர்பார்ப்பினை ஈடேற்றுவது போன்று 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.
சிங்கள பௌத்த பேரினவாதிகள் மறைமுகமாக எம்மை மீண்டும் ஏமாற்ற வருகின்றார்கள் என்பதை உணர்ந்துகொண்ட நான் ஜனாதிபதித் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில் பயனில்லை என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன்.
இக்கருத்தில் என்னுடன் அக்கட்சியின் சில மத்திய செயற்குழு உறுப்பினர்களும் உடன்பட்டிருந்தனர். இன்று அம்முடிவு சரி என்று நிரூபணம் ஆகியிருக்கின்றது.
இதனை அக்கட்சியின் தலைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். ஆனால் முன்கூட்டியே கூறிய நானும் அவர்களும் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டோம்.
எனினும், இடைநிறுத்தப்பட்ட ஏனையவர்கள் எத்தகைய விசாரணையும் இன்றி மீளவும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். நான் மட்டும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன். தமிழரசுக் கட்சி பெண்கள்மீது காட்டும் அக்கறை இவ்வளவுதான்.
2014ஆம் ஆண்டு ஜெனிவா சென்று எனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி சர்வதேச நாடுகளிடம் எனது குறைகளை எடுத்துச் செல்வதற்காக நான் சென்றவேளையில், அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ.சுமந்திரன் என்னை பேசவிடாமல் தடுத்தார்.
இதனை நான் அன்றே வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருந்தேன். இருப்பினும் எனது நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் துணையுடன் நான் எனது பணியினைச் செய்திருந்தேன்.
இதன் மூலம் தமிழரசுக் கட்சியினர் காணாமல் போகச் செய்யப்பட்டோர்மீது காட்டும் அக்கறையைப் புரிந்துகொள்ள முடியும்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வழக்காடுவதற்கு கட்சி என்ற வகையில் நிதியில்லை என்று அதே பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாவில் தெரிவித்ததாக எனது நண்பர்கள் என்னிடம் கூறினர்.
அந்தக் கட்சியினர் அரசியல் கைதிகளின் விடுதலைமீது காட்டும் கரிசனை இதுதான். இவ்வளவு குறைகளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி எனது குரலுக்கு வலுசேர்க்க வேண்டும் என்று எனது நலன் விரும்பிகளும் நண்பர்களும் காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரின் உறவினர்களும் வேண்டினர். அதற்கமையவே நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தேன்.
ஆனால் நான் போட்டியிட்டால் தங்களது ஆசனக் கனவு தகர்ந்துவிடும் என்று தமிழரசுக் கட்சியினரில் சிலர் அஞ்சினர். இதற்காகவே ஏற்கனவே என்னை கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருந்தனர் என்பது இப்பொழுது நிரூபணமாகியிருக்கின்றது.
இருப்பினும் எனது குரல் இலங்கை பாராளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக வேறு கட்சியிலோ அல்லது சுயேட்சையாகவோ களமிறங்க முடிவெடுத்தேன்.
தேசியத்தின்மீது அக்கறை கொண்ட நண்பர்களும், நலன் விரும்பிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஜனநாயக விரோத செயலினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் நான் எனது முடிவை மறுபரிசீலனை செய்து போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளேன்.
சில ஊடகங்கள் நான் எனது குடும்பச் சூழல் காரணமாக விலகுவதாக கற்பனையில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதற்காக அவர்கள் பயன்படுத்திய சொற்கள் என்மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்திருந்தது என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.