சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது.
ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள்.
இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய வீரர்கள் ஆர்ஜென்ரீனா அணியின் ஏனைய வீரர்கள் இடைவெளிகளை பயன்படுத்தாதவண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் விபரத்தை பார்த்த போது, கடந்த வருடம் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி நினைவுக்கு வந்தது.
தமிழர்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட கஜேந்திரகுமாருக்கும், தமிழர்கள் ஒரு சிறுபான்மையினம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான போட்டி பரபரப்பாகவும் பரவலாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே, வடமராட்சியைச் சேர்ந்த மூவரை யாழ். தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது கூட்டமைப்பு.
இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள சுமந்திரனை வெற்றிபெற வைப்பதற்கான ஒரு உத்தி என்று கருதப்படுகிறது.
ஆனால், ஆட்ட நடுவர்கள் நீதி தவறாது செயற்பட்டால், எந்த முற்றுகையையும் தகர்த்து கஜேந்திரகுமார் ஒரு கோல் போடுவார் என்று யாழிலுள்ள நண்பர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
கஜேந்திரகுமாரை முற்றுக்கைக்கு உட்படுத்தி சுமந்திரனை வெல்ல வைக்க முயற்சிக்கும் கூட்டமைப்பு தீவகத்தை கைவிட்டு விட்டதா, இல்லை டக்ளஸ் தேவானந்தா வென்றாலும் பரவாயில்லை, கஜேந்திரகுமார் வெல்லக் கூடாது என்று செயற்படுகிறதா என்று ஊடக நண்பர் ஒருவர் கேட்கிறார்.
இது நியாயமான கேள்வியே. தமது வேட்பாளர் ஒருவர் வெல்ல வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு வகுத்துள்ள உத்தியை விமர்சிக்கவில்லை. ஆனால், கஜேந்திரகுமார் வெல்லக்கூடாது என்பதற்காக தீவகத்தில் கோட்டைவிட்டுள்ள கூட்டமைப்பின் உத்தி விமர்சனத்திற்குரியது என்பதில் குறித்த ஊடக நண்பர் தெளிவாக உள்ளார்.
சுமார் இரு தசாப்தகாலமாக ஈ.பி.டி.பியின் இரும்புக் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தீவகத்தில், ஈ.பி.டி.பியை தோற்கடித்து ஒரு வரலாற்றை புரிந்த தீவக மக்களை கூட்டமைப்பு கைவிட்டு விட்டதென்று பிரான்ஸில் தீவக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஒன்றில் அங்கம் வகிக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமாக வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கும் இடங்களிலும் கடுமையான போட்டிகளை ஏற்படுத்தக் கூடிய கூட்டமைப்பு வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்ற கரிசனையும் நிலவுகிறது. இது, ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உண்டு என்று பரவும் செய்திகளை வலுப்படுத்துகிறது.
அது உண்மையென்றால், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியும், ஐக்கிய தேசிய கட்சியும் வென்றாலும் பறவாயில்லை, ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லக்கூடாது என்பதற்காய், கூட்டமைப்பு என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
நிர்மானுசன் பாலசுந்தரம்