ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இன்று துவங்கிய புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புஷ்காருலு காட் பகுதியில் புஷ்கரம் திருவிழா இன்று அதிகாலை துவங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்கரம் என்பது கும்பமேளா போன்றது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கோதாவரி ஆற்றுப் பகுதியில் நடக்கும் திருவிழா இது. இந்நிலையில் இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியில் பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்றனர்.
14-1436858241-rajamundry-stampede466
அப்போது ஒரு வாயிலில் ஏராளமான பக்தர்கள் முந்தியடித்துச் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 27 பேர் பலியாகினர், 60 பேர் காயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை ராஜமுந்திரியில் தனது மனைவி, மகனுடன் புனித நீராடிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடந்த சம்பவம் கேட்டு மீண்டும் அங்கு விரைந்துள்ளார். மேலும் அங்கு மீட்பு பணியை துவங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூட்டநெரிசலில் பலியானவர்களின் உடல்கள் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் திருவிழாவின்போது 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். இந்த திருவிழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு குருபகவான் சிம்மராசியில் பிரவேசித்து கோதாவரியில் பயணிப்பதால் இது மகா கோதாவரி புஷ்கரம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கோதாவரி புஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடியும், ஆந்திர அரசு ரூ.1, 650 கோடியும், மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளது.
பக்தர்கள் புனித நீராட கோதாவரி ஆற்றில் 279 குளிக்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜமுந்திரியில் மட்டும் பக்தர்கள் குளிக்க 17 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புஷ்கரம் விழாவையொட்டி தெலுங்கானாவில் ஆதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல், கரீம் நகர், கம்மம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினர். பக்தர்கள் பரிகார பூஜை செய்ய ஏதுவதாக அரசு சார்பில் பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version