எம்.எஸ்.விஸ்வநான் இயற்பெயர், மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன். கேரளா பாலக்காடு அருகில் உள்ள இலப்புள்ளி கிராமத்தில், 1928 ஜூன் 24ம் தேதி மலையாள குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை சுப்பிரமணியன். தாய் நாராயணி குட்டியம்மாள். எம்.எஸ்.வி.யின் மனைவி ஜானகி அம்மாள், சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என 4 மகன்கள் மற்றும் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் யாரும் இசைத்துறையில் ஈடுபடவில்லை. 1953ல் வெளியான ‘ஜெனோவா’ படத்தில் முதன்முறையாக 4 பாடல்களுக்கு இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். அவருடன் இணைந்து ஏராளமான படங்களுக்கு இசையமைத்த டி.கே.ராமமூர்த்தி, சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார்.

4 வயதில் தந்தை இழந்த எம்.எஸ்.வி., கண்ணனூரில் தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். மேற்படிப்பு படிக்காத அவர், நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றார்.

13வது வயதில் மேடைக் கச்சேரி நடத்தினார். பிறகு இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் இசைக்குழுவில் இணைந்து ஹார்மோனியம் வாசித்தார்.

அவரது நண்பர் டி.கே.ராமமூர்த்தி, வயலின் வாசித்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக, 30 வயதில் சி.ஆர்.சுப்பாராமன் மரணம் அடைந்தார்.

அவரது திடீர் மரணத்தைத் தொடர்ந்து, முழுமை பெறாமல் இருந்த ‘தேவதாஸ்’, ‘சண்டி ராணி’, ‘மணமகள்’ ஆகிய படங்களை எம்.எஸ்.வி., டி.கே.ராமமூர்த்தி இருவரும் இரவு, பகலாக இசையமைத்துக் கொடுத்தனர்.

‘பணம்’ என்ற படத்திற்கும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர். அதன் மூலம் இந்த இரட்டையர்கள் தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம் செய்ய ஆரம்பித்தனர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை, சுமார் 700 படங்களுக்கு மேல் இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

அதன் பிறகு எம்.எஸ்.வி மட்டும் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.

எம்.எஸ்.வி., இளையராஜா இருவரும் ‘மெல்ல திறந்தது கதவு’, ‘இரும்பு பூக்கள்’, ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘செந்தமிழ் செல்வன்’, ‘விஷ்வ துளசி’ ஆகிய படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர்.

1995ல் சத்யராஜ் நடித்த ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்தில் எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி மீண்டும் இணைந்து இசை அமைத்தனர்.

1963ம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் சித்ராலயா கோபு முன்னிலையில், சிவாஜி கணேசன் மூலம் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

கவிஞர் கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் எம்.எஸ்.வி. ‘கண்ணகி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த எம்.எஸ்.வி., ‘காதல் மன்னன்’ ‘காதலா காதலா’ என பல படங்களில் நடித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தான ‘நீராரும் கடலுடுத்த…’ பாடலுக்கு இசை அமைத்தவர் எம்எஸ்வி. வி.குமார், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்சங்கர்ராஜா, பரத்வாஜ், ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் எம்.எஸ்.வி பாடியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 1951ல் தொடங்கி 1981 வரை, 30 ஆண்டுகள் எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் நடந்தது.

கலைமாமணி, ‘திரையிசை சக்ரவர்த்தி’ மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என பல விருதுகள் பெற்றிருக்கிறார். கடவுள் பக்தி கொண்ட எம்.எஸ்வி. பேச்சுக்கு நடுவில் ‘முருகா… முருகா’ என உச்சரிப்பார்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் அவர் பாடிய ‘சம்போ… சிவசம்போ’ பாடல் பிரபலம். இசையமைக்க வருவதற்கு முன், சினிமா கம்பெனிகளில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார் எம்.எஸ்.வி.

‘புதிய பறவை’ படத்தில் ‘எங்கே நிம்மதி…’ பாடலை, 300க்கும் மேற்பட்ட இசைக்கருவி கொண்டு இசை அமைத்தார்.

‘பாகப்பிரிவினை’ படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு…’ பாடலுக்கு 3 கருவி மட்டும் பயன்படுத்தி இசையமைத்தார். ‘சிவந்த மண்’ல் ‘பட்டத்து ராணி’ எகிப்து நாட்டு இசை பாணியிலும், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலை பெர்சியன் இசை பாணியிலும், ‘பன்சாயி காதல் பறவைகள்’ பாடலை ஜப்பான் இசை பாணியிலும், லத்தீன் ‘யார் அந்த நிலவு’ பாடலை லத்தீன் இசையிலும், ‘கண் போன போக்கிலே கால் போகலாமா’ பாடலை ரஷ்ய இசையிலும் வடிமைத்தார், ‘முத்தமிடும் நேரமெப்போ’ பாடலை மெக்சிகன் இசையிலும் வடிவமைத்தார்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற ‘முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடத்தில் உருவாக்கினார்.

அவர் கடைசியாக இசையமைத்த படம், ‘சுவடுகள்’. அதற்கு முன் யுவன்சங்கர்ராஜாவுடன் சேர்ந்து ‘தில்லு முல்லு’ ரீமேக் படத்துக்கு இசையமைத்தார்.

திரையுலகம் அஞ்சலி: நடிகர்கள் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், இசையமைப்பாளர் கணேஷ், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உள்பட திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.எஸ்.வி. மறைவையொட்டி நாளை சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது என பெப்சி அறிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version