யாழ். ஊர்காவற்றுறை புங்குடுதீவுப் பிரதேசத்தில் மாணவி வித்தியா துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படமுன்னர் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தி சிகரட் புகைத்துள்ளதாகவும் அந்த இடத்திலிருந்து டி.என்.ஏ. கூறுகளைப் பெற்றக்கொள்வதைத் தடுக்க அண்மையில் அவ்விடம் டோசர் இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அனுரடீசில்வாவினால் மன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
(மாணவி வித்தியாவின் படுகொலையின் பின் தீவகத்தில் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! http://www.allaiyoor.com/?p=1966)
அதுதொடர்பில் விசேட விசாரணையொன்று பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோரப்பட்ட நிலையில் கைதாகியுள்ள 9 சந்தேகநபர்களையும் மேலும் ஒரு மாத காலத்திற்கு நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்க புலனாய்வுப் பிரிவினரின் விண்ணப்பத்திற்கமைய நீதிமன்றம் அனுமதியளித்தது.
அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசிகள், ரெப் ஆகியவற்றை மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பவும் ஏனைய தடயங்கள் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் உள்ளிட்டவர்களின் அறிக்கையைப் பெறவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்குத் தொடுநர் சார்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சண்டிமல் ஆஜராகியிருந்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரான வித்தியாவின் குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அனுர டீ சில்வா, சிந்தக்க அமரசிந்த, தனந்த தேசப்பிரிய ஆகியோருடன் சட்டத்தரணி அம்பிகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் எவரும் மன்றில் ஆஜராகியிராத நிலையில் அவர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதுவரை பாதிக்கப்பட்ட வித்தியா குடும்பம் சார்பில் மன்றில் ஆஜராகி வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ.தவராசா நேற்று மன்றில் ஆஜராகவில்லை.
அவர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டதாக அறியமுடிந்தது. பிரபல வர்த்தகர் என அறியப்படும் ஒருவரின் பின்னணியூடாக தொடர்ச்சியான இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வந்தமையால் அவர் இவ்வாறு விலகிக்கொண்டதாக அறியமுடிந்தது.
(வித்தியாவின் இவ் வழக்கில் நீதியை நிலைநாட்டுவார் என நம்பியிருந்த புங்குடுதீவு மக்களுக்கு, வர்த்தகர் ஒருவரின் இடையூறால் தான்?? கே.வி.தவராசா விலகியுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.)
சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்
வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வுப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சுனில் சண்டிமல் மேலதிக விசாரணை அறிக்கையை நீதிவான் லெனின்குமாரிடம் சமர்ப்பித்ததுடன் சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கலுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலதிக அறிக்கைக்கு மேலதிகமாக மாணவி வித்தியாவின் இரத்த மாதிரி, சந்தேக நபர்களது இரத்த மாதிரி ஆகியன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை, தடயப் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பிலான மேலும் சில ஆவணங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
நேற்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் இறுதித் தினம் என்பதால் சந்தேகநபர்களுக்கு உரிய பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் பாதுகாப்பு குறைபாட்டுடன் அவர்களை மன்றில் ஆஜர்படுத்த அழைத்து வந்தால் மீண்டும் யாழ். பிரதேசத்தில் அமைதியின்மையொன்று ஏற்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அவர்களை அழைத்து வரவில்லை என அவர் நீதிவானுக்கு விளக்கமளித்தார்.
அத்துடன் சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 30 நாட்களுக்கு தடுப்புக்காவல்
இதனையடுத்து தனது கையிலிருந்த பாதுகாப்பு அமைச்சின் விசேட தடுப்புக்காவல் உத்தரவுப் பத்திரத்தை நீதிவான் லெனின் குமாரிடம் சமர்ப்பித்த உபபொலிஸ் பரிசோதகர் சுனில் சண்டிமல் சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் மேலும் ஒரு மாதத்திற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதனை மன்றில் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் சந்தேகநபர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சஷிந்தரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் குஷாந்தன், பழனிரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரை கடந்த ஜுன் 15ஆம் திகதி பெற்றுக்கொண்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பில் மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனால் மேலும் 30 நாள் சந்தேகநபர்களை தடுத்துவைத்து தொடர்ந்து விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளின் வாதம்
குற்றப்புலனாய்வுப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மேற்படி தமது நிலைப்பாட்டை நீதிவானுக்கு தெரியப்படுத்தியதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பான சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்தனர்.
இதன்போது வாதத்தை முன்வைத்தார் சட்டத்தரணி இந்திரதிஸ்ஸ, வித்தியா படுகொலை விசாரணைகளை கடந்த ஜுன் முதலாம் திகதியிலிருந்து புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாக அறிகிறேன்.
அவர்கள் சடலம் காணப்பட்ட இடத்தை சென்று பரிசோதித்ததாகவும் அறிகிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை டீ.என்.ஏ. சாட்சிகள் மிக முக்கியமானவை.
மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட முன்னர் அவர் கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு அவர் கடத்தப்பட முன்னர் சந்தேகநபர்கள் அனைவரும் குறித்த வழியில் ஒன்றுகூடி காத்திருந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் ஒன்றுகூடியபோது சிகரட் புகைத்துள்ளனர். அத்துடன் மதுபானம் அருந்தியுள்ளனர். அவ்வாறு அவர்கள் நடந்துகொண்டிருப்பின் அவர்கள் ஒன்றுகூடியதாகக் கூறப்படும் இடத்தில் சிகரட் எச்சங்கள், மது அருந்த பயன்படுத்திய கிண்ணங்கள் உள்ளிட்டவை அங்கு கைவிடப்பட்டிருந்திருக்கும்.
அப்படியானால் அந்த இடத்தை பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் சோதனை செய்து சிகரட் எச்சங்களையும் மதுக்கிண்ணங்களையும் கைப்பற்றியிருப்பின் அதிலுள்ள டீ.என்.ஏ. மூலக்கூறுகள் இந்த வழக்கிற்கு மேலும் உறுதுணையாக இருந்திருக்கும்.
எனினும் அந்த ஆதாரங்களை அல்லது தடயங்களை இதுவரை விசாரணைப் பிரிவினர் கைப்பற்றவில்லை.
இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் ஒன்றுகூடியதாக கூறப்படும் இடம் டோசர் இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது வித்தியாவின் அண்ணனும் பிரதேசத்தின் கிராமசேவகரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில் உரிய விசாரணையொன்று அவசியமாகும். இதுதொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிராமசேவகரிடம் வாக்குமூலம் பதிவுசெய்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நாமும் அவர்களுக்கு தகவல்களை வழங்க தயாராகவே உள்ளோம் என்றார்.
நீதிவானின் வினவல்
இந்த வாதத்தை தொடர்ந்து நீதிவான் லெனின் குமார் இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடமும் மன்றில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியிடமும் இது தொடர்பில் வினவினார்.
எனினும் அவ்வாறான எந்த தகவலும் முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை என அவர்கள் நீதிவானிடம் தெரிவித்தனர். எனினும் தமக்கு அது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்தரணிகள் எதிர்த்து கருத்து முன் வைத்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு ஒப்புதல்
இதனையடுத்து நீதிவான் எஸ்.லெனின் குமார் அது தொடர்பில் கிராம சேவகரிடம் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்று விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என ஆலோசனை முன் வைக்கும் போதே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பின் வருமாறு நீதிவானிடம் உறுதி வழங்கினார்.
இப்போது மன்றில் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிகள் முன் வைக்கும் விடயம் குறித்து இன்றைய தினமே நான் உடனடியாக விசாரணை அதிகாரிகளை தெளிவுபடுத்துகின்றேன்.
அது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கொழும்பு பிரதான நீதிவானுக்கு தொலை நகல் அனுப்பிய ஊர்காவற்றுறை நீதிவான்
இதனையடுத்து சந்தேக நபர்களை பரிசீலனை செய்யுமாறு வேண்டி கொழும்பு பிரதான நீதிவானுக்கு தொலை நகல் ஒன்றினை அனுப்பிய நீதிவான் லெனின் குமார் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கோரப்பட்ட மேலதிக தடுப்புக் காவல் உத்தரவுக்கும் அனுமதியளித்தார்.
தடுப்புக் காவல் உத்தரவு தொடர்பில் சலசலப்பு
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பான வித்தியா குடும்பம் சார்பில் சுயேச்சையாக மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அம்பிகா, மேலதிகமாக இன்னும் 30 நாட்களுக்கு சந்தேக நபர்களை தடுத்து வைப்பது குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன் அது விசாரணையை இழுத்தடிக்கும் செயற்பாடா என வினவினார்.
ஏனைய சட்டத்தரணிகள் பாய்ச்சல்
இதனையடுத்து மன்றில் வித்தியா குடும்பம் சார்பில் நேற்று ஆஜராகியிருந்த ஏனைய சட்டத்தரணிகள், சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என வினா எழுப்பியதுடன் அதனை புரிந்துகொள்ள முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
திருப்தியின்றேல் உயர் நீதிமன்றை நாடலாம்
இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிவான் எஸ்.லெனின்குமார் தான் விசாரணையாளர்களான புலனாய்வுப் பிரிவினர் முன் வைக்கும் மேலதிக அறிக்கையை வைத்தே முடிவுகளை எடுப்பதாகவும் விசாரணைகளில் திருப்தி இன்றேல் அல்லது சந்தேகம் நிலவினால் உயர் நீதிமன்றை நாட முடியும் என கூறினார்.
இதனையடுத்து சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், டெப் ஆகியவற்றை மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பீடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்ப ஒப்புதல் அளித்த நீதிவான் ஏனைய இரத்த மாதிரிகள் தடயங்கள் உள்ளிட்டவற்றையும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் உள்ளிட்டோருக்கு சமர்ப்பித்ததற்கான ஆவணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைகளையும் மன்றில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
மரணவிசாரணைத் தீர்ப்பு விரைவில்
அத்துடன் கடந்த தவணையின் போது வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் அறிக்கை தயார் நிலையில் உள்ளதாகவும் அதன் தீர்ப்பை விரைவில் அறிவிப்பதாகவும் நீதிவான் எஸ்.லெனின் குமார் திறந்த மன்றில் அறிவித்தார்.
அத்துடன் 30 நாள் தடுப்புக் காவல் முடிவடைந்ததும் சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
(யாழிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)
வித்தியா படுகொலை வழக்கில் மறைக்கப்படும் உண்மைகள்
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில், திடீரென அதேமாதம் 31 ஆம் திகதி கே.வி. தவராசா தலைமையில் புங்குடுதீவில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, வித்தியா படுகொலை செய்யப்பட்ட பிரதேசத்தை அன்மித்த பகுதிகளில் ‘டோசர்’ கொண்டு அழிக்கபட்டதற்கான ஆதாரங்களும், சான்றுகள் உள்ளதாக நமக்கு அனப்பிவைக்கப்பட்ட ஆதாரங்கள் இவை..
1.வித்தியா வழக்கில் யார் கூறுவது உண்மை?? வித்தியா வழக்கில் இருந்து கே.வி. தவராசா விலகியதன் உண்மை காரணம் என்ன?
2. அவசரம் அவசரமாக கே.வி. தவராசா தலைமையில் புங்குடுதீவில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் என்ன??
3. வித்தியா படுகொலை வழக்கில் துவாரகேஸ்வரன் மூக்கை நுழைப்பதேன்?
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பான தடயங்களை அழிக்க முயற்சி
வருவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், வித்தியா படுகொலை வழக்கில் தாங்களாக வந்து தலையை காடடிய அரசியல் வாதிகள் காணாமல் போய்விடுவாகள்.
அதன் பின்னராவது.., வித்தியாவின் ஆன்மாவாவை சாகடிக்காமல் அரசியல்வாதிகள் விட்டுவைத்தால் போதும்.
புங்கையூர்- வரதன்