புதுடெல்லி: ஈவ்டீசிங் புகார் கூறிய மாணவியை, இரண்டு வாலிபர்கள் சேர்ந்து 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியின் ஆனந்த் பார்பாத் பகுதியை சேர்ந்த மாணவி மீனாட்சி, நேற்றிரவு 7.30 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
அப்போது, மாணவியை வழிமறித்த இரண்டு வாலிபர்களில் ஒருவரான ஜெய்பிரகாஷ் என்பவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அங்கிருந்து பயந்து ஓடிய மாணவியை இரண்டு பேரும் விடாமல் துரத்தி, 35 முறை கத்தியால் குத்தி ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி மீனாட்சி உயிரிழந்தார்.
உயிர் பிழைக்க போராடிய மாணவிக்கு யாரும் உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் மட்டும் மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரையும் ஜெய்பிரகாஷ் கத்தியால் குத்தியுள்ளார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “மாணவி ஒருவர் வாலிபர்களிடம் இருந்து உயிர் பிழைக்க என்னுடைய கட்டடத்திற்கு ஓடிவந்தார்.
அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை கத்தியால் குத்தினர். மாணவியை தொடர்ந்து துன்புறுத்தினர்” என்று கூறியுள்ளார்.
மாணவியின் சகோதரர் கூறுகையில், சம்பவம் நடைபெற்றபோது எனது சகோதரிக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. சுற்றி இருந்தவர்கள் உடனடியாக முன்வந்திருந்தால் மீனாட்சியை காப்பாற்றி இருக்க முடியும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவி மீனாட்சி, கடந்த 2013ஆம் ஆண்டே தன்னை கேலி செய்ததாக, அந்த இரண்டு வாலிபர்கள் மீதும் டெல்லி காவல்துறையினரிடம் மீது புகார் கூறியுள்ளார்.
மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “காவல்துறையினர் இதுகுறித்து ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறை இதுவரை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள இரண்டு வாலிபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் மாணவி ஒருவர் 35 முறை கத்தியால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.