உயிரைக் காக்கவென நாட்டை விட்டு வெளியேறி பூகோள வரைபடத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தஞ்சம் புக தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்தது கறுப்பு ஜூலை என்றால் அது மிகையல்ல.

1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் பலியானதைத் தொடர்ந்து, தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலே கறுப்பு ஜூலை நாளாக நினைவுகூரப்படுகிறது.

உச்சகட்டமாக கொழும்பில் நடத்தப்பட்ட வெறித்தாக்குதல் நாடு முழுவதிலும் அரங்கேறியது.

தமிழர் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

உடல்கள் நொறுங்கின, உறவுகள் சிதைந்தன, சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

கறுப்பு ஜூலையின் அகோரத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் பூமணியும் ஒருவர்.

திருகோணமலையில் இடம்பெற்ற கலவரத்தில் தாய் தந்தையரை இழந்த சோகத்தை நெஞ்சில் தாங்கியபடியே சகோதரர்களுடன் கடல் மார்க்கமாக கொக்குத்தொடுவாயில் தஞ்சம் புகுந்தார் அவர்.

கறுப்பு ஜூலை கலவரம் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பூமணியின் குடும்பத்தை நிழலாகப் பின்தொடர்ந்தது உயிர்ப்பலிகள்.

1996 ஆம் ஆண்டு கடற்தொழிலுக்குச் சென்ற தனது சகோதரர் காணாமற்போனதுடன், சகோதரியின் கணவனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினார் பூமணி.

கலவரத்தின் கோரத்தால் தனது உறவுகளை இழந்த பூமணியை யுத்தம் நிலைகுலையச் செய்தது.

மேலும் இரண்டு சகோதரர்களும் யுத்தத்தால் உயிரிழக்க தனிமரமானார் பூமணி.

கலவரத்தின் கோரத்தை கண் முன் நிறுத்திய கறுப்பு ஜூலை பூமணி போன்றோருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ரணம்.

Share.
Leave A Reply

Exit mobile version