புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்த குறித்த பெண் தங்கியிருந்ததாக கூறப்படும் செட்டியார் தெருவில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் உள்ள நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
சுமர் ஒன்பது நாட்கள் அவர் பிறிதொரு ஆடவருடன் அந்த தங்கும் விடுதியில் ஒன்றாக இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்துள்ளதாகவும் இறுதியாக அவர் ஒன்பது நாட்களுக்கு முன்னர் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடுதிக்கு பிறிதொரு ஆணுடன் வந்து தங்கியிருந்துள்ளதாகவும், குறித்த நபரை தற்போது பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான பொறுப்பு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் (சீ.சீ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேல் மாடியில் இருந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அந்த பெட்டியைக் குறித்த நபர் சுமந்து வருவதுடன், பதிவுகளை முடித்துகிகொண்டு பெட்டியுடன் வெளியே வந்து அதனை இழுத்துக்கொண்டு செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இதனைவிட அவர் அப்பெட்டியுடன் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதிவுகளையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சேகரித்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கணவன் வெளிநாடொன்றில் வேலை செய்து வருகின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளி நாட்டுக்கு சென்றுள்ள அவர் இதுவரை நாடு திரும்பவில்லை. கார்த்திகாவுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ள
நிலையில் அவர் கார்த்திகாவின் தாயாரி டமே வளர்ந்து வருவதாக பொலிஸார் தெரி விக்கின்றனர்.
சடலத்தை அடையாளம் காட்ட வட்டுக்கோட்டையில் இருந்து கார்த்திகாவின் தாயார் நேற்று இரவு கொழும்பு நோக்கி வந்துள்ள நிலையில் இன்று கார்த்திகாவின் சடலம் மீது பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
கார்த்திகா இறுதியாக தங்கியிருந்த செட்டியார் தெரு தங்குமிடத்தில் இருந்த சீ.சீ.டீ.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளும் விசாரணைக் குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் சந்தேக நபரையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கார்த்திகாவுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்திகாவின் தாயாருக்கு தகவல்கள் தெரிந்திருப்பதாக கூறும் பொலிஸார் முறைதவறிய காதல் விவகாரம் ஒன்றூடாக இந்த கொலை இடம்பெற்றிருக்க வேண்டும் என சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் ஒரு வாரத்துக்கு முன்பு கார்த்திகாவே குறித்த தங்குமிடத்தில் அறை எடுத்து தங்கியுள்ளதுடன், பின்னரேயே கர்த்திகாவை சந்திக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு குறித்த சந்தேக நபர் அங்கு வந்துள்ளதுதும் இதன் போது அவிருவரும் ஒரே அரையில் தங்கியுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை 12.15 மணிக்கும் அதிகாலை 12.18 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த நபர் குரித்த பெட்டியுடன் தங்குமிடத்திலிருந்து வெளியேறுவது சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பின் அது 28 ஆம் திகதி பின்னிரவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் பயணப் பெட்டியானது ஆள் நடமாட்டம் இல்லாத அதிகாலை வேளையி பஸ் தரிப்பிடத்தில் கைவிடப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகாவை கொலை செய்த நபர் அவரை பெட்டியில் இட்டு தூரப் பிரதேச பஸ் வண்டியொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்கோடு பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் அதிக நிறை காரணமாக 15 ஆம் இலக்க அனுராதபுரம் – கொழும்பு பஸ் தரிப்பு இடத்துக்கு அருகே அந்த பெட்டியின் சக்கரம் ஒன்று உடைந்துள்ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்வதில் எற்பட்ட சிரமத்தையடுத்து அந்த பஸ் தரிப்பு நிலையத்திலேயே சந்தேக நபர் பெட்டியை விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெரும்பாலும் யாழ். நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியொன்றில் அப்பெட்டியை கைவிட்டு செல்வது சந்தேக நபரின் நோக்கமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பயணிகள் பொதியொன்றுக்குள் இருந்து அரை நிர்வாணமான நிலையில் கார்த்திகாவின் சடலம் நேற்று முன் தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தின் நடைபாதை வியாபாரி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம்கைவிடப்பட்டிருந்த குறித்த கறுப்பு நிறத்தினாலான 3 அடி நீளம் 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பெரிய பொதியினை திறந்து பார்த்த பொலிஸார் இந்த சடலத்தை மீட்டனர்.