யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்­குன்­ற­னாரின் அந்த வரியை ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் முழங்­கிய அந்த தலை­ம­கனார்…

3000 ஆண்­டு­கால தமிழ் வர­லாற்றை உலக அரங்கில் ஏற்­றி­வைத்த பெரு­ம­கனார்.

அந்த உரையில், சங்­கத்­த­மி­ழி­னு­டைய உன்­ன­தத்தை, பழந்­த­மிழர் நாக­ரி­கத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமி­ழரின் கோட்­பாட்டை எடுத்­து­ரைத்த தமிழ் மகனார்.

தமிழ் இனத்­துக்கும், தமிழ் மொழிக்கும், உல­க­ளா­விய பெருமை சேர்த்த அப்­பெ­ரு­ம­கனார்…

விண்ணை அளந்து பார்த்த அந்த திரு­ம­கனார் இன்று விண்­ணோடு சங்­க­மித்­து­விட்டார்.

முதல் ரொக்கெட் 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி விண்ணில் ஏவப்­பட்­டது. நாஸாவில் தயா­ரிக்­கப்­பட்ட அது நைக் அபாத் என்று சொல்­லப்­படும் சவுண்டிங் ரொக்கெட்.

தேவா­லயக் கட்­ட­டத்தில் அந்த ரொக்­கெட்டை அசெம்பள் செய்து ஒரு லொறியில் ஏற்றி ஏவு­த­ளத்­திற்கு கொண்டு வந்தோம். இந்த லொறி­யையும் கைகளால் இயக்­கக்­கூ­டிய ஹைட்­ரொலிக் கிரே­னையும் தவிர எங்­க­ளுக்கு வேறு எந்த வழியும் இல்லை.

கிரேன் மூலம் ரொக்­கெட்டை லொறி­யி­லி­ருந்து அகற்றி ஏவு­க­லத்தில் கிட்­டத்­தட்ட பொருத்தும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம்.

அந்தச் சமயம் பார்த்து ரொக்கெட் ஒரு பக்­க­மாக சாய ஆரம்­பித்­தது. கிரேனில் ஹைட்­ரொலிக் இயக்­க­மு­றையில் கசிவு ஏற்­பட்­டதால் இந்தக் கோளாறு. ரொக்­கெட்டை ஏவ­வேண்­டிய மாலை 6 மணி என்ற காலக்­கெடு வேறு வேக­மாக நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது… ஆனால் கிரேனோ…

இப்­படி தனது முதல் ரொக்கெட் அனு­ப­வத்தை அக்­கினிச் சிறகு என்ற சுய­ச­ரி­தையில் விவ­ரித்­துக்­கொண்­டு­போ­கிறார் இந்தி அணுத் தொழில்­நுட்­பத்தின் தந்தை, இந்­தி­யாவின் சக்­தி­மிகு குடி­ய­ரசுத் தலைவர் மக்­களின் ஜனா­தி­பதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

நாட்­டுக்­காக உழைத்த மாம­னிதர், மாண­வர்­க­ளுக்­கா­கவே தன் இறு­திக்­கா­லங்­களை செல­விட்ட அப்துல் கலாம் இறு­தி­வரை லெள­கீக வாழ்க்­கை­யி­லி­ருந்து ஒதுங்­கியே இருந்தார்…

சரிதான்… திரு­மணம் செய்­து­கொண்டு பிள்­ளை­களை பெற்­றி­ருந்தால். அவர் ஒன்று இரண்டோ பிள்­ளை­க­ளுக்கு மட்­டும்தான் தந்­தை­யாக இருந்­தி­ருப்பார்.

ஆனால் இப்­போதோ அனைத்துப் பிள்­ளை­க­ளுக்கும் அவர் தந்­தை­யா­கி­விட்டார்.

ஆவுல் பக்கீர் ஜெயு­னுல்­லா­புதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர்.

அக்­டோபர் 15ஆம் திகதி,1931இல் ராமேஸ்­வ­ரத்தில் பிறந்தார் அப்துல் கலாம். தந்தை ஜெயு­னுல்­லா­புதீன், தாய் ஆஷி­யம்மா.

தந்­தையார் மிகப்­பெ­ரிய செல்­வந்­தரும் இல்லை. மெத்தப் படித்த மேதையும் இல்லை. அவ­ரி­ட­மி­ருந்­தது எல்­லாமே அனு­ப­ஞானம் மட்­டுமே. அந்த அனுப ஞானத்தை அப்­ப­டியே தன் மக­னுக்கு மொழி­பெ­யர்த்­துக்­கொ­டுத்­தது மட்­டும்தான் தந்­தை­யாக அவர் செய்­தது.

அப்துல் கலாமின் தந்­தையார் படகு கட்டும் தொழில் செய்­தவர். கலாம் படிக்கும் காலத்தில் செய்­தித்தாள் போட்டும், புளி­யங்­கொட்டை விற்றும் தான் தன்­னு­டைய படிப்புச் செலவை பார்த்­துக்­கொண்டார் கலாம்.

இறு­தி­வரை அவர் நேர்மை தவ­றி­ய­தில்லை. அந்த நேர்­மை­யான பண்பை தன் அப்­பா­விடம் இருந்து பெற்­ற­தாக அடிக்­கடி சிலா­கித்­துக்­கொண்­டி­ருப்­பாராம் கலாம்.

உயர்­நிலைக் கல்­வியை முடித்தப் பின், திருச்­சியில் ஒரு கல்­லூ­ரியில் இயற்­பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறி­யியல் கல்­லூ­ரியில் ஏரோ­னா­டிக்கல் பொறி­யியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடி­யாமல் இருந்­த­பொ­ழுது இவரின் சகோ­த­ரிதான் தன்­னு­டைய நகை­களைக் கொடுத்து படிக்க அனுப்­பி­னாராம்.

கல்­லூ­ரிக்கு வந்து படித்­துக்­கொண்­டி­ருந்த சில நாட்­க­ளி­லேயே, தொழிலில் ஏற்­பட்ட பாதிப்­பினால் கலாமை அவ­ரு­டைய அப்பா, திரும்ப ஊருக்கு வரச்­சொல்­லி­விட்டார்.

ஆனாலும் ஊருக்குப் போகக்­கூட அவர் கையில் அப்­போது காசு இல்­லையாம். அதனால் தன் புத்­த­கங்­களை எடைக்கு போட்டு அதில் வரும் பணத்தை வைத்து ஊருக்குப் போகலாம் என்று முடி­வெ­டுத்த கலாம், அந்தப் புத்­த­கங்­களை விற்க சென்ற இடத்தில் புத்­த­கங்­களை வாங்­காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படி என்று சொல்லி அனுப்­பி­னாராம் அந்த புத்­தகக் கடைக்­காரர்.

இந்த நன்­றியை அவர் எம்­போதும் மறந்­த­தில்லை. அடிக்­கடி இந்த செய்­தியைக் குறிப்­பிட்டுக் காட்டி இவ­ருக்கு படிக்க உத­விய அந்த நபரை நன்­றி­யோடு குறிப்­பி­டு­வாராம் கலாம்.

கல்­லூ­ரியில் தன்­னு­டைய உணவுச் செலவை குறைக்க சைவத்­துக்கு மாறிய கலாம் கடை­சி­வரை சைவ உணவை மட்­டும்தான் உண்டார்.

பொறி­யியல் கல்­வியை முடித்­ததும் விமானி ஆகவே ஆசைப்­பட்டார். ஆனால், ஓர் இடம் பின்­தங்கி வாய்ப்பை இழந்­தாராம் கலாம். அந்த நேரத்தில் கண்­ணீ­ரோடு நின்­றாராம் கலாம்.

அப்­போது சுவாமி சிவா­னந்­தரின் ”இதை­விட பெரி­தான ஒன்­றுக்­காக நீ அனுப்­பப்­பட்டு இருக்­கிறாய்” என்ற வரி­களைப் படித்­தபி­றகு.

உணர்ந்­தாராம் நான் பெரி­தான ஒன்­றுக்­காக அனுப்­பப்­பட்­டவன் என்று. உண்­மைதான்… பெரி­தாக மட்­டு­மல்ல மிக மிக உய­ர­மான ஒன்­றிற்­கா­கவும் அனுப்­பப்­பட்­ட­வர்தான் அப்துல் கலாம்.

இந்­திய விண்­வெளிக் கழ­கத்தில் இணைந்தார் அப்துல் கலாம். அங்­கேதான் முதல் சுதேசி விண்­க­ல­மான எஸ்.எல்.வி.யை உரு­வாக்­கினார்.

அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்­தி­யாவின் விஞ்­ஞான வலி­மையை உல­குக்கு உரக்கச் சொல்லும் ஏவு­க­ணை­களை உரு­வாக்கி ‘இந்­தி­யாவின் ஏவு­கணைத் தொழில்­நுட்பத் தந்தை’ என வர்­ணிக்­கப்­ப­ட­லானார்.

திருக்­கு­றளும், குரானும் எப்­பொ­ழுதும் அவர் உடன் இருக்கும்.

ஒரு முறை எஸ்.எல்.வி 3 வெற்­றிக்குப் பிறகு இந்­திரா காந்தி, கலாமைச் சந்­திக்க ஆசைப்­பட்­டாராம். இந்­திரா காந்தி அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து கலா­முக்கு அழைப்பு வந்­ததாம். உங்­களை இந்­தி­ரா­காந்தி சந்­திக்க ஆசைப்­ப­டு­கிறார் என்று.

ஒரு பக்கம் மகிழ்ச்சி… மறு பக்கம் கவலை. அந்தக் கவ­லைக்குக் காரணம் இந்­திரா காந்­தியைச் சந்­திக்கச் செல்ல தன்­னிடம் ஒரு நல்ல ஆடை கூட இல்­லை­யென்­ப­து­தானாம்.

அப்­பொ­ழுது ”என்­னிடம் நல்ல ஆடை­களே இல்­லையே” என கலாம் சொல்ல, ”வெற்றி என்­கிற அழ­கான ஆடையை அணிந்து இருக்­கி­றீர்கள்! பிற­கெ­தற்கு வேறு நல்ல ஆடை என சொல்லி வழி­ய­னுப்பி வைத்­தாராம் மூத்த விஞ்­ஞானி சதீஷ் தவான்.

இவரின் மிகப் பெரிய சாதனை எல்லாம் வானத்­தில்தான் என்று நினைத்­துக்­கொள்ள வேண்டாம். ஊண­முற்­ற­வர்­க­ளுக்­கா­கவும் தன்­னு­டைய அறிவைப் பயன்­ப­டுத்­தி­யவர் கலாம்.

ஹைத­ராபாத் நிம்ஸ் மருத்­து­வ­ம­னையில் ஊன­முற்ற குழந்­தைகள் கிலோ கணக்கில் பார­மான செயற்கை கால்­களை அணிந்­து­கொண்டு இருந்த சுட்­டி­க­ளுக்கு வெறும் 400 கிராம் எடையில் செயற்கை கால்­களை வடி­வ­மைத்துக் கொடுத்த மாமேதை அவர்.

உல­கையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கலாமின் சொந்த வீடு ராமேஸ்­வரம் பள்­ளி­வாசல் தெருவில் உள்­ளது. தனக்­கென்று எதையும் சேர்த்­துக்­கொள்­ளாத அவர், எளி­மை­யான தனது இல்­லத்­தையும் இன்று அருங்­காட்­சி­ய­க­மாக மாற்றி இருக்­கிறார்.

பத்­ம­பூஷண், பத்­ம­வி­பூஷண், பாரத ரத்னா என பல்­வேறு பட்­டங்­க­ளையும் விரு­து­க­ளையும் பெற்­றவர். விண்­வெளி, தேசப் பாது­காப்பு, அணு ஆற்றல் என 3 துறை­க­ளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலை­மு­றைக்கு கலங்­கரை விளக்­க­மாக திகழ்ந்­தவர்.

1998ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி பிற்­பகல் 3.45 மணி.. இது இந்­திய நாட்டின் அதி­முக்­கி­ய­மான நேரம். அமெ­ரிக்க செயற்கை கோள்­களின் கண்­களில் மண்ணைத் தூவி­விட்டு, பொக்­ரானில் இந்­தியா தனது அணு­குண்டு சோத­னையை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யது.

உலக நாடு­களின் ஒட்­டு­மொத்த பார்­வையும் பொக்ரான் மீது திரும்­பி­யது. இந்தச் சாத­னைக்கு கார­ண­கர்த்தா கலாம்தான். அதன்­பி­ற­குதான் இந்­திய பத்­தி­ரி­கை­களில் தலை­யங்கம், கார்ட்­டூன்­களில் என பிர­ப­ல­மாகிப் போனார் கலாம். இந்­தி­யாவில் மட்­டு­மல்ல, உலக நாடு­களின் பத்­தி­ரி­கை­க­ளிலும் அவ­ரது பெயர் பதிந்­தது.

‘நாடு அமை­தி­யாக இருப்­ப­தற்கு ஏவு­க­ணைகள் மிக அவ­சியம். இல்­லா­விடில் நாம் அந்­நிய நாடு­களின் மிரட்­ட­லுக்கு பயந்­து­கொண்டே இருக்க வேண்­டி­யி­ருக்கும்’ என்று கூறிய கலாம், பாது­காப்புத் துறை மட்­டு­மின்றி வேறு பல துறை­க­ளுக்கும் உத­வி­யி­ருக்­கிறார். போலியோ நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கரு­விகள், இதய நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கரு­வி­களை உரு­வாக்­கி­யுள்ளார்.

தென்­னா­பி­ரிக்­காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்­சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உல­குக்கு உணர்த்தி, இந்­தி­யா­வுக்குச் சுதந்­திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்­தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறு­மையால், மனோ­தி­டத்தால், பத­விக்கு வந்து, தென்­னா­பி­ரிக்­காவில் அடிமை நிலைக்குக் கார­ண­மா­ன­வர்­களை மன்­னித்து, அவர்­க­ளையும் அந்த நாட்டுக் குடி­மக்­க­ளாக அங்­கீ­க­ரித்த தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா அவர்­க­ளும்தான் என்னைப் பிர­மிக்க வைத்த உலக அர­சியல் தலை­வர்கள் என்றும் சொல்­லி­யி­ருக்­கிறார் கலாம்.

எங்கள் எல்­லா­ரையும் கனவு காணச் சொன்ன உங்­களின் நிறை­வே­றாத கனவு என்ன? என்ற கேள்­வியை ஒரு­முறை அவ­ரிடம் கேட்க அதற்கு அவர், 125 கோடி மக்­களின் முகத்தில் மலர்ந்த சந்­தோஷப் புன்­ன­கையைப் பார்க்க வேண்டும் என்­பது தான். அது நிறை­வே­றக்­கூ­டிய ஆசைதான். என் ஆசை, என் இலட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும் என்று பதிலளித்திருந்தார்.

”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை.

என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று தான் எழுதிய அக்கினிச் சிறகுகள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஐயா… பெரியவரே உங்கள் அக்கினி என்றும் அணையாது…

சொப்பனமும் காணவில்லை

சொல்லி யாரும் போகவில்லை

கூடுவிட்டு பிரிவார் என்று

கொஞ்சம் கூட நம்பவில்லை!

பிள்ளைகளுக்கு என்ன சொல்ல

பிரியும்போது நினைச்சீரோ

மாணவர்களின் முகம்பார்த்து

கடைசி கண்ணீர் வடிச்சீரோ!

யாரு செஞ்ச சூது

உடல் மண்ணில் புதைய போகுது!

நாட்டை வல்­ல­ர­சாக்க வேண்­டு­மென்ற கன­வுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்­புக்கு அரசு விடு­முறை விட்டு விடக் கூடாது என்றும் கூடு­த­லாக ஒருநாள் வேலை செய்ய வேண்­டு­மென்றும் கேட்டுக் கொண்­ட­வர்தான் மறைந்த இந்­திய முன்னாள் குடி­ய­ரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இந்­தி­யாவை பொறுத்த வரை மக்கள் ஜனா­தி­பதி என்று அனை­வ­ராலும் அன்­புடன் அழைக்­கப்­பட்­டவர் அப்­துல்­கலாம்.

எல்லா வகை­யிலும் நாட்டின் முன்­னேற்றம் மட்­டும்தான் அவ­ரது இலக்­காக இருந்­தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்­டுக்கு ஒரு நாள் விடு­முறை அளிக்­கப்­பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்­பத்தி இழப்பு ஏற்­பட்டு விடக் கூடாது என்­பதில் கூட அவர் குறி­யாக இருந்தார்.

இத­னால்தான் ” நான் இறந்து போய் விட்டால், அன்­றைய தினம் விடு­முறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்­மை­யான அன்பு கொண்­ட­வர்­க­ளாக இருந்தால்,கூடு­த­லாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்” என்று சொன்­னவர் அப்துல் கலாம். அப்­ப­டிப்­பட்ட மாமே­தையை இன்று உலகம் இழந்து விட்­டது.

அதேபோல் மாணவ – மாண­வி­க­ளி­டையே உரை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் போதுதான் அவ­ரது உயிர் பிரிந்­தி­ருக்­கி­றது என்றால் இறப்பு கூட அவரது கனவை புரிந்து வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.

எஸ்.ஜே.பிரசாத்

Share.
Leave A Reply

Exit mobile version