எம்.எஸ். வி.யிடமிருந்து டியூன் வந்து விழ வாலியிடமிருந்து, மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா என்ற வார்த்தைகள் மூலம் பாடல் பிறக்கிறது.

அடுத்த டியூனுக்கு அத்தைமடி மெத்தையடி பாடல் உருவாகிறது. எல்லாப் பாடல்களையும் இவருக்கே கொடுத்திடலாம் என்று கற்பகம் படத்தின் மூலம் வாலியை அன்று ஏணியில் ஏற்றி விட்டவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

திறமையானவர்களை வாழ்க்கையில் ஏற்றிவிடும் ஏணியாகவும் கேட்கக் கேட்கச் சுவையோடு கூடிய இசை மெட்டுக்களைச் சுரந்து கொண்டே இருக்கும் இன்பக் கேணியாகவும் வாழ்ந்து விடை பெற்றிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கவிஞர் வாலி, நடிகர் வி.கோபாலகிருஷ்ணனுடன் ஸ்கூட்டரில் சென்று முதலில் சான்ஸ் கேட்ட இடம் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாந்தோம் வீடுதான்.

அண்ணே, ஸ்ரீரங்கத்துல இருந்து வந்திருக்காரு. நல்லா பாட்டு எழுதுறாரு. கொஞ்சம் பாருங்கண்ணே என்று கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்த, தான் எழுதி வந்த பாடல்களைக் காட்டுகிறார் வாலி.

தம்பி நீ ஊர் போய்ச் சேரு பிழைக்க நல்ல வழியைப் பாரு என்று சொல்லி வாலியைத் திருப்பி அனுப்பினார் எம்.எஸ்.வி.

எப்படியோ தொடர் முயற்சியால் வாலி சினிமாவில் நுழைந்து விடுகிறார். அந்த நேரத்தில் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கும் கற்பகம் படம் தொடங்குகிறது.

கவிஞர் கண்ணதாசன் பிசியாக இருந்ததால் வாலியை அழைத்து வருகிறார்கள் எம்.எஸ்.வி.முன்பு. ஒரு பாட்டு மட்டும் இவர் எழுதட்டும். கவிஞருக்கு மத்தப் பாட்டுக்களைக் கொடுத்திடலாம் என்ற ஒப்பந்தத்தோடு வாலியை நிறுத்துகிறார் கோபாலகிருஷ்ணன்.

யாரப்பா புது ஆளா? பாரப்பா நான் டியூன் போடுவேன். இங்கேயே உட்கார்ந்து பாட்டு எழுதனும்.வீட்டுக்குப் போய் எழுதிகிட்டு வாரேன்னு சொல்லக்கூடாது என்ற கண்டிஷனோடு சொல்லிவிட்டு ஆர்மோனியப் பெட்டி மீது எம்.எஸ்.வி. கைகளை வைக்க, சிச்சுவேசனை இயக்குனர் சொல்ல, எம்.எஸ்.வி.யிடம் இருந்து டியூன் வந்து விழ,மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா என்ற வார்த்தைகள் வருகின்றன வாலியிடம் இருந்து.

இத்தன நாளா எங்கய்யா இருந்தே? என்று வாலியை நோக்குகிறார் எம்.எஸ்.வி. முதன் முதல்ல சான்ஸ் கேட்டதே உங்ககிட்ட தான் என்று வாலி சொல்ல, அடுத்த சிச்சுவேஷனை சொல்லுங்க என்று டியூன் போடுகிறார் எம்.எஸ்.வி. அத்தைமடி மெத்தையடி பாடல் உருவாகவே இயக்குனரிடம், நல்லா எழுதுறாருங்க இந்த ஆளு. எல்லாப்பாட்டும் இவருக்கே கொடுத்திடலாம் என்று வாலியை அன்று ஏணியில் ஏற்றிவிட்டவர் தான் எம்.எஸ்.வி.

அதுமட்டுமில்லை பல இயக்குனர்களிடம் வாலியை சிபாரிசு செய்தவர். என்னங்க நீங்க கவிஞர் கண்ணதாசனுக்கு அவ்ளோ நெருக்கம். நீங்க போய் என்று கேட்டால் நான் கவிஞரைவிட நல்லா எழுதுறதா சொல்லலையே. இவரும் நல்லா எழுதறாருன்னுதான் சொல்றேன் என்பாராம்.

டி.எம்.சௌந்திரராஜனுக்கும் எம்.எஸ்.வி.க்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். நேற்று இன்று நாளை படப் பாடல் ரெக்கார்டிங் நடக்கும் நேரத்தில், தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலை எப்படிப் பாட வேண்டும் என்று டிரில் வாங்கிக் கொண்டிருந்தார். எம்.எஸ்.வி. இருவரும் வார்த்தையாலும் முட்டிக்கொண்டார்கள்.

என்னய்யா இது. இப்படிப் படுத்துறாரு என்று டி.எம்.எஸ். கோபித்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறார். கொஞ்ச நேரத்தில் கார் எடுத்துக் கொண்டு டி.எம்.எஸ். வீட்டுக்கு ஓடுகிறார் எம்.எஸ்.வி.

இருவரும் அந்த மோதலை மறந்து மீண்டும் எத்தனையோ பாடல்களை உருவாக்கி மக்களைக் கிறங்கச் செய்திருக்கிறார்கள்.

அன்பே வா படப் பாடல் பதிவு போய்க் கொண்டிருக்கிறது. ஏ.வி.எம். நிறுவனம் முதன் முதலில் கவிஞர் கண்ணதாசனை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு எல்லாப் பாடல்களும் வாலிக்குக் கொடுத்திருந்தார்கள்.

அதில், அன்பே வா அன்பே வா உள்ளம் என்ற கோவிலிலே தெய்வம் கண்டேன் என்ற பாடலை டியூனுக்கு ஏற்றபடி வாலியால் எழுத முடியவில்லை. அன்று இரவு தயாரிப்பு நிர்வாகியைக் கூப்பிட்டு, வாலி நல்லா எழுதிட்டாரு. ஆனால் ஆர்க்கெஸ்ட்ராவால அதைப் பினிஷ் செய்ய முடியலை.

நாளைக்கு ரெக்கார்டிங் வைச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டு வாலியிடம், அந்த டியூனுக்கு ஏற்ற மாதிரி ராத்திரியெல்லாம் உட்கார்ந்து எழுதிக்கிட்டு வந்துடு என்று கிளம்புகிறார் எம்.எஸ்.வி.

மறுநாள் காலை மெய்யப்பச்செட்டியார் கோபத்துடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரவே, பாடல் பதிவு அதற்குள் முடிகிறது. பாடல் நன்றாக வந்திருப்பதை அறிந்த அனைவரும் அந்தக் காலதாமதத்தைப் பற்றிப் பேசவில்லை.

அப்போது நான் தூரதர்ஷனில் வேலை பார்த்துக் கொண்டே பக்திப் பாடல்கள் பாடி அல்பங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தேன். எனக்குச் சினிமாவில் மியூஸிக் டைரக்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் இலட்சியம் கிடையாது. எனது 100 வது பக்திக் கேசட்டுக்காகப் பாராட்டு விழா ஏற்பாடு செய்தார்கள். முதலில் வேண்டாம் என மறுத்தவன்.

எம்.எஸ்.வி. அண்ணனைக் கூப்பிடப் போகிறார்கள் என்றதும் ஓ.கே. சொல்லிவிட்டேன்.

அந்த மேடையில் மைக் பிடித்த எம்.எஸ்.வி. அண்ணன், தேவாவுக்கு எதற்குப் பட்டம்? என்று நிறுத்தி, அவருக்கு யாராவது படம் கொடுங்கய்யா. பிரமாதமா மியூசிக் போடுவான் என்று முடித்தார். அந்த மேடையில் தேனிசைத் தென்றல் என்ற பட்டமும் அவர் கொடுத்ததுதான் என்று உருகுகிறார் தேவா.

இசைக் கோர்ப்புக்கு முன்பாக இசை நோட்ஸ் என்றுமே எழுதியதும் கிடையாது. என் இசைக்கு இத்தனை நோட்டுக்கள் (பணம்) வைக்க வேண்டும் என்று கேட்டதும் கிடையாது. அதுதான் எம்.எஸ்.வி.

Share.
Leave A Reply

Exit mobile version