போகோடா : கொலம்பியாவில், ராணுவத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த, 11 பேர் பலியாயினர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள சீசர் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று, பறந்து கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் விமானி மற்றும் 10 வீரர்கள் பயணம் செய்தனர். தலைநகர் பொகோட்டாவில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில், வெனிசுலா நாட்டின் எல்லையில், கோடாஸி என்ற நகருக்கு அருகே அந்த விமானம் பறந்தபோது, திடீரென வெடித்துச் சிதறி விழுந்தது.
விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும், மோசமான வானிலையால், மின்னல் தாக்கியதில் விமானம் வெடித்து சிதறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விபத்து குறித்த சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
விபத்து குறித்து விசாரிக்க, கொலம்பியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மனுவேல் சாண்டோஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.