புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பெட்டிக்குள் இருந்த சடலமும் சம்பவத்தின் பின்னணியும்.
அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழமையான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது புறக்கோட்டை. நாட்டின் நாலா புறமும் இருந்து வந்தவர்களும் நாலா புறத்தை நோக்கி செல்லத் தயாரானோரும் புறக்கோட்டையின், பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் பரபரப்பாக அலைந்து திரிந்த முற்பகல் வேளை அது.
சுறுசுறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாது இயங்கிக்கொண்டிருந்த கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்துக்கு இதன் போது தான் வந்து இறங்குகின்றார் மொஹிதீன். அனுராதபுரத்தைச் சேர்ந்த எம்.எம்.சி. மொஹிதீன் கடந்த இரு வருடங்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சாரதியாக வேலை பார்த்துவிட்டு தனது மனைவி சகிதம் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு அவர் அப்போது தான் தனது ஊருக்கு செல்லும் நோக்கோடு வந்துள்ளார்.
மனைவியின் கைகளில் இரு பொதிகள். மொஹிதீனின் கைகளில் பெரிய பெட்டியொன்றும் இன்னொரு பொதியும் இருந்துள்ளது.
இதன் போது மொஹிதீன் அவரது பொதிகளை தூக்கி வருவதில் சிரமங்கள் இருக்கவே சுமார் 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் அவருக்கு அதனை சுமந்து செல்ல உதவியுள்ளார்.
குறித்த உதவி செய்த நபர் தானும் தம்புள்ளைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து சுமுகமாகவே உரையாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்றுள்ளனர்.
சுமை காரணமாக பொதியை பிடித்திருந்த கையை எடுத்து மறுகைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்பொதியுடன் அங்கிருந்து பிறிதொரு பஸ் வண்டிக்குள் ஏறி மறைந்துள்ளார்.
இதனையடுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்துள்ளார்.
இதன் போது அங்கிருந்த நடைபாதை வியாபாரிகளையும் அவர் வினவியுள்ள நிலையில் அவர்களும் அது தொடர்பில் தேடியுள்ளனர்.
இதன்போது 15 ஆம் இலக்க பாதையில் பயணிக்கும் கொழும்பு–- அனுராதபுரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிரயாணிகள் வரிசையாக இருக்க அங்கு கைவிடப்பட்ட கறுப்பு நிற பயணப் பொதியொன்று இருந்துள்ளது.
மொஹிதீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதியல்ல என தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த அந்த கறுப்பு நிறத்தினாலான அந்த பெட்டி 3 அடி நீளமும் 2 அடி அகலமும் 1 அடி உயரமும் கொண்டது.அந்த பெட்டியானது 15 ஆம் இலக்க கொழும்பு-–அனுராதபுரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதாரண கட்டணம் அறவிடும் 31 ஆம் இலக்க தரிப்பிடத்திலேயே கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அந்த இடத்தில் கொழும்பு–அனுராதபுரம் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக கொழும்பிலிருந்து, ஸ்ரீ புற, கஹட்டகஸ்திகிலிய, ஹொரவபொத்தானை, கல்னேவ மற்றும் வேவல ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் பஸ் வண்டிகளும் நிறுத்தப்படுவது குறித்த அடையாளப்படுத்தல்களும் இருந்தன.
இந் நிலையில் யாரும் உரிமை கோராத அந்த பெட்டியை அங்கிருந்த தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் திறந்துள்ளார்.
இதன் போது நீல நிற துணியொன்றினால் சுற்றப்பட்டு மடிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று அந்த பெட்டிக்குள் இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியுடன் கத்தவே, விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
வழமையான நடவடிக்கைகளில் புறக்கோட்டை பொலிஸாரும் ஈடுபட்டிருந்த போது தன் 119 ஊடாக வந்த ஒரு அழைப்பு புறக் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களை புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தியது.
‘சேர், நான் நடைபாதை வியாபாரி செல்லையா வீரப்பன் கதைக்கின்றேன். அனுராதபுரம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் ஒரு பெட்டிக்குள் சடலம் ஒன்று உள்ளது சேர்…’ என கூறி அந்த தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டது.
புறக் கோட்டை பொலிஸாரினால் உடனடியாகவே விசாரணைகள் ஆரம்பமாகின.
காலை 9.15 மணியளவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பொலிஸார் பல்வேறு தகவல்களையும் சேகரித்து பலரின் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துகொண்டனர். இந் நிலையில் சடலம் இருந்த பெட்டி அந்த இடத்திலேயே அப்படியே வைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகள் தொடர்ந்தன.
புதன் பிற்பகல் வேளையில் புதுக்கடை 9 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே ஸ்தலம் விரைந்து மஜிஸ்திரேட் விசாரணைகளை முன்னெடுத்தார்.
இதன் போது பெட்டிக்குள் இருக்கும் சடலம் பெண்ணொருவருடையது என உறுதியான நிலையில் அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என தெரியவந்தது. உடலில் எங்கும் எவ்வித வெளிக் காயங்களும் இல்லாமல் அந்த சடலம் காணப்பட்டது. மூக்கில் மட்டும் இரத்தம் வெளியேறியமைக்கான அடையாளங்கள் இருந்தன.
சடலமானது அரை நிர்வாணமாக இருந்தது. சடலத்தின் மேற்பகுதி இளம் நீலம் மற்றும் வெள்ளை கலந்த டீ சேட் ஒன்று அணியப்பட்ட நிலையில் இருந்தது. அந்த டீ சேட்டிலும் இரத்தக் கறைகள் இருந்தன.
இதனை விட கீழ் பகுதியில் உள்ளாடை மட்டுமே காணப்பட்டது. இதனை விட அந்த பெட்டியில் சடலமாக காணப்பட்ட பெண்ணின் உள்ளாடைகள், மேலாடைகள், போர்வை என பல துணிமணிகளும் இருந்தன. எனினும் அவரை அடையாளம் காணும் வகையில் எதுவும் இருக்கவில்லை.
சடலத்தின் கழுத்தில் ஓம் அடையாளம் இடப்பட்ட பென்டனுடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றும் காலில் சலங்கைகளும் காணப்பட்டன. காதில் கம்மல்கள் இருக்கவில்லை. இதனை விட சடலத்தின் நெற்றியில் பொட்டு ஒன்றும் இருந்தது.
இந் நிலையில் சடலமாக உள்ள பெண் யார் என்ற கேள்வியும் அவர் எவ்வாறு மரணமடைந்தார் என்ற கேள்வியும் ஏற்பட்டது. இந் நிலையிலேயே ஊடகங்களுக்கு குறித்த பெண்னின் படங்களைக் கொடுத்த பொலிஸார் அடையாளம் காண உதவி கோரினர்.
அதே கையோடு விசாரணைகளையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பாரப்படுத்தினர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் மேற்பார்வையில் இந்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.இதன் போது நேற்று முன் தினம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசேட தகவல் ஒன்று கிடைத்தது.
‘சேர்.. நான் XXX லொட்ஜின் முகாமையாளர் பேசுகின்றேன். பத்திரிகையில் உள்ள சடலமாக இருந்த அந்த பெண் எங்கள் லொட்ஜில் தான் தங்கியிருந்தார்’ என தகவல் கொடுத்தது.
உடன் செயற்பட்ட பொலிஸார் கொழும்பு, செட்டியார் தெருவில் உள்ள குறித்த லொட்ஜுக்கு சென்று அங்கிருந்த சீ.சீ.டீ.வி.கண்காணிப்பு கமராவில் உள்ள பதிவுகளை அவதானித்தனர்.
அதனைத் தொடர்ந்து லொட்ஜில் இருந்த பதிவுகளின் படி அவர் யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தவர் என்பதைக் கண்டறிந்து யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கி உறவினர்களை கண்டறிந்து விசாரித்து தகவல்களைப் பெற்றனர்.
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை யத்தில் பிரயாணப் பெட்டிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டது.
இரவோடிரவாக யாழில் இருந்து கொழும்புக்கு வந்த கார்த்திகாவின் தாயார் சடலத்தை அடையாளம் காட்டினார்.
இந் நிலையில் பல்வேறு தகவல்களைப் பெற்ற பொலிஸார் கொலைக் கான காரணம் முறை தவறிய காதல் என கண்டறிந்தனர். சந்தேக நபரையும் அடையாளம் கண்டு யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்த அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்துள்ளதாகவும் இறுதியாக அவர் ஒன்பது நாட்களுக்கு முன்னர் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடுதிக்கு பிறிதொரு ஆணுடன் வந்து தங்கியிருந்துள்ளதாகவும்,விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
செட்டியார் தெருவில் உள்ள குறித்த தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார், 3 அடி நீளம்,2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் சீ.சீ.ரி.வி. காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாடியில் இருந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அந்த பெட்டியைக் குறித்த நபர் சுமந்து வருவதுடன், பதிவுகளை முடித்துக்கொண்டு பெட்டியுடன் வெளியே வந்து அதனை இழுத்துக்கொண்டு செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இதனைவிட அவர் அப்பெட்டியுடன் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதிவுகளையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சேகரித்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தர்.
அத்துடன் அந்த பெட்டியை பஸ் தரிப்பு நிலையத்துக்கு முச்சக்கர வண்டியொன்றிலேயே அவர் கொண்டு சென்றுள்ளமையும் அந்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கணவர் வெளிநாடொன்றில் வேலை செய்து வருகின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ள அவர் இதுவரை நாடு திரும்பவில்லை. கார்த்திகாவுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந் நிலையில் அவர் கார்த்திகாவின் தாயாரிடமே வளர்ந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார்த்திகா இறுதியாக தங்கியிருந்த செட்டியார் தெரு தங்குமிடத்தில் இருந்த சீ.சீ.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை விசாரணைக் குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் சந்தேக நபரையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கார்த்திகாவுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்திகாவின் தாயாருக்கு தகவல்கள் தெரிந்திருப்பதாக கூறும் பொலிஸார் கடந்த மூன்று வருடங்களாக அந் நபர் கார்த்திகாவுடன் ஒன்றாக இருந்துள்ளமையும் உறுதியாகியுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் ஒரு வாரத்துக்கு முன்பு கார்த்திகாவே குறித்த தங்குமிடத்தில் அறை எடுத்து தங்கியுள்ளதுடன், பின்னரேயே கார்த்திகாவை சந்திக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு குறித்த சந்தேக நபர் அங்கு வந்துள்ளதும் இதன் போது அவ்விருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை 12.15 மணிக்கும் 12.18 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த நபர் குறித்த பெட்டியுடன் தங்குமிடத்திலிருந்து வெளியேறுவது சீ.சீ.ரி.வி.கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பின் அது 28 ஆம் திகதி பின்னிரவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் பயணப் பெட்டியானது ஆள் நடமாட்டம் இல்லாத அதிகாலை வேளையிலேயே பஸ் தரிப்பிடத்தில் கைவிடப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.
கார்த்திகாவை கொலை செய்த நபர் அவரை பெட்டியில் இட்டு தூரப் பிரதேச பஸ் வண்டியொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்கோடு பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் அதிக நிறை காரணமாக 15 ஆம் இலக்க அனுராதபுரம்–கொழும்பு பஸ் தரிப்பு இடத்துக்கு அருகே அந்த பெட்டியின் சக்கரம் ஒன்று உடைந்துள்ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்வதில் எற்பட்ட சிரமத்தையடுத்து அந்த பஸ் தரிப்பு நிலையத்திலேயே சந்தேக நபர் பெட்டியை விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெரும்பாலும் யாழ். நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியொன்றில் அப்பெட்டியை கைவிட்டு செல்வது சந்தேக நபரின் நோக்கமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந் நிலையில் நேற்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னி லையில் கார்த்திகாவின் சடலம் மீது பிரேத பரிசோதனை ஒன்று முன் னெடுக்கப்பட்ட நிலையில் அதில் திறந்த தீர்ப்பொன்றே வழங்கப் பட்டது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா, எப்படி கொலை செய்யப் பட்டார், உயிரிழப்புக்கான காரணம்
ஆகியவை தொடர்பில் தெளி வற்ற நிலைமை இருந்ததால் சடலத்தின் பாகங்கள் மேலதிக இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட் டுள்ளன. நேற்று மாலை வரை சந் தேக நபர் கைது செய்யப்பட்டிராத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தன.