கலையும், கலாசாரமும், பண்பாடுகளும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வட பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்
“யாழ் இனிது, குழல் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்”
என்கின்றது ஒரு முதுமொழி. குழந்தையின் குறும்பிலும், மழலைமொழியிலும் நம் உள்ளமும் குழந்தையாகிப் போகும். அன்பு, அழகு என்ற சொற்களுக்கு அர்த்தம் சேர்ப்பவர்கள் அவர்கள் .இதனாலோ என்னவோ குழந்தைகளை யாரும் இலகுவில் வெறுக்க மாட்டார்கள்.
வாழ்க்கைச் சக்கரத்தில் வரும் பிரச்சினைகளைக் கண்டு திணறும் ஒவ்வொரு வேளையிலும் தமது புன்னகையால் நம்பிக்கை விதைகளை மனதில் விதைப்பவர்கள் அவர்கள். எனவே தான் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அனைவருமே போராடுகின்றார்கள்.
ஆனால், இன்று அதையெல்லாம் மீறிப் பணம், பழிவாங்கல்கள்,காம உணர்வுகள் போன்ற அற்ப சுகங்களுக்கெல்லாம் ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் இரையாகி விடுகின்றார்கள். நினைக்கவே வேதனை நெஞ்சைப் பிழிகின்றது.
அந்தவகையில் அத்தகைய ஒரு சம்பவம் கடந்த மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரம், எள்ளுக்காட்டு பிரதேசத்தில் பதிவானது.
3 வயதான சந்திரகுமார் யெரோசா என்ற குழந்தையொன்று காணாமல் போய் ஒரு மாதத்திற்குப் பிறகு உடல் சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையொன்றை காணவில்லை என்று செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
எனவே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை நோக்குவோமானால் ,
கிளிநொச்சி நகரிலிருந்து கரடி போக்கு சந்திக்கு செல்லும் வழியில் மேற்கு பக்கமாக சுமார் 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு பிரதேசம் தான் உருத்திரபுரம் எள்ளுக்காட்டு.
போரினால் அதிளவில் பாதிப்புகளை சந்தித்த இப்பிரதேசமானது, இன்னும் அடிப்படை வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, இப்பிரதேசத்தில் சட்ட விரோத மது பாவனை, முரண்பட்ட திருமணங்கள், இளம் வயது திருமணங்கள், பாலியல் துஷ்பிரயோகம், பாடசாலை இடைவிலகல் போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகளும் மேலோங்கிக் காணப்படுகின்றன.
எனவே, இத்தகைய ஒரு பின்னணியைக் கொண்டிருந்த நிலையில் தான் மேற்படி சம்பவமும் இப்பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
மர்மமான முறையில் மரணமான குழந்தை சந்திரகுமார் யெரோசா அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க கஷ்டப்படும் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவள்.
இவளுடைய தாய் கிறேஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம் வயதிலேயே சந்திரகுமார் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்த போதும் அந்த வாழ்க்கை அவருக்கு நிரந்தரமாக அமையவில்லை.
திருமணமாகி ஒரு வருடத்திலேயே கைக்குழந்தையுடன் இருந்த அவளை சந்திரகுமார் விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்பின் தனிமரமாய் நின்றவள் வெகு நாட்கள் செல்லும் முன்னரே மீன் வியாபாரியான உதயகுமார் என்பவரை மறுவிவாகம் செய்துகொண்டாள். அதன்பின் உதயகுமார் தான் குழந்தை யெரோசாவின் தந்தை ஸ்தானத்திலிருந்தார்.
இந்நிலையில், ஜூன் 21 ஆம் திகதி உதயகுமார் வழமை போல் தொழிலுக்காக வெளியில் செல்ல, குழந்தை யெரோசா தனக்கு நேரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து தொடர்பாக ஒன்றும் அறியாதவளாய், காலையிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் அயல் வீட்டுக் குழந்தைகளுடன் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
இதனிடையே தான் நண்பகல் 12 மணியளவில் தாய் குளிப்பதற்கு குளத்துக்கு அழைத்து செல்லும் நோக்குடன் குழந்தையை வீட்டுக்குள் வரவழைத்துகொண்டாள்.
எனினும், வீட்டுவேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தமையால் குளத்துக்கு குளிக்கச் செல்வது தாமதமானது.
இத்தகைய ஒரு தருணத்தில் தான் கிறேஸின் அக்காவின் மகனான 14 வயது சிறுவனான ஸ்டீவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு முன்பாக வர யெரோசாவின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. “அண்ணா” என்று தனது மழலைமொழியில் அழைத்தவாறு ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டது.
இதனையடுத்தே, யெரோசாவை குளத்துக்கு அழைத்துச் செல்லுமாறும், தான் சிறிது நேரத்தில் வருவதாகவும் ஸ்டீவனிடம் கூறினார் கிறேஸ் .
அதனைத்தொடர்ந்தே ஸ்டீபன் யெரோசாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான். எனினும் , அதன் பின் குழந்தைக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
சிறிது நேரத்துக்கு பின் குளிப்பதற்காக யெரோசாவின் தாயாரும் குளத்துக்கு சென்றுள்ளார். அப்போது குறித்த சிறுவன் மட்டுமே குளத்தில் நீராடிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து , குழந்தையின் தாய் “எங்கே யெரோசா?” என்று கேட்க, அவள் குளக்கட்டில் தான் நின்றுகொண்டிருந்தாள் என்று பதிலளித்துள்ளான் ஸ்டீவன் .
எனினும், குழந்தை அங்கு எங்குமே இருக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த யெரோசாவின் தாயார் குழந்தையை தேடி அலைந்தமையை கண்ட அயலவர்களும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
எனினும் அங்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. எனவே, இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் யெரோசாவின் தாயார் இரவு 8 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை இது தொடர்பாகப் பதிவு செய்தார்.
அதற்கமைய, துரிதமாக செயற்பட ஆரம்பித்த கிளிநொச்சி பொலிஸார் குழந்தை பணத்துக்காகவோ ,வேறு தேவைகளுக்காகவோ கடத்தப்பட்டுள்ளதா? அல்லது குழந்தைக்கு வேறேதும் ஆபத்து நேர்ந்துவிட்டதா? என்ற கோணத்தில் தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதில் முதலில் யெரோசாவின் ஒன்றுவிட்ட சகோதரனான ஸ்டீவன் கூறியது போல் குழந்தை குளக்கட்டில் நின்றுகொண்டிருந்ததால் தவறி குளத்துக்குள் விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடற்படையினரினதும் , ஊராரினதும் உதவியுடன் குளத்தினுள் தேடுதல் கொள்ளப்பட்டது.
எனினும், குளத்தினுள் குழந்தை தொடர்பாக எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, குழந்தையை குளத்துக்கு அழைத்து சென்ற குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன் , குழந்தையின் சித்தப்பா (உதயகுமார்), தாய் என பலரிடமும் பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் வாக்குமூலங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
எனினும் , அவர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களில் சம்பவத்துடன் தொடர்புடைய கதைகள் அனைத்துமே முரண்பட்ட நிலையில் காணப்பட்டன. எனவே, பொலிஸாரின் சந்தேகம் வலுவாக குழந்தையின் குடும்பத்தவர் மீதே திரும்பியது.
அதுவும் குழந்தையின் தாயாரிடம் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட வெவ்வேறு விசாரணை சந்தர்ப்பங்களிலும் அவர் பொலிஸாரிடம் மாறுபட்ட கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.
எனவே தாயார் தனது இரண்டாவது கணவனுடன் இணைந்து பணத்துக்காக குழந்தையை விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை தேடி முதலில் பொலிஸார் தேடுதலை மேற்கொண்டதுடன், இலங்கையின் தென்பகுதிகளிலும் வலை விரித்துத் தேட ஆரம்பித்தனர்.
அதுமட்டுமின்றி, குழந்தை வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முகமாக குழந்தை தொடர்பான விபரங்கள், புகைப்படம் போன்றவற்றையும் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கினர்.
மேலும் 22 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை யெரோசாவின் தாய், சித்தப்பா (உதயகுமார்), 14 வயது சிறுவன் ஆகிய மூவரும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
ஆயினும், பொலிஸாரின் எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனது. கடந்த 19 ஆம் வயலுக்கு வேலைக்காகச் சென்ற போது குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வயல் பிரதேசத்தில் அந்த அழகிய குழந்தையின் வண்ண மேனி சிதைவுற்று, வெறும் எலும்புக் கூடுகளாய் கிடந்தது. ஒரு நிமிடம் கல்லையும் கரையச் செய்யும் காட்சி அது.
வயலுக்கு வேலைக்குச் சென்றவர்களே முதலில் சிதைவடைந்த உடலை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்தே சிதைவடைந்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. மேலும் அதன் அருகில் குழந்தை இறுதியாக அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டன.
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் யாழ். வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வயதுக் குழந்தையான யெரோசா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், குழந்தையை குளத்துக்கு அழைத்துச் சென்ற 14 வயது சிறுவனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கடந்த 27 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அச்சுவேலி சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இந்தக் குழந்தையின் கொலை குறித்து இன்னமும் மர்மம் கலையாத நிலையே காணப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் ஒழுங்கற்ற சமுதாய கட்டமைப்புகளும், வளர்ப்பு முறைகளுமே இவ்வாறான சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
அதுமட்டுமின்றி, கலையும், கலாசாரமும், பண்பாடுகளும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வட பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
எனவே, இது தொடர்பான விசாரணைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் யாராகவிருந்தாலும் அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட்டு இது தொடர்பான உண்மை நிலவரங்கள் விரைவில் வெளிவர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பாகும்.
வசந்தா அருள்ரட்ணம்