நாட்டைப் பிரிக்குமாறு நாங்கள் கோரவில்லை. ஆனால் கௌரவமாக சுயமரியாதையுடன் பக்குவமாக பாதுகாப்பாக எமது நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி சமத்துவமான மக்களாக நாங்கள் வாழ விரும்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய சம்பந்தன் நாட்டைப்பிரிக்குமாறு நாங்கள் கோரவில்லை.
ஆனால் கௌரவமாக சுயமரியாதையுடன் பக்குவமாக பாதுகாப்பாக எமது நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி சமத்துவமான மக்களாக நாங்கள் வாழ விரும்புகின்றோம்.
அதற்கு மேலதிகமாக நாங்கள் எதையும் கேட்கவில்லை. இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு சுதந்திரமாக எவ்வித தடையுமில்லாமல் சமஷ்டி அடிப்படையில் தீர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.
எமது தமிழ் மக்களுடைய அன்றாட விடயங்கள் தொடர்பாக பொருளாதார சமூக கலாசார அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பாக இணைந்த வட கிழக்கில் எவருக்கும் எவ்விதமான பாதிப்புமில்லாமல் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அடிப்படையிலும் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவும் வடக்கு, கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். அது அரசியல் அலகாக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் கூறியிருக்கின்றோம்
ஒருமித்த நாட்டுக்குள் நாட்டை பிரிக்காமல் நாடு பிளவுபடாமல் எவ்விதமான அரசியல் தீர்வு வரவேண்டுமென்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக நாங்கள் கூறியிருக்கின்றோம்.
இன்றைய சூழலில் நிலைமைகள் மாறியிருக்கின்றன. ஒரு பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு வரப்போகின்றதா அல்லது நீதியின் அடிப்படையில் நியாயத்தின் அடிப்படையில் உலகின் பல் வேறு நாடுகளில் தற்போது இருந்து வருகின்ற அரசியல் ஒழுங்குகளின் பிரகாரம் தனித்துவமான இனத்தைச் சார்ந்த மக்கள் தனித்துவமான மதத்தினை சார்ந்த மக்கள் தனித்துவமாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு ஏற்படப் போகின்றதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
பத்து இலட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள். 5 இலட்சம் மக்கள் நாட்டில் குடிபெயர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை.
ஒன்றரை இலட்சம் மக்கள் வீடிழந்துள்ளார்கள். போர் நடந்த காலத்தில் மாத்திரம் சுமார் எழுபதாயிரம் மக்கள் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
நாங்கள் பேரழிவுகளை சந்தித்துள்ளோம். இது தொடர்கதையாக இருக்கப்போகின்றதா இவை தொடர்வதாக இருந்தால் தமிழ் தேசியம் இந்த நாட்டில் அழிக்கப்படும். இன அழிவு ஏற்படும். இன அழிவு ஏற்படாமல் இருப்பதாக இருந்தால் இந்த நாட்டில் நியாயமான நிரந்தரமான உறுதியான நடைமுறைப்படுத்தக் கூடிய நிலை நிற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு வரவேண்டியது அத்தியாவசியமாகும்.
அது தான் எமது நிலைப்பாடு. இதற்கு எல்லோரும் பதில் சொல்ல வேண்டிய நிலைமை இந்த தேர்தல் முடிந்த பிறகு ஏற்படும். ஆகவே இதற்காக தமிழ் மக்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பங்களிப்பும் முக்கியமான பங்களிப்பாகும்.யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்வது மட்டக்களப்பு மாவட்டத்தில். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமலை வட மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குமிடையில் பாலமாக அமைந்திருக்கின்றது. இந்த தேர்தலில் நாம் இருபது ஆசனங்களைப் பெறுவோம் என எதிர்பார்க்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் 6 உறுப்பினர்களையும், வன்னியில் 5 உறுப்பினர்களையும், மட்டக்களப்பில் 4 உறுப்பினர்களை யும் அம்பாறையில் ஒரு உறுப்பினரை பெறவேண்டும்.
திருகோணமலையில் இரண்டு உறுப்பினர்களைப் பெறவேண்டும். தேசியப் பட்டியலில் இரண்டு உறுப்பினர்களைப் பெற வாய்ப்புண்டு. மொத்தமாக இருபது உறுப்பினர்களை பெறவேண்டும்.
மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும். அது நமக்கு அத்தியாவசியமான ஒரு தேவை. வடக்கும் கிழக்கும் இணைந்து ஒன்றாக இருப்பதற்கு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களைப் பெற்று வெற்றியை அடைய வேண்டியது நமக்கு அத்தியாவசியமான தேவை.
அதை உணர்ந்து மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பது ஒரு புனிதமான கடமை. தற்போது வாழும் மக்களுக்காகவும் பின் சந்ததியினருக்காகவும் நாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை நாங்கள் தவறக் கூடாது.
இது நமது உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு போராட்டம். நமது உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
அவை நியாயமானவை. அவை நீதியா னவை, அவற்றை மறுப்பது கடினம் என்ற அபிப்பிராயம் இன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதை உறுதி செய்யக் கூடியவாறு தமிழ் மக்களின் தேர்தல் தீர்வு அமைய வேண்டும்.
அவ்வாறான ஒரு வெற்றியை ஏற்படுத் துவது தமிழ் மக்களின் புனிதமான கடமை. ஒரு போதும் நாங்கள் கைவிடமாட்டோம். இந்தப்பிரச்சினையை விரைவில் நாங்கள் தீர்ப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.