மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதி சிவத்த போக்கடியை சேர்ந்த இருபது வயதுடைய தர்மலிங்கம் ஜனனி என்ற இளம் தாய் தனது பத்து நாள் குழந்தையை கைவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குழந்தையின் பெயரில் ஏற்பட்ட சர்ச்சையே மரணத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கணவர் ஜோர்ஜ் வெஸ்லி என்பவருக்கும் ஜனனி என்பவருக்குமிடையில் 13.09.2014 அன்று திருமணம் நடைபெற்றது.
கடந்த 02.08.2015 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகப்பிரசவமாக பெண் குழந்தையொன்று கிடைத்தது.
இக்குழந்தைக்கு “ஜோய்லா ஷனோ” என்று பெயர் சூட்டி பதிவு வைத்துள்ளான்.
கணவர் திருகோணமலை தேவாலயம் ஒன்றில் வேலை செய்வதால் தனது மாமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பதிவை எடுத்துவருமாறு தொலைபேசியில் கூறியுள்ளார்.
அப்பிறப்பு பதிவை எடுத்து வந்தபிறகு மனைவியான ஜனனி என்பவர் கணவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து ஏன்? மகளுக்கு இவ்வளவு பெரிய பெயரை வைத்தீர்கள் என்று கணவரோடு முரண்பட்டு;ள்ளார்.
கணவர் பலமுறை தாழ்மையாக கதைத்தும் மனைவி ஜனனி ஏற்றுக்கொள்ளாததால் ,சரி எதிர்வரும் 21 ஆம் திகதி ஊருக்கு வந்து பெயரை மாற்றுவோம் என்று கணவர் கூறியுள்ளார்
அத்தோடு குழந்தை அழுவதாக சொல்லி தொலைபேசி அழைப்பையும் மனைவி துண்டித்துள்ளார்.
இது விடயமாக கணவர் கவலையோடு இருக்கும்போது, மனைவியின் சகோதரியின் கணவர் புதன்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு எடுத்து உங்களது மனைவி தூக்கிட்டு தொங்கி மரணித்துவிட்டார்” என்ற செய்தியை கூறியுள்ளார் இதன் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பிரேதப்பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன்
மேலதிக விசாரணையை கரடியனாறு பொலிசார் மேற்கொள்கின்றனர்.
சம்பவம் பற்றி அறிந்த கரடியனாறு பொலீசார் விசாரணை நடாத்தும் போது ,மரணித்தவரின் தாயும்,மரணித்தவரின் கணவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.