14 தீ வைப்பு சம்பவங்கள் உட்பட இதுவரை 714 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் இந் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதில் பாரிய குற்றங்களாக 125 சம்பவங்கள் இனங்காணப்பட்டுள்ளதோடுஇ 589 சாதாரண குற்றச்சாட்டுகளும், 10 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
பாரிய குற்றச் செயல்களாக 3 கொலைச் சம்பவங்களும், 37 தாக்குதல் சம்பவங்களும், 45 அரச சொத்து துஷ்பிரயோக சம்பவங்களும், 14 தீ வைப்பு சம்பவங்கள், இரு கடத்தல் சம்பவங்களும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தல் தொடர்பில் 07 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான ரோகண கமகேயின் வாகனம் மீது செவ்வாயக்கிழமை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
‘பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு வார காலத்திற்கு முன்பாக சுவரொட்டிகளை அகற்றிக்கொண்டிருந்த ஒருவருக்கு கட்சியொன்றின் ஆதரவாளர்கள் தாக்கியது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் காயமடைந்த குறித்த நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அது மாத்திரமின்றி வன்னி தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் உலருணவு பொருட்கள் மற்றும் பணம் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தேர்தலில் வாக்கினைப் பெற்றுக் கொள்வதற்காக, விளையாட்டுக் கழகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் மத தலைவர்களுக்கும் பொருட்களை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது என கபே அமைப்புக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.