1.பிரச்சாரத்தைப் புறக்கணிக்கும் ஜனாதிபதியும், முதல்வரும்
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சென்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட அந்த கட்சியின் அரசியல் எதிரிகள் மற்றும் கட்சிக்கு வெளியில் இருந்தவர்களின் துணையுடனே வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனோ வடமாகாணசபைத் தேர்தல் நடப்பதற்கு சற்று முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து போட்டியிட்டு முதல்வரும் ஆனார்.
இருவருமே தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் அவரவர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது தனக்கு உடன்பாடில்லை என்பதாலேயே தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை என்று மைத்ரிபால தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவி வகிக்கும்போது பக்கசார்பற்ற நிலையில் செயற்பட விரும்புவதால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஈடுபடவில்லை என்று சி வி விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வழக்கமாக வாக்காளர்கள் தான் அரசு, அரசியல் கட்சிகள் அல்லது அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தேர்தலை புறக்கணிப்பார்கள்.
ஆனால் இலங்கையில் ஒரு ஜனாதிபதியும் ஒரு முதல்வருமே தமது சொந்தக் கட்சிகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்திருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
2 . ஒட்டிய சுவரொட்டிகளை அகற்ற 75 மில்லியன் ரூபாய் செலவு
இலங்கையின் தேர்தல் பிரச்சார விதிகளின்படி பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. ஆனால் இந்த விதியை பெரும்பாலான அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை. அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து லட்சக்கணக்கான சுவரொட்டிகளை அச்சடித்து அதற்குக் ஏராளமான கூலியும் கொடுத்து ஒருபக்கம் ஊரெல்லாம் ஒட்டுகிறார்கள். மறுபக்கம் அந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் தேர்தல் ஆணையம் பல மில்லியன் ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணியைச் செய்வதற்கு காவல்துறைக்கு 75 மில்லியன் ரூபாயை கொடுத்திருப்பதாக இலங்கைத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் சுவரொட்டிகள் அடிக்கவும் காசு. அதை அகற்றவும் காசு. பொதுவாக பணத்தை தண்ணீராய் இறைப்பதாக சொல்வார்கள். ஆனால் இலங்கைத் தேர்தலில் காசு போஸ்டராய் கிழிபடுகிறது என்பதே சரியாய் இருக்கும்.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரபல முதலெழுத்து எஸ் (S)
ததேகூ தலைவர் சம்பந்தரைப் போலவே பல வேட்பாளர்களின் பெயர்களிலும் எஸ் (S) என்ற ஆங்கில எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக இருப்பதாலோ என்னவோ, அந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் பலரின் பெயரின் முதல் எழுத்தும் எஸ் (S) என்பதாகவே அமைந்திருக்கிறது.
சில உதாரணங்கள்: எம்.ஏ. சுமந்திரன், ஈ. சரவணபவன், சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சிறிகாந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவனேசன், செல்லத்துறை, சி.சிவமோகன், இரா. சம்பந்தன், குணசீலன் சவுந்தரராஜா, ஞா. சிறிநேசன், பொன். செல்வராஜா, குணசேகரன் சங்கர் உள்ளிட்ட வேட்பாளர்களின் பெயர்களும் இப்படி எஸ்- இல் ஆரம்பிக்கின்றன.
இதைத்தான் அரசியலில் தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி என்பார்களோ!
4. படமெடுத்தாடும் நாகம் சின்னத்தில் போட்டியிடும் பிக்குகள்
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இலங்கையின் பௌத்த பிக்குகளுக்கு இது பொருந்தாது போல. நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான மதகுருமார்கள் இந்த முறை இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சர்ச்சைக்குரிய கடும்போக்கு பௌத்தவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பு இந்த தேர்தலில் பொது ஜன பெரமுன (BJP) என்கிற அரசியல் கட்சியாக போட்டியிடுகிறது.
அந்தக் கட்சியின் சின்னமாக படமெடுத்தாடும் நாகப்பாம்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையைக் காக்கும் காவல் தெய்வமாக நாகத்தை தாங்கள் கருதுவதாலேயே அதை தம் சின்னமாக தேர்வு செய்ததாக அந்த கட்சி விளக்கமளித்திருக்கிறது.
வழக்கமாக விசிறியும் கையுமாக வலம்வரும் பௌத்த பிக்குகள், இப்போது படமெடுத்தாடும் நாகப்பாம்பு சின்னத்தை ஏந்தி வாக்குகேட்டு வலம் வருகிறார்கள். இலங்கைத் தெருக்களில் மட்டுமல்ல; இணையத்திலும் கூட..
5. குடும்பத்தோடு தேர்தலில் குதித்திருக்கும் குறிப்பிட்ட சிலர்
தெற்காசியாவுக்கு குடும்ப அரசியல் புதிதல்ல. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த தேர்தலிலும் அரசியல் குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சிலர் ஒரே கட்சியின் சார்பில் களம் கண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறார்கள். அப்படி போட்டியிடும் சில அரசியல் குடும்பங்கள்.
ராஜபக்ஷ குடும்பத்தில் நால்வர் (மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ நால்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்)
ரணதுங்க குடும்பத்தில் மூவர் (அர்ஜுன ரணதுங்க யானை சின்னத்திலும் அவரது சகோதரர்கள் இருவர் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்)
சேனரத்ன குடும்பத்தில் இருவர் (ராஜித சேனாரத்னவும் அவரது மகன் சதுர சேனாரத்னவும் யானை சின்னத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிடுகிறார்கள்)
திஸாநாயக்க குடும்பத்தில் இருவர் (எஸ்.பி. திஸாநாயக்கவும் அவரது மகன் நாரத திஸாநாயக்கவும் வெற்றிலை சின்னத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிடுகிறார்கள்)
பொன்சேகா குடும்பத்தில் இருவர் (முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் அவர்களின் ஜனநாயகக் கட்சியில் வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர்)
6. இராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாயும் தேர்தலில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தபோது, அவரைத் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கியதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை கடற்படை சிப்பாய் விஜித ரோஹண விஜேமுனி, ஜனசெத பெரமுண என்கிற கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
அவர் இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் சிஹல உறுமய என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டார். சர்ச்சையை ஏற்படுத்திய செயல்களே அரசியலின் அடையாளமாகலாம் என்பதற்கு இவர் மற்றும் ஒரு உதாரணம்.
7. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சிவாஜிலிங்கம்
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதலாவது இலங்கைத் தேர்தல் இதுவே.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, தனது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டைக்கு வெளியே சென்று, குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அவர் 2010-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்தவை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 9-வது இடத்துக்கு வந்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஒன்பதாம் இடத்துக்கு வந்த சிவாஜிலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தைப் பிடிப்பார் என்பதே எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி.
இலங்கைத் தேர்தல்: பத்து முக்கிய புள்ளிவிவரங்கள்
இலங்கைத் தேர்தலில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை புள்ளிவிவரங்கள் பத்து. ஒரே இடத்தில்.
- இலங்கையின் மொத்தத் தேர்தல் மாவட்டங்கள்: 22
- இலங்கையின் தேர்தல் மாவட்டங்களில் கொழும்பில் அதிகபட்சமாக 19 தொகுதிகளும் குறைந்தபட்சமாக திரிகோணமலையில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
- நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை: 12,314
- இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,50,44,490
- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 64
- தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை: 3653
- சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை: 2498.
- இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை: 6151. இதில் அதிகபட்சமாக கொழும்பில் 792 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பொலநறுவையில் 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
- தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 202 பேர் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள்.
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. யாருடைய ஆதரவும் இன்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113.