ஹைதராபாத்: அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
தமிழகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நடிகைகள் தங்கள் சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிப்பதோடு, தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபங்களை கொட்டி வருவதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.
நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் ஒரு படத்துக்கு இரண்டரை கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வரும் இவர், காதல் சர்ச்சைகளில் சிக்கியும் மார்க்கெட் சரியவில்லை.
தற்போது மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள் ஆகிய படங்கள் இவரிடம் கைவசம் உள்ளன.
சம்பள பட்டியலில் அனுஷ்காவும், நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை வாங்குகிறார்.
இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பாகுபலி படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது.
அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. ‘ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
நடிகை தமன்னா ஒன்னே முக்கால் கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பாகுபலி படம் தமன்னா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தலாமா? என்று இவர் யோசித்து வருகிறாராம்.
நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்தியில் நடித்த ‘திரிஷ்யம்’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
காஜல் அகர்வாலும் ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார். இவர் தற்போது விஷால் ஜோடியாக ‘பாயும் புலி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
த்ரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் ‘தூங்காவனம்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறது
ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.