கடும் குழப்பத்தின் மத்தியில் இருந்த மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப்பெற்று வெற்றிபெற்றுள்ளது.
குழப்பத்தின் மத்தியில் இருந்து மட்டக்களப்பின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 127185 வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38477 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தினையும் ஐக்கிய தேசிய கட்சி 32359 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 32232 வாக்குகளைப்பெற்று 127 வாக்குகள் குறைவாக பெற்றதன் காரணமாக ஆசனத்தனத்தினை இழந்தது.
இந்த தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான , கோவிந்தன் கருணாகரம்,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
உத்தியோகபூர்வமற்ற தகவலின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் புதுமுகங்களாக களமிறக்கப்பட்ட முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஞா.சிறிநேசன் அதிக வாக்குகளைப்பெற்று முதல் இடத்தினைப்பெற்றுள்ளதுடன் மற்றைய புதுமுகமாக புளோட் சார்பில் களமிறக்கப்பட்ட எஸ்.வியாழேந்திரன்(எஸ்.எஸ்.அமல்)இரண்டாம் நிலையில் அதிகூடிய வாக்குகளைப்பெற்றுள்ளார்.
அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன் வெற்றிபெற்றுள்ளதுடன் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் இரா.துரெட்ணம் ஆசனத்தினை இழந்தார்.
இந்த தேர்தலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக களமிறக்கப்பட்ட கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், சிப்லிபாரூக் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலைப்பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் குறைந்தளவிலேயே வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை நிறைவுபெற்ற நிலையில் ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையிலான போட்டி மற்றும் ஐ.ம.சு. முன்னணி முதன்மை வேட்பாளர் எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மீளவும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.