பல்வேறு காரணங்களைக் காட்டி ஆஜராவதைத் தவிர்த்துவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை இன்று ஆஜராகுமாறு விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

அவருக்கான அழைப்பாணையை நேற்றைய தினம் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ள மிரிஹான பொலிஸ் அதிகாரிகள் வாசல் ‘கேற்’றில் ஒட்டிவிட்டு வந்துள்ளனர்.

எழுத்து மூலமான மேற்படி அழைப் பாணையை மிரிஹான பொலிசார் கோதாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ வீரர் சுனில் ப்ரியந்த சுமணதாச அதனை ஏற்க மறுத்துள்ளார்.

எதனையும் பொறுப்பேற்கக் கூடாது என கோதாபய ராஜபக்ஷ தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். பொலிசார் அவரிடம் வாக்கு மூலத்தை பதிவுசெய்து கொண்டுள்ளனர்.

அதனையடுத்து பொலிசார் மேற்படி அழைப்பாணையை வாசலிலுள்ள ‘கேற்’றில் ஒட்டி விட்டுத் திரும்பியுள்ளனர். இதனை மிரிஹான பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஜயலத்திற்கு மேற்படி குழு தெரிவித்துள்ளது.

அவ்வறிவித்தலுக்கிணங்க கோதாபய ராஜபக்ஷ இன்றைய தினம் மேற்படி விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகாவிட்டால் அவருக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் மேற்படி விசாரணைக்குழு இன்று வெளியிடும்.

கோதாபய ராஜபக்ஷவை மேற்படி விசாரணைக் குழு கடந்த 14 ஆம் திகதி அழைத்திருந்தபோதும் அவர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பிறிதொரு தினத்தைக் கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version