திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, தக்காளி, முட்டைகளை வீசி தாக்கியதில் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
பிரதமர் மோடி சென்னை வந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த கருத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, ஆர்ப்பாட்டங்கள், உருவபொம்மை எரிப்பு என போராட்டங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருகின்றது.
மேலும், இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம், இளங்கோவன் வீடு உள்ளிட்டவற்றை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இதையறிந்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வில்ஸ்.முத்துக்குமார் மற்றும் 48வது வார்டு செயலாளர் ஜெகதீஸ்வரி, கிழக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜிஎன்ஜி மகேந்திரன் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அங்கே கூடவே, இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கும்பலில் இருந்த அதிமுகவினர் கல், செருப்பு, போன்றவை வீசினர். பதிலுக்கு காங்கிரசார் கற்களை வீச, அக்கம்பக்கம் கடைகளில் இருந்த முட்டை, தக்காளிகளை எல்லாம் அதிமுகவினர் வீசினர்.
கையோடு 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து திருச்சி தேவர் ஹாலில் அடைத்து வைத்தனர்.
இதனிடையே, திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முகமது ரபீக் சார்பில் வழக்கறிஞர் செந்தில்வடிவேல், திருச்சி ஜே.எம்.6 நீதிமன்ற நீதிபதி சரண்யாவிடம் தாக்கல் செய்துள்ள மனுவில்,” முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய காட்சியை தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
-சி.ஆனந்தகுமார்