மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவுவரை நீடித்த தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளின் போது பெண்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட பலர் காயமடைந்துள்ளார்கள்.
இவர்களில் சிலர் அரச மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.
ஆதரவாளர்கள் ஆரவாரம்
சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் தற்போது மேதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ம. சு.முன்னனி வேட்பாளராக போட்டியிட்ட அந்த பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியடைந்திருந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசியப் பட்டியலின் மூலம் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் பிரதான சாலைகளிலும் வீதிகளிலும் இறங்கி பட்டாசுகளை கொளுத்தியும் பேரணிகளை நடத்தியும் ஆரவாரம் செய்தனர்.
இதன்போது ஆரவாரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தமது ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் புகுந்தும், சாலையால் சென்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி ஆகிய கட்சிகளினால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட தமது ஆதரவாளர்கள் 23 பேர் காயமடைந்துள்ள அதேவேளை 5 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்த பிரதேசத்திலிருந்து ஸ்ரீலங்கா. மு. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மொகமட் பாறுக் ஷிப்லி கூறுகின்றார்.
வீடுகள், கடைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தேர்தலுக்கு பின்னரான இந்த வன்முறைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா .மு.கா மற்றும் ந.தே. முன்னனி ஆகிய கட்சிகள் தமது வன்மையான கண்டணங்களை வெளியிட்டுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்களை கண்டித்தும் ஹிஸ்புல்லாஹ்விற்கு வழங்கப்படவுள்ள தேசிய படடியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தை மீளாய்வு செய்யக் கோரியும் இன்று சனிக்கிழமை கொழும்பிலும் காத்தான்குடியிலும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் செய்த ந. தே. முன்னனி தமது கோரிக்கை தொடர்பில் மனுவொன்றையும் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது.
இந்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரை தான் கேட்டுள்ளதாக எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.
பொலிஸ் தகவல்களின்படி இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.