பிரதமரான பின்பு முதல் முறையாகத் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி.
அவரது பயணத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்தில் பிரதமருக்கு அளித்த மதிய விருந்து, இரண்டு வித தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்று புரோட்டோகாலுக்கு அப்பாற்பட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிரதமர் மோடி கொடுத்த கௌரவம். மற்றொன்று பிரதமரும் முதல்வரும் சந்திப்பால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கலவரம். அத்துடன் சோவுடனான சந்திப்பு கலகலப்பாக முடிந்தது.
ஆகஸ்ட் 7ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்தார்.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்துக்குச் செல்லும்போது ஒருமுறை சென்னை விமான நிலையம் வந்தார்.
அதன்பிறகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ராமேஸ்வரம் வந்தார். எனினும் அரசு நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்தது இதுவே முதல்முறை.
தேசிய கைத்தறி தின விழாவில் பங்கேற்று இந்திய கைத்தறி முத்திரையை அறிவித்த பிரதமர் மோடி, தமிழகத்தில் திரைப்படத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
கைத்தறிப் பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் அதை பிரபலப்படுத்தும் வகையில் திரைப்படத் துறையினர் சினிமா எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வழக்கமாக டெல்லித் தலைவர்கள் தமிழகத்துக்கு வரும்போது வணக்கம் நன்றி என்று தமிழில் பேசுவார்கள் ஆனால் மோடியோ அதையும் தாண்டி தமிழகத்துக்கு வந்தது மகிழ்ச்சி, நெசவாளர்களை சந்தித்தது மேலும் மகிழ்ச்சி என்று எழுதி வைக்காமல் பேசிக் கைதட்டலை அள்ளினார்.
விழா முடிந்ததும் பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்றார். அங்கே அவருக்குச் சென்னையின் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட மதியவிருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாகப் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு முதல்வர் வருவது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் காலையில் 8 மணிக்கு மேல் கட்சியினருக்கு அரசல் புரசலாகத் தெரிய வந்ததுமே விமான நிலையம் அருகே கட்சித் தொண்டர்கள் கூடத் தொடங்கினர். ஏகப்பட்ட மக்கள் வரவேற்பிலே மோடி சென்னை நகரச் சாலைகளில் பயணித்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அங்கே வாசலில் பிரதமருக்கு மலர்க்கொத்துக் கொடுத்து வரவேற்றார் முதல்வர். வழக்கமாகப் பிரதமரைக் கவர்னர் இல்லத்தில் தான் முதல்வர் சந்திப்பார்.
அதுதான் புரோட்டோகால் (மரபு). ஆனால் அந்த புரோட்டோகாலையும் மீறி போயஸ் தோட்டத்துக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி–முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு எதிர்க்கட்சிகளைக் கலவரப்படுத்திவிட்டது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் 2016 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி என்று சில எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனோ ஒருபடி மேலேபோய் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ரகசியக் கூட்டணி வைத்திருக்கின்றன என்று கொச்சைப்படுத்தி அவர்களது சந்திப்பை தரக்குறைவாகத் தாக்கி விமர்சித்திருந்தார்.
அதன் பலன் இன்று இளங்கோவனின் கொடும்பாவி தமிழகமெங்கும் எரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையெல்லாம் கண்டு தி.மு.க. தான் பெரும் கலவரத்துக்குத் தள்ளப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்குப் பிரதமர் மோடி வந்த செய்தி நாடு முழுவதும் டி.வி. சேனல்களில் ஓடிக்கொண்டிருந்தது.
இதைப் பார்த்த தி.மு.க.தலைவர் டாடி கருணாநிதி கோபத்தின் உச்சத்துக்கே போனதாகச் சொல்லப்படுகிறது. எப்படியாச்சும் இச்செய்தியை நாளைக்கு திசை திருப்புங்க என்று கூறியதும், ஒரு மனுவைத் தயார் செய்தனர்.
அந்த மனுவை துரைமுருகன் உள்ளிட்ட சில தி.மு.க.வினர் கவர்னர் ரோசையாவிடம் கொடுத்தனர். மதுவிலக்கு சட்டமன்றத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்ததாகத் தெரி வித்தனர்.
மோடியின் செய்தியை திசைதிருப்ப தி.மு.க.வினர் செய்த செயல்தான் சிரிப்பை வரவழைத்தது.
போயஸ் கார்டனில் சுமார் ஐம்பது நிமிடங்கள் இருந்தார் மோடி. அப்போது ஜெயலலிதாவிடம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சில சட்டங்களுக்கு ஆதரவு தருமாறு மோடி கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதற்குப் பின் அவர்கள் அரசி யல் பேசினார்களா, சட்டசபைத் தேர் தல் கூட்டணி பற்றி விவாதித்தார்களா என்பதுதான் இப்போது தமிழகக் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள்.
மோடி வருவதற்கு முன்பு சோ வீட்டில் காத்திருந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் சோவின் மனைவி சௌந்தரா, மகள் சிந்துஜா ஆகியோரைத் தவிர மற்றவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
சோவின் குடும்ப டாக்டர். விஜயசங்கரும் அவர்களில் ஒருவர்.
வீட்டுக்குள் மோடி நுழைந்தவுடன் எனது குடும்ப டாக்டரையும் உங்கள் பாதுகாவலர்கள் வெளியேற்றி விட்டனர் என்று சோ கூறியிருக்கிறார்.
உடனே மோடி தனது பாதுகாப்புப் படையினரிடம் டாக்டரை உள்ளே அனுமதிக்கக் கூறியிருக்கிறார். அறைக்குள் பிரவேசித்த டாக்டர் விஜயசங்கரைக் கட்டிப்பிடித்து, சோ ஒரு பொக்கிஷம்.
அவரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்று கூறியிருக்கிறார் மோடி. பின்னர் டாக்டர் விஜயசங்கரிடம் சோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதன்பின் நீங்கள் எவ்வளவு பெரிய பிரச்சினைகளை எல்லாம் சந்தித்தவர். இந்த ஹெல்த் பிரச்சினை ஒரு பிரச்சினையா? அது உங்களை எதுவும் செய்யாது என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
உங்களுக்காக காபியும் சமோசாவும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன் என்று மெல்லிய குரலில் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் சோ.
இப்போதுதான் மதிய உணவு சாப்பிட்டேன் என்று மோடி கூறவும் சோ தனது வழக்கமான பாணியில் உங்களுக்கென்ன பலமான விருந்து என்று சொல்லவும் மோடி இடி இடிப்பது போலச் சிரித்துவிட்டாராம்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்க ஆசைப்பட்டால் இங்கேயும் சாப்பிடத் தயாராக இருக்கிறேன் என்று மோடி பதிலளிக்க, பரவாயில்லை. வேணாம்னா விட்டுவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார் சோ.
இப்படிக் கலகலப்பான சந்திப்புக்குப் பிறகு நேரடியாக விமான நிலையம் சென்ற மோடி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இது குறித்து அ.தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதைக் கூட்டணிப் பேச்சு என்று பல ரும் பேசுகின்றனர்.
தமிழக நலன்களுக்காக 21 பக்கம் அடங்கிய மனுவைப் பிரதமரிடம் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாது காப்புப் படையை நியமிக்க வேண் டும்.
கச்சதீவை மீட்க வேண் டும். இலங்கையில் அப்பாவித் தமிழர்க ளைக் கொன்றவர்களைத் தண்டிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். சென்னை ஹைக்கோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்திருக் கிறார் என்றனர்.