சென்னை: 2 ஆயிரம் ரூபாய் பணம் தர மறுத்ததால் பெண் டாக்டரை கொலை செய்தேன் என்று கைதான பொறியாளர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த பெண் டாக்டர் சத்யா (32), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படித்து வந்தார்.

இவர், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வசித்து வந்தார். அவருடன் பட்ட மேற்படிப்பு (எம்.டி) படிக்கும் இன்னொரு பெண் டாக்டர் சங்கீதா என்பவரும் தங்கி இருந்தார்.

டாக்டர் சத்யா கடந்த வியாழக்கிழமை அன்று, பட்டப்பகலில் அவர் தங்கி இருந்த அறையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Evening-Tamil-News-Paper_326835274701(கணவர்  துரைமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சேசு (35). . அவரது மனைவி சத்யா (32) பெண் டாக்டர். )

கொலை செய்யப்பட்ட டாக்டர் சத்யாவின் கணவர் ஜேசுவும் டாக்டர்தான். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த டாக்டர் சத்யா, உயர் படிப்புக்காக கணவர், 2 குழந்தைகளை பெரம்பலூரில் விட்டு, விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலை நடந்த வீட்டின் 2வது மாடியில் 3 தனித்தனி அறைகள் உள்ளன. ஒரு அறையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் சத்யா தங்கி இருந்துள்ளார்.

பக்கத்து அறையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சிரஞ்சித் தேப்நாத் (26) என்பவரும், அவரது தம்பி பொறியாளர் அரிந்தம் தேப்நாத் (22) என்பவரும் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையின் 4 தனிப்படையினர், கொலையாளியை தேடி வந்தனர். கொலை நடந்த வீட்டுக்குள்ளேயே கொலையாளி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு இருந்தது.

இந்நிலையில், டாக்டர் சத்யாவை கொலை செய்தது பொறியாளர் அரிந்தம் தேப்நாத் என்பதை போலீசார் கண்டறிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை கைது செய்தனர்.

அதன் பின் கொலையாளியான அரிந்தம் தேப்நாத்தை, டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு நேற்று அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, டாக்டர் சத்யாவை கொலை செய்தது எப்படி என்று அவர் போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார். மேலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

வாக்குமூலத்தில், ”எனது சொந்த ஊர் திரிபுரா மாநிலம் அகர்தலா. அங்குள்ள இந்திரா காந்தி நகரில் எங்கள் குடும்பம் உள்ளது. எனது தந்தை நாராயணன் தேப்நாத் பள்ளி ஆசிரியராக உள்ளார்.

எனக்கு அண்ணன் மட்டும் உள்ளார். எனது அண்ணன் சிறந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர். எனது அண்ணன் சென்னையில் டாக்டராக வேலை பார்த்ததால், நானும் சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தேன்.

பொறியியல் படிப்பை முடித்துவிட்டாலும், 2 பாடங்களில் பெயில் ஆகிவிட்டதால், பட்டம் பெற முடியவில்லை. அந்த 2 பாடங்களிலும் மீண்டும் தேர்வு எழுதி பாஸ் ஆவதற்காக நான் எனது அண்ணன் அறையில் தங்கி இருந்தேன்.

எனது அண்ணன் சாப்பாடு மட்டும் வாங்கி தருவார். எனக்கு செலவுக்கு பணம் தர மாட்டார். எனது தந்தை மாதம் ரூ.5 ஆயிரம் செலவுக்கு அனுப்புவார். அந்த பணம் என் செலவுக்கு போதவில்லை.

அதனால் நான் ஆடம்பரமாக செலவு செய்ய பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, நாங்கள் வசிக்கும் அறைக்கு, பக்கத்து அறையில் டாக்டர் சத்யாவும், டாக்டர் சங்கீதாவும் வந்து தங்கினார்கள். 2 பெண் டாக்டர்களும் தனிமையில் தங்கி இருந்தது, எனக்குள் ஒரு சபலத்தை ஏற்படுத்தியது. மேலும், அவர்களிடம் சகஜமாக பேசி பழகி பணத்தை பெற திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று டாக்டர் சத்யா மட்டும் அவரது அறையில் தனியாக இருந்தார். எனது அண்ணன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டதால் எங்கள் அறையில் நானும் தனியாக இருந்தேன்.

காலை 9.15 மணியளவில் நான் துணி துவைக்க செல்லும்போது, டாக்டர் சத்யாவும் அவரது அறையைவிட்டு வெளியே வந்தார்.

அவரிடம் பேச்சு கொடுத்தபடி செலவுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கேட்டேன். அவர் பணம் இல்லை என்று கூறினார். நான் வற்புறுத்தி மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால் அவர் என்னை கண்டபடி திட்டிவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை உள்பக்கம் தாள் போட்டுக் கொண்டார்.

உடனே நான் கோபத்தில் சத்யாவின் அறைக்கதவை ஓங்கி காலால் உதைத்தேன். தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்து கொண்டது. அப்போது, சத்யா படுக்கையில் படுத்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

நான் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா, ‘ஏன் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தாய்?’ என்று சத்தம்போட்டார்.

எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது நான், அவரது தலையை சுவற்றில் மோதினேன். அதில் அவர் மயக்கமடைந்து படுக்கையில் விழுந்தார்.

உடனே நான், அவரது பைக்குள் பணம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால் அதில் பணம் ஏதுமில்லை. அவரது செல்போன் மட்டும் இருந்தது.

அதை மட்டும் எடுத்து கொண்ட நான், அவரை அப்படியே விட்டுவிட்டால் என்னை போலீசில் காட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்தேன். அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அறையில் கிடந்த கம்பியால் சத்யாவின் கழுத்தை இறுக்கினேன்.

ஆனால் அவரது உயிர் போகவில்லை. உடனே, அங்கு கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால், சத்யாவின் கழுத்தில் குத்தியும், அறுத்தும் அவரை கொன்றேன். அதன்பின் அவரது அறையை வெளியில் பூட்டிவிட்டு எதுவும் தெரியாதததுபோல் வந்துவிட்டேன்.

அன்று இரவு சத்யாவின் பிணத்தை வெளியில் எடுத்துச்செல்ல முடிவு செய்திருந்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டதால், சத்யாவின் செல்போனை 1,200 ரூபாய்க்கு விற்றேன்.

அந்த பணத்துடன் மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, போலீசார் சத்யாவின் பிணத்தை தூக்கிக்கொண்டு இருந்தனர். டெல்லி செல்வதாக சொல்லிச்சென்ற டாக்டர் சங்கீதா, சத்யா கொலை செய்யப்பட்ட விஷயத்தை போலீசுக்கு சொல்லி இருக்கிறார்.

உடனே நான், ரத்தகறை படிந்த சட்டையை மட்டும் அவசரமாக துவைத்தேன். அப்போது போலீசார் அங்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஆனால், கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் கூறி சமாளித்தேன் மேலும், கொலை நடந்தபோது நான் படித்த பொறியியல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்பினேன் என்றும் பொய் சொன்னேன். அதனால் போலீசார் என்னை விட்டு விட்டனர்.

ஆனால், டாக்டர் சங்கீதாவைத்தான் போலீசார் சந்தேகத்துடன் தீவிரமாக விசாரித்து வந்தார்கள். என் மீது சந்தேகம் இல்லாததால், நானும் பயம் இல்லாமல் இருந்தேன். ஓரிரு நாளில் சொந்த ஊர் தப்பி செல்ல திட்டமிட்டு இருந்த நேரத்தில் செல்போன் என்னை காட்டி கொடுத்துவிட்டது” என்று கூறி உள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version