சேவை சரியில்லை என்று ஹோட்டல் சர்வர் மீது புகார் கூறிய இளம்பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
கிழக்கு சீனாவின் வென்ஜோ நகரில் ஹாட் ஸ்பாட் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த 24ஆம் தேதி மிஸ்லின் (29 ) என்பவர் தனது குடும்பத்தினருடன் உணவருந்த சென்றுள்ளார்.
அவர்களுக்கு ஷூ என்ற 17 வயது வாலிபர் சேவை செய்துள்ளார். ஷூவின் சேவை சரியில்லை என்று ஹோட்டல் உரிமையாளரிடம் மிஸ்லின் புகார் செய்துள்ளார்.
பின்னர் தனது குடும்பத்துடன் மிஸ்லின் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த ஷூ, கொதிக்கும் வெந்நீரை எடுத்து வந்து, மிஸ்லின் மீது ஊற்றியதோடு, மிஸ்லின்னை கடுமையாக தாக்கினார்.
ஹோட்டலில் இருந்தவர்கள், மிஸ்லின்னை ஷூவிடம் இருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிஸ்லின்னின் உடலின் ஒரு பகுதி முழுவதும் வெந்நீர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து ஷூவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த காட்சிகள் முழுவதும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.