லொக்கு சீயா ராகமை பிரதேசத்தில் மட்டுமன்றி மாந்திரீகம் தொடர்பிலான நம்பிக்கையுள்ள அனைவர் மனதிலும் இன்று ஒலிக்கும் பெயர்.
ராகமை தேவாலயத்தின் பிரதான பூசகராக செயற்பட்டு வந்த லொக்கு சீயாவின் இயற்பெயர் அல்லது உண்மையான பெயர் மொஹம்மட் சாலிஹ் மெஹம்மட் நியாஸ் மாந்திரீகம் கொடிய வினைகளை அகற்றுதல் உள்ளிட்ட செயற்பாடுகளால் பிரபலமான லொக்கு சீயாவை அன்றாடம் நாடி வரும் அரசியல் புள்ளிகளும் பொதுமக்களும் ஏராளம் எனலாம்.
இதனால் லொக்கு சீயாவின் வங்கி கணக்கும் கனதியாகிக் கொண்டே போனது.
இவ்வாறானதொரு நிலைமையில் தான் வெள்ளை வேனில் வந்தவர்களால் லொக் சீயா கடத்தப்படுகின்றார். அது கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நேரமோ எப்படியும் மாலை 6.15 ஐ கடந்திருக்கும்.
ராகமை தேவாலயத்திலிருந்து வீடு நோக்கி லொக்கு சீயா தனது ‘பிராடே’ ரக ஜீப் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தான் வெலிசர குணசேகர மாவத்தை பகுதியில் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான பாதைக்கு அண்மையாக வெள்ளை வேனில் வந்தவர்களால் லொக்கு சீயா கடத்தப்பட்டுள்ளார்.
2011 ஒக்டோபர் என்பது மேல் மாகாண சபை தேர்தல் இடம்பெற்றக் காலப்பகுதி. அத்துடன் பல வெள்ளை வேன் கடத்தல்களும் பாரத லக்ஷ்மன், பிரேமச்சந்திர போன்ற பிரபலமானவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியும் கூட லொக்கு சீயாவுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பிரசித்தம் காரணமாக அவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தப்பட்டார் என்ற செய்தி நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
லொக்கு சீயா என அறியப்படும் மொஹம்மட் நியாஸ் உண்மையில் காலியை பிறப்பிடமாகக் கொண்டவர்.
1954 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி சித்தி பாத்திமா அஹமட் காசிம் மொஹம்மட் சாலி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். காலியில் பிறந்த நியாஸ் ராகமை தேவாலயத்தின் பூசகரான கதை சுவாரஷ்யமானது.
ஆரம்பத்தில் சிறு வர்த்தகராக இருந்த நியாஸ் காலியிலிருந்து கொழும்புக்கு வந்து மாபோல பிரதேசத்தில் தனது சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது வர்த்தக நடவடிக்கைகளின் இலக்குக்காக அங்கொடை பிரதேசத்தில் நியாஸ் வாடகைக்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
அங்கு வைத்தே நியாஸ் களுத்துற செதர சாத்தனி ரூபிகா என்ற சிங்கள பௌத்த பெண்ணை காதலித்து மணம் முடிக்கின்றார்.
பின்னர் அங்கொடையிலேயே சிறு வீடொன்றில் அவ்விருவரும் குடித்தனம் நடத்தியுள்ளனர். இவ்வேளை தான் நியாஸ் திடீரென சுகவீனம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் நியாஸை இவரது காதல் மனைவி கல்கிசை பிரதேசத்தின் பௌத்த தேரர் ஒருவரிடம் சிகிச்சை அல்லது பரிகாரத்துக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் சென்ற வேளையில் குறித்த பௌத்த தேரர் மாத்தறைக்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருந்துள்ளாராம்.
இந்நிலையில் நியாஸின் ஆத்மாவை கட்டிப் போட்டுள்ள குறித்த பௌத்த தேரர் தான் 3 நாட்களில் மாத்தறையில் திரும்பி வந்து மேலதிக சிகிச்சைகளை வழங்குவதாக கூறிவிட்டுச் சென்றாராம்.
எனினும் அந்த தேரர் 3 நாட்களில் திரும்பி வரவில்லையாம். அவர் பென்தர பாலத்தின் அருகே விபத்தொன்றில் இறந்துவிட்டாராம்.
ஏற்கனவே நியாஸின் ஆத்மாவுடன் 300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அப்புஹாமி சீயா என்பவரது ஆத்மாவையும் குறித்த தேரர் கட்டிப் போட்டிருந்ததாகவும் அதுவே இறுதி வரை தொடர்ந்ததாகவும் அதன் பயனாகவே பரிகார பூஜைகள் செய்ய நியாஸ் ஆரம்பித்ததாகவும் வரலாற்றை சொல்கிறார்கள்.
நியாஸின் வாரிசுகள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் வறுமையை போக்க பணம் பெற்றுக் கொண்டும் 6 பரிகார பூஜைகளை செய்ய ஆரம்பித்த நியாஸ் அதற்கென்றே ராகமையில் இடம் கொள்வனவு செய்து தேவாலயம் ஒன்றினையும் அமைத்துக் கொண்டுள்ளார்.
ஒரு சமயம் ஐக்கிய அரபு இராச்சிய அரச குடும்பத்தை சேர்ந்த சேக் ஒருவரின் குடும்ப பிரச்சினையை இந்த லொக்கு சீயா என்ற நியாஸ் தனது பரிகார பூஜை ஊடாக தீர்த்து வைத்துள்ளாராம்.
அன்ரூ என்ற ஒருவர் ஊடாக குறித்த ஷேக் இலங்கைக்கு வந்து பரிகாரப் பூஜையை செய்து கொண்டதாகவும், பிரச்சினை தீர்ந்ததால் அவர் நியாஸுக்கு பல இலட்ச ரூபாக்கள், வீடு, வாகனம் என பரிசளித்ததாகவும் கூறும் நியாஸின் வாரிசுகள் உள் நாட்டிலும் பலர் தமது விடயங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது இலட்சங்களால் தமது தகப்பனை மகிழ வைத்ததாக தெரிவிக்கின்றனர்.
இது தான் நியாஸின் மாந்திரீக அல்லது பூஜை வரலாறு. நியாஸுக்கு இரு மகன் மார் உள்ளனர். முதலாமவர் எம்.என்.எம்.ஹிசான் பொடி சீயா என அழைக்கப்படுபவர்.
தந்தைக்கு உதவியாக அவர் ராகமை தேவாலயத்தில் வேலைப்பார்த்ததால் அந்த பெயர் வந்ததாம். லொக்கு சீயா அல்லது நியாஸ் மற்றும் பொடி சீயா ஹிசான் ஆகிய இருவருக்கும் சிறப்புப் பட்டம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சரி இனி விடயத்துக்கு வருவோம்.லொக்கு சீயாவுக்கு கிடைத்த பரிசில்கள் பணம் என்பவற்றால் அந்த குடும்பமே மில்லியன்களில் புரண்டது.
இன்றும் தெளிவாக சொல்வதென்றால் லொக்கு சீயா சுமார் 3 1/2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சாதாரணமாக அணிந்திருப்பார் எனில் வசதியை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
இந்நிலையில் தான் லொக்கு சீயாவின் கடத்தலால் பலரும் அதிர்ந்து போயினர். அவரிடம் சேவையைப் பெற்றுக் கொண்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் என அனைவரும் லொக்கு சீயாவுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயன்றனர். எனினும் லொக்கு சீயா தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி அப்போதைய அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க சில்வாவுக்கு தகவல் ஒன்று கிடைக்கின்றது.
‘சேர்…. அக்கரைப்பற்று பதுர் நகர் கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது’ என்பதே அந்த தகவலாகும். உடனடியாக செயற்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க சில்வா பொலிஸ் குழுவொன்றுடன் சென்று சடலத்தை மீட்டெடுத்தார். எனினும் அந்த சடலம் யாருடையது என்பதை உடனடியாகவே அடையாளம் காண முடியாதிருந்தது.
பொலித்தீன் உறையொன்றுக்குள் இடப்பட்டிருந்த சடலத்தை சுற்றி முள் வேலிக்கம்பிகள் சுற்றப்பட்டிருந்தன. சடலத்துடன் பெரிய கல்லொன்று கட்டப்பட்டு கடலில் போடப்பட்டு கல்லில் இருந்து சடலம் கழன்று கரைக்கு அடித்து வந்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்தனர்.
ஏனெனில் அதற்கான அடையாளங்கள் இருந்தன. இந்நிலையில் சடலம் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்ள அதனை அடையாளம் காணவேண்டிய தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டது.
அதனால் சடலமானது அக்கரைப்பற்று வைத்தியசாலை சவச்சாலையிலேயே வைக்கப்பட்டு சடலத்தை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டது.
பொலிஸ் தலைமையகத்தின் பொது மக்கள் உளவுப்பகுதி ஊடாக சடலத்தின் புகைப்படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு அடையாளம் காண கோரப்பட்டது. எனினும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
சுமார் 18 நாட்கள் வரை சடலமானது அக்கரைப்பற்று வைத்தியசாலையிலேயே இருந்தது.
இந்நிலையில்தான் பொடி சீயாவுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து 2011 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி அவர் அங்கு சென்று தனது தந்தையின் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார்.
சடலமானது உருக்குலைந்திருந்த நிலையில் லொக்கு சீயா தனது காலொன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக காலுறை ஒன்றை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த காலுறை அப்படியே இருக்க கையில் விரல் ஒன்றில் போடப்பட்டிருந்த கட்டு இறுதியாக அணிந்திருந்த ஆடை போன்றவற்றை வைத்து மகன் பொடி சீயா சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் அதில் கழுத்து இறுக்கப்பட்டு லொக்கு சீயா கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன் கழுத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திய தடயமும் இருந்தது.
கண்டிப்பாக லொக்கு சீயா கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்ததும், யாரால் அவர் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்? என கேள்விகள் எழுந்தன.
லொக்கு சீயாவின் சடலத்தில் அவரின் 3 1/2 கோடி நகையும் இருக்கவில்லை. இந்நிலையில் கொலை விசாரணைகளை அக்கரைப்பற்று, இராகமை என இரு பொலிஸ் நிலையங்களும் இணைந்து முன்னெடுத்தன.
இதனைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது.
கிட்டத்தட்ட 4 வருடங்கள் மர்மங்கள் எதுவும் துலக்கப்படாது லொக்கு சீயாவின் கொலை விசாரணை நகர்கிறது.
இந்நிலையில்தான் லொக்கு சீயாவின் மகன் சூட்டி சீயா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
லொக்கு சீயா படுகொலையுடன் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பிருப்பதாகவும், அரச வாகனங்கள் அது தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனைவிட கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசேட முறைப்பாடொன்றை முன்வைக்கும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் லொக்கு சீயாவின் கடத்தல், கொலை என்பன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ அறிந்திருந்த நிலையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த கால ஆட்சியின் போது நாடளாவிய ரீதியில் வியாபித்திருந்த வெள்ளை வேன் கலாசாரத்தின் பின்னணியில் கடற்படை இராணுவம் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் பல குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன.
குறிப்பாக எக்னெலிகொட விவகாரம், 11 மாணவர் கடத்தல் விவகாரங்களில் இவை ஆதாரங்களுடன் சிக்கியுள்ளன.
இந்நிலையில் லொக்கு சீயா விவகாரத்திலும் பாதுகாப்பு தரப்பினர் கடத்தலிலும் கொலைகளிலும் தொடர்பு பட்டிருக்கலாம் என அப்போதிலிருந்தே சந்தேகங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
ஏனெனில் லொக்கு சீயாவின் சடலம் அக்கரைப்பற்று கடற்கரையில் மீட்கப்படும் போது கடற்படையினர் மட்டுமே பயன்படுத்தும் 100 கிலோ நிறைகொண்ட இரும்புகள், கடற்படை பயன்படுத்தும் வலை சடலத்தை சுற்றியிருக்க மீட்கப்பட்டதுடன் அவை பாதுகாப்பு தரப்பினர் மீதான சந்தேகத்தை அப்போதே ஏற்படுத்தியது எனலாம்.
எது எப்படி இருப்பினும் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளில், விரைவாக மர்மம் துலக்கப்பட்டு கொலை சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அதுவரை நாம் அவதானத்துடன்.