தெருச்சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும்.
அந்த சண்டை தெருச் சண்டையை விடவும் கேவலமாக இருக்கும். அடிக்கடி வன்முறையாகவும் மாறுவதால் வேடிக்கை பார்ப்பதென்றால் கவனமாக ஒதுங்கி நிற்க வேண்டும்.
வடகொரியா, தென் கொரியா என்ற இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தெருச்சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல.
இரண்டாவது உலகப் போரோடு ஆரம்பமான வரலாற்று பெருமை கொண்டது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக இப்போது அடித்துக் கொள்வார்கள், நாளை சண்டைப்பிடிப்பார்கள் என்று வேடிக்கை பார்த்து ஏமாந்த தெருச் சண்டை பிரியர்கள் ஏராளம்.
இரண்டு தினங்களுக்கு முன்னரும் அதாவது கடந்த வியாழக்கிழமையும் இந்த தெருச் சண்டை முற்றி இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொண்டன.
வட கொரியா ஷெல் தாக்குதல் நடத்த பதிலுக்கு தென் கொரியா ஏகப்பட்ட பீரங்கி குண்டுகளை போட்டது. இதிலே சுவாரஸ்யமான கதை வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியது தென் கொரிய எல்லையில் சத்தமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்த ஒலிபெருக்கிகளை நோக்கியாகும்.
எல்லைப் பகுதியில் ஒலிபெருக்கிகளை வைத்து தம்மை திட்டி கடுப்பேற்றியதால்தான் வடகொரியா அந்த அப்பாவி இலத்திரனியல் கருவிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.
வடகொரியா, தென் கொரியாவுக்கு இடையில் ஒலிபெருக்கி மூலம் திட்டித் தீர்க்கும் சண்டை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விடுபட்டிருந்தது.
ஆனால் தென் கொரியா அந்த கெளரவமான நடைமுறையை கடந்த வாரம் ஆரம்பித்தது. பெரிதாக ஒன்றுமில்லை.
தென்கொரியா தனது வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகளை பெருத்தும். அந்த ஒலிபெருக்கிகளை சத்தமாக போட்டு வட கொரிய எல்லையில் இருப்பவர்களுக்கு கேட்கும்படி அந்த நாட்டை ஆத்திரம் முடியும் வரை திட்டித் தீர்க்கும்.
அடிக்கடி தென் கொரியாவை புகழ்ந்துபாடும். சர்வதேச செய்தி எல்லாம் ஒலிபரப்பி அறிவையும் வளர்க்கும். இந்த ஒலிபெருக்கியின் நச்சரிப்பு பொறுக்க முடியாத வட கொரியா அதனை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்தது.
நிறுத்தாத படியால் ஒருநாள் கழித்து வட கொரியாவும் தனது எல்லையில் ஒலிபெருக்கியை பொருத்தி தென் கொரியாவை பதிலுக்கு திட்டித் தீர்த்தது.
என்றாலும் வட கொரியா தனது உத்தம தலைவர் கிம் ஜொங் உன்னை திட்டினால் பொறுத்துக்கொண்டிருக்காது என்பது தென் கொரியாவுக்கு நன்றாக தெரியும்.
எனவே உசுப்பேற்றும் வகையில் தென் கொரியாவும் அதனையே செய்கிறது. தென் கொரியா இப்படி ஒலிபெருக்கி கொண்டு திட்டுவதோடு நிற்காது.
பலூன்களில் துண்டு பிரசுரங்களை கட்டி அதனை வடகொரியாவை நோக்கி பறக்க விட்டு வசைபாடும். கடந்த ஆண்டு இப்படி பலூன் பறக்கவிட்டதால் கோபமடைந்த வடகொரியா தென் கொரியாவை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரிய நாட்டு எல்லைகளில் இது மட்டுமல்ல, வேடிக்கை பார்க்க இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெறும்.
இரு நாடுகளும் அடுத்த நாட்டுக்கு தெரியும்படி இராட்சத பதாகைகள் செய்து அதன் மூலம் எதிரி நாட்டை திட்டித் தீர்க்கும். பொதுவாக வடகொரியா கம்யுனிஸ்ட் நாடு என்பதால் அங்கும் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறுவதில்லை.
எனவே அப்படியான நாட்களில் தென்கொரியா தனது வடகொரிய எல்லையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பெரிதாக நடத்தி வட கொரியாவின் ஆத்திரத்தை மேலும் பல டிகிரிக்கு உயர்த்தும்.
அப்போது பல டஜன் அடி உயரத்திற்கு வைக்கப்படும் கிறிஸ்மஸ் மரத்தை அகற்ற கோரி வட கொரியா எச்சரிக்கையை விடுப்பது வழமையான கதை.
ஒரு வாரத்திற்கு முன் இரு நாட்டு எல்லையின் தென் பகுதியில் இருக்கும் இராணுவமயமற்ற வலயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு தென்கொரிய வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தார்கள். ஒரு வீரரின் இரு கால்களும் பறிபோனது. மற்றொரு வீரரின் ஒருகால் சிதறியது.
தென் கொரிய எல்லையில் போய் யாரும் பொழுது போக்கிற்கு குண்டு வைக்க மாட்டார்கள். வைத்திருந்தால் அது வட கொரியாவாகத் தான் இருக்க வேண்டும்.
எனவே தென் கொரியா, வட கொரியா மீது குற்றம் சாட்டியதில் பிழையேதும் இருக்காது. இந்த கோபத்தில்தான் வட கொரிய எல்லைக்குப் போய் தென் கொரியா ஒலிபெருக்கிகளை கட்டி திட்டும் பணியை ஆரம்பித்தது.
வட கொரியாவின் கோபத்தை கிளறுவதில் முக்கிய பங்களிப்பு செய்யும் பெருமை அமெரிக்காவுக்கும் சேரும். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் தென் கொரியாவுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடும்.
நூற்றுக் கணக்கான படையினர் நிலத்திலும் நீரிலும் வானத்திலும் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் பயிற்சி செய்தால் எந்த எதிரிக்கு கோபம் வராது.
தற்பாதுகாப்பிற்கான பயிற்சி என்று அமெரிக்கா, தென் கொரிய இந்த இராணுவ ஒத்திகையை அழைத்துக் கொண்ட போதும் பார்ப்பதற்கு ஆக்கிரமிப்பொன்றை நடத்துவதற்கான பயிற்சி ஒன்று போல் தெரிகிறதே என்று வட கொரியா சொல்கிறது.
இந்த இராணுவ ஒத்திகை கடந்த வாரம் நல்லபடியாக ஆரம்பித்தது தொடக்கம் வடகொரிய, தென் கொரிய பற்றும் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாகும்.
அடிப்படையில் வட கொரியாவும் தென் கொரியாவும் இன்றும் யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளாகவே கருத வேண்டி இருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்கு பின் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொரிய தீபகற்பத்தை பங்குபோட்டுக் கொண்டதால் பிறந்த இந்த வட கொரியா, தென் கொரியா பிரச்சினை 1950 ஆம் ஆண்டு யுத்தமாக வெடித்தது.
அமெரிக்கா ஆர்வத்தோடு தென் கொரியாவுக்கு உதவ வட கொரியாவுக்கு சீனா மற்றும் சோவியட் ஒன்றியம் உதவ யுத்தமும் சிறப்பாக நடந்தது.
மூன்று ஆண்டுகள் ஓயாமல் யுத்தம் செய்தார்கள், பின்னர் போதுமென்று நினைத்தார்கள் போல், 1953ஆம் ஆண்டு சண்டை நிறுத்தம் ஒன்று ஏற்பட்டது.
இரு நாடுகளின் எல்லையில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. என்றாலும் இது குத்துமதிப்பான யுத்த நிறுத்தமாகத்தான் இருந்தது.
முழுமையான யுத்த நிறுத்தம் ஒன்று அமைதி உடன்படிக்கைக்கு பின் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சொல்லப்பட்ட அந்த அமைதி உடன்படிக்கை அரை நூற்றாண்டை கடந்து இன்னும் காணோம்.
அதற்கு பதில் இரு தரப்புக்கும் இடையில் யுத்தம் ஒன்றுக்கான சம்பவங்கள் எக்கச்சக்கமாக இருந்து வருகின்றன. அதற்கு உசுப்பேற்றவும் ஒருசில நாடுகள் எங்கே என்று காத்துக் கிடக்கின்றன. இந்த நிலையில் வட, தென் கொரிய தெருச்சண்டையை இன்னும் பல காலத்திற்கு சலிக்காமல் பார்க்கலாம்.
எஸ்.பிர்தெளஸ்
Military guard posts of South Korea (bottom) and North Korea (top) stand opposite each other as seen from in the DMZ border village of Paju