தான் அழகாக இருக்கின்றேனா? என்று கண்ணாடி முன்னின்று தன்னைத் தானே ரசித்து பெருமிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்தாக அமையப் போகின்றது என்பதை தினுஷா சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை
இந்த வார்த்தையை விரும்பாதவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கின்றார்கள். அந்தளவுக்கு அழகு என்ற வார்த்தை எல்லா விடயங்களிலும் வியாபித்திருக்கின்றது.
அதுவும் தன்னுடைய புறத்தோற்றம் அனைவரையும், கவர்ந்திழுக்கும் விதமாக இளமையுடனும், அழகுடனும் காட்சியளிக்க வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புகின்றார்கள்.
இதனால் தான் அழகுக் கலை நிலையங்களும், அழகுசாதனப் பொருட்களும் மக்களை ஆக்கிரமித்து வருகின்றன.
பலர் தமது பணத்தையும், நேரத்தையும் செலவழித்து இத்தகைய விடயங்களை நாடிச் செல்கின்றார்கள். ஆனால், இதில் கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், தன்னுடைய அழகை மெருகூட்டிக்கொள்வதற்காக உபயோகித்த அழகுசாதனப் பொருட்களும், நாடிச் சென்ற அழகுக்கலை நிலையங்களுமே பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, உயிருக்கே உலை வைப்பது போல் அமைந்து விடுகின்றன.
அந்தவகையில் இவ்வாரம் ‘குற்றம்’ பகுதியில் இடம்பெறுவது தன்னுடைய தோற்றம் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக நளினத்துடன் காட்சியளிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து குறித்த விடயமாகும்.
அதுமட்டுமின்றி, தினுஷா சிறு வயது முதலே நவ நாகரிக போக்குக்கேற்ப தன்னுடைய தோற்றத்திலும், நடையுடை பாவனைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாள்.
தன்னுடைய அழகை மெருகூட்டிக்கொள்வதற்கு அழகு சாதனப்பொருட்களினதும், அழகுக்கலை நிலையங்களினதும் உதவியை நாடிச் சென்றாள்.
எனினும், அதுவே தன்னுடைய உயிரைப் பறிக்கும் இயமனாக மாறும் என்பதை தினுஷா சிறிதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை.
தினுஷா பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலை யில் தினுஷாவுடன் நீண்டகாலம் தொழில்புரியும் நண்பியான சந்தமலிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணமிருந்தன.
சந்தமலி சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே தன்னுடைய திருமண வைபவத்துக்கு தினுஷா உட்பட சக ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கியிருந்தாள்.
எனவே, எல்லா இளம் பெண்களைப் போலவே தினுஷாவும் சந்தமாலியின் திருமண அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற நாள் முதல் சந்தமாலியின் திருமண வைபவத்துக்கு எப்படியெல்லாம் அலங்காரம் செய்துகொண்டு அனைவர் மத்தியிலும் சென்று அசத்தலாம் என்று திட்டமிட்டாள்.
அதன்படி தனக்கு பொருத்தமான விதத்தில் நவநாகரிகமான ஆடைகளைத் தெரிவு செய்வதிலும், அதற்கு பொருத்தமான ஆபரணங்களை தெரிவு செய்வதிலும் தன்னுடைய பணத்தையும், நேரத்தையும் செலவழித்தாள்.
அதுமட்டுமின்றி, முன்கூட்டியே அழகுக் கலை நிலையங்களுக்கு சென்று புருவத்தை சீராக்கிக் கொண்டும், முகப் பொலிவுக்கான பேஷியல் வகைகளை செய்துகொண்டும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டாள்.
ஒரு வழியாய் அந்த நாளும் வந்தது. தினுஷா 18 ஆம் திகதி ஆடைத் தொழிற்சாலையில் தனது வேலைகளை முடித்து விட்டு மாலை வேளை வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு தன் சக ஊழியர்களிடம் “நாளை கல்யாண வீட்டுக்கு நானும் அழகாகச் செல்ல வேண்டும் தானே எனவே, அதிகாலையிலேயே பார்லருக்கு சென்று மேக்கப் போட்டுக்கொண்டு தான் கல்யாண வீட்டுக்குச் செல்ல இங்கு வருவேன்.
அப்ப தான் எனக்கு ஈஸீயாகவிருக்கும்.” என்று கூறி மிகுந்த மகிழ்ச்சியுடன் வேலைத்தலத்திலிருந்து விடைபெற்று வீட்டுக்குச் சென்றாள்.
சத்திலுள்ள அழகுக்கலை நிலையமொன்றுக்கு அலங்காரம் செய்துகொள்வதற்காக சென்றாள். அங்கு அழகுக் கலை நிபுணரின் உதவியுடன் அழகாக உடுத்தி, வழமைக்கு மாறான புதிய சிகையலங்காரம், ஒப்பனை அலங்காரம் என்று தன்னை வடிவமைத்துக்கொண்டாள்.
பின்-னர் தான் அழகாக இருக்கின்றேனா? என்று கண்ணாடி முன்னின்று தன்னைத் தானே ரசித்து பெருமிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்தாக அமையப் போகின்றது என்பதை தினுஷா சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போல் அந்த ஆடை, அலங்காரங்களில் ஒரு தேவதையைப் போல் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளித்தாள் தினுஷா.
ஆடைத்தொழிற்சாலையில் அன்றைய தினம் தினுஷாவுக்கு பகுதி நேர வேலை (Half Day)என்பதால் அங்கு தனக்கு நியமிக்கப்பட்டிருந்த வேலைகளைச் செய்து முடித்து விட்டு பிற்பகல் 12.00 மணியளவில் சக ஊழியர்களுடன் இணைந்து சந்தமாலியின் திருமண வைபவத்துக்கு செல்வது அவளுடைய நோக்கமாகவிருந்தது.
எனவே, அழகுக் கலை நிலையத்திலிருந்து நேராக ஆடைத் தொழிற்சாலைக்கு காலை 7.30 மணியளவில் வந்தடைந்தாள்.
தினுஷாவைக் கண்டதும் சக ஊழியர்கள் அவளுடைய அழகில் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். எனினும், அவள் அருகில் வந்தவுடன் அதைச் சிறிதும் வெளிக்காட்டாமல் ஒருவரையொருவர் பார்த்து கண்களால் சைகை காட்டினார்கள்.
தினுஷாவோ “நான் அழகாக இருக்கின்றேனா? எப்படி இருக்கின்றது என்னுடைய டிரஸ், மேக்கப், ஹெயார்ஸ்டைல் எல்லாம்? உங்களுக்கெல்லாம் இன்று என்னை பார்த்தால் பொறாமையாகவிருக்கும் என்று எனக்கு தெரியும்.” என்று ஒரு குழந்தையைப் போல் கூறி மகிழ்ந்தாள்.
அதற்கு சக ஊழியர்களில் ஒருத்தி ” உண்மைதான் இன்று நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கின்றாய். என்று அவளுடைய அழகை ரசித்தபடி கூறினாள்.
அதனைத் தொடர்ந்து மற்ற தோழிகளும் “ஆமாம் தினுஷா இன்று நீ ரொம்ப அழகாக இருக்கின்றாய் எங்கள் கண்ணே பட்டிருக்கும் போல இருக்கின்றது” என்று கூறினார்கள்.
இதனிடையே மற்றுமொரு ஊழியர் “சரி, சரி இப்ப அவளுடைய அழகை பார்த்து ரசித்தது போதும். இருக்கின்ற வேலைகளை விரைவாக முடித்தால் தான் சந்தமாலியின் கல்யாணத்துக்கு நேரத்துக்கு செல்ல முடியும்” என்று சற்று கடிந்துகொண்டாள்.
அதனைத்தொடர்ந்து அனைவரும் தமக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினார்கள்.. அதன்பின்னர் சரியாக மதிய உணவு நேரமாகும் போது தமது வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டு சந்தமாலியின் திருமண வைபவத்துக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
ஆடைத் தொழிற்சாலையில் காணப்பட்ட பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓய்வு அறைக்கு சென்று அனைவரும் அணிந்து வந்திருந்த தமது ஆடைகளையும்,அலங்காரங்களையும் மீண்டுமொரு முறை சீராக்கிக் கொண்டார்கள்.
எனினும், அவர்கள் அனைவரும் விரைவாக ஓய்வு அறையில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள். தினுஷா மட்டும் ஓய்வு அறையிலிருந்து வெளியே வரத் தாமதமானாள்.
எனவே, சக ஊழியர்களில் ஒருத்தி வெளியில் இருந்து “ஐயோ நீ இன்னும் உன்னுடைய அலங்காரங்களை முடிக்கவில்லையா? நேரமாகின்றது. சீக்கிரமாக வெளியில் வா” என்று பலத்த குரலில் கத்தி தினுஷாவை அழைத்தாள்.
இதனைத்தொடர்ந்து ”இவள் என்ன செய்கின்றாள். இவ்வளவு நேரம்? நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள் நான் உள்ளே சென்று தினுஷாவை அழைத்து வருகின்றேன்”. என்று சற்று கோபத்துடன் ஓய்வு அறைக்குள் சக ஊழியர்களில் ஒருத்தி நுழைகின்றாள்.
அப்போது அங்கு அவள் கண்ணெதிரே தினுஷா தலையைப் பிய்த்துக்கொண்ட படியே மயங்கி கீழே வீழ்ந்தாள். அவளுக்கோ! என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அதிர்ச்சியில் வார்த்தைகளும் ஒழுங்காக வரவில்லை. “ஐயோ அனைவரும் சீக்கிரமாக இங்கே வாருங்கள் தினுஷாவுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மயங்கி கீழே வீழ்ந்து விட்டாள்.” என்று பலத்த குரலில் கத்தி தனது சக ஊழியர்களின் உதவியை நாடினாள்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் “ஏன் இவள் இப்படிக் கத்துகின்றாள்? தினுஷா நல்லா தானே இவ்வளவு நேரம் இருந்தாள் அவளுக்கு திடீரென என்ன நடந்தது?” என்று சிந்தித்தவாறே ஓய்வு அறையை நோக்கி படையெடுத்தனர்.
அங்கு தினுஷா சுய நினைவிழந்து கீழே கிடந்தாள். எனவே இந்தச் செய்தி வெகு நேரமாகும் முன்னரே ஆடைத்தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் பரவியது.
ஆடைத்தொழிற்சாலையில் மனித வள அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த அதிகாரிகளும் துரிதமாக தினுஷாவுக்கு முதலுதவிகளை அளிக்க முன்வந்த போதும் அவை எதுவும் அவளுக்கு பயனளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து தினுஷா விரைவாக கண்டி பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். எனினும், அவளை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவளுடைய உயிர் உடலை விட்டு பிரிந்திருப்பதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
எனவே உதட்டுக்கு சாயம் பூசிக்கொண்டிருக்கும் போதே தினுஷா மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்தமையானது அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை வைத்தியர்களுக்கும், பொலிஸாருக்கும் ஏற்படுத்தியுள்ளன.
ஆகையால், தினுஷாவின் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்திய வைத்தியர்கள் அந்த அறிக்கையினை வெளியிடாத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்களை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தினுஷாவின் மரணம் அழகுக் கலை நிலையத்தில் உபயோகித்த இரசாயனப்பொருட்களினாலோ அல்லது தினுஷா பயன்படுத்திய அழகுசாதனப் பொருட்களினாலோ ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே சந்தேகிக்கின்றனர்.
எனவே, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் உப அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தினுஷாவின் சகோதரி இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கையில்,
“என்னோடு உடன் பிறந்த சகோதரி என்று தினுஷா மட்டுமே இருந்தாள். இன்று அவளும் எனக்கு இல்லை. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன்.
அவளுக்கு எங்களுக்கு தெரிந்தவரையில் உயிர் போகும் அளவுக்கு பெரிய நோய் என்று எதுவும் இருக்கவில்லை.
எனது தங்கை 4 வருடங்களாக இந்த ஆடைத்தொழிற்சாலையில் தான் பணிபுரிந்து வருகின்றாள். அவள் கண்டி பிரதேசத்திலுள்ள ஒரு இளைஞனை தான் காதலித்தும் வந்தாள் எங்கள் வீட்டாரும் அவளுடைய திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தே இருந்தார்கள்.
அன்று அவளுடன் தொழில் பார்க்கும் சகோதரி ஒருவரின் திருமண வைபவத்துக்கு செல்வதாகக் கூறியே வீட்டிலிருந்து அன்று அதிகாலையிலேயே சென்றாள்.
அப்போது கூட ஏன்? இவ்வளவு நேரத்துடன் செல்கின்றாய்”? என்று நான் அவளிடம் கேட்டேன். அதற்கு நான் தென்னங்கும்புர பகுதியிலிருக்கும் சலூனுக்கு சென்று மேக்கப் போட்டுக்கொண்டு தான் செல்லப் போகின்றேன் என்று கூறினாள். எனக்கு அவளுடைய இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலையே இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தாள்.
மேலும், இத்தகைய சம்பவங்கள் கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிட்டத்தக்கது.
மேலும் கடந்த சில வாரங்களாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஊடாக நாடு முழுவதும் இயங்கிவருகின்ற அழகுக்கலை நிலையங்களிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, இச்சோதனை நடவடிக்கைகளின்போது பாவனைக்குதவாத அழகுசாதனப்பொருட்களும், காலாவதியான அழகு சாதனப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய அழகுக்கலை நிலையங் கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன், முறையற்ற விதத்தில் நாடு எங்கிலும் இயங்கி வரும் அழகுக்கலை நிலையங்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடுகளைக் காட்டும் மக்கள் அழகோடு நின்றுவிடாது தமது ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பதிவு செய்யப்படாத அழகுக்கலை நிலையங்களையும், தரமற்ற அழகு சாதனப்பொருட்களையும் நாடிச்செல்வது பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையையே இறுதியில் ஏற்ப டுத்திக்கொடுக்கும்.
-வசந்த அருள்ரட்ணம்-
அழகு நிலையத்துக்கு சென்று திரும்பிய யுவதி திடீர் பலி (படங்கள் இணைப்பு)