இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கில் 20
உறுப்பினர்களைத் தமிழ் மக்கள் தெரிவு செய்து தர வேண்டும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் அடிக்கடி கோரி வந்தார்.
அவரது ‘பேராசை’யை தமிழ் மக்கள் நிறைவேற்றாவிடினும், போனஸ் ஆசனம் உட்பட 16 உறுப்பினர்களை அவர்களுக்குத் தமிழ் மக்கள் ‘அள்ளி’வழங்கியுள்ளனர்.
ஓவ்வொரு தேர்தலிலும் மக்களின் வாக்குகளைக் கொள்ளை அடிப்பதற்காக, ஏதாவதொரு ‘புலுடா’க் கதைகளை தமிழ் தலைமைகள் மக்கள் முன் வைப்பது வழமை.
முன்னைய தேர்தல்களின் போது, ‘சர்வதேசம்″ தமிழ் மக்களை உற்றுப் பார்க்கிறது. எனவே உங்கள் பலத்தை எமக்கு வாக்களிப்பதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக் காட்டுங்கள்’ என்ற வாய்ப்பாடே அவர்களது தேர்தல் தாரக மந்திரமாக இருந்தது.
ஆனால் இம்முறை அந்த வாய்ப்பாடு மக்களிடம் எடுபடாது என்பது கூட்டமைப்புத் தலைமைக்கு நன்கு தெரிந்திருந்தது. அத்துடன், ‘ஒரு நாடு, இரண்டு நிர்வாகங்கள்’ என்ற கோசத்தை முன்வைத்த, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி இருந்தது.
இந்த நிலைமையில் கூட்டமைப்புத் தலைமை ஒரு தந்திரத்தைக் கையாண்டது. அதாவது, ‘ஜனவரி 08இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாற்று அணி வேட்பாளரை ஆதரித்து ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு
வந்துள்ளோம்.
அதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு 2016இல் நிச்சயம் தீர்வு ஏற்படும். இந்த நிலைமையில் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதன் கரத்தைப் பலப்படுத்துங்கள்’ என்ற கோரிக்கையை விடுத்து, வாக்குக் கொள்ளையை நடாத்தி முடித்துள்ளனர்.
தமது அந்தக் கோரிக்கைக்குச் சாதகமாக யாழ் மறை மாவட்ட ஆயர், நல்லை ஆதீனம் போன்றவர்களையும்
கருத்துச் கூற வைத்தனர்.
அதன் காரணமாக, ஆரம்பத்தில் கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரித்து நின்ற, யாழ் பல்கலைக்கழக சமூகம், புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளான கனடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை என்பவையும் பிற அமைப்புகளும் தமது நிலையை மாற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அறிக்கை விடுத்தன.
அதனால், ‘படித்தவனும், வெளிநாட்டில் உள்ளவனும் சொன்னால் அதில் ஏதும் உண்மை இருக்கும்’ எனக் கருதிப் பழகிப் போ தமிழ் மக்கள், தமது வாக்குகளைக் கூட்டமைப்புக்கு அள்ளிப் போட்டு அவர்களை வெற்றி பெற வைத்துவிட்டனர்.
எவராவது, தேர்தலுக்கு முன்னர், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரும் சமஸ்டி வழங்கப்பட மாட்டாது, கூட்டமைப்புடன் அது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தையும் கிடையாது’ என அழுத்தம் திருத்தமாகப் பிரகடனம் செய்த ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப் பற்றியோ, அல்லது ‘இலங்கையில் ஒற்றையாட்சி முறைதான் தொடரப்படும்’ எனப் பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புப் பற்றியோ கவனத்தில் எடுத்ததாகவோ அல்லது அக்கறை செலுத்தியதாகவே தெரியவில்லை.
5 வருடங்கள் கழித்து இருக்கின்ற அற்ப சொற்ற உரிமைகளையும் தமது வங்குரோத்து அரசியலால் இழந்த பின்னர், தமிழ் தலைமை தமிழ் மக்களின் முன்னால் வந்து நின்று புதிதாக ஏதாவது ஒரு மோசடித் திட்டத்தை முன் வைக்கும் போது, அதையும் ஏற்றுத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழ் தலைமைக்கு இருக்கும் வரை, அவர்கள் எதற்கும் தயங்கப் போவதில்லை.
-சயம்பன்-
மேலும் செய்திகளை பார்வையிட: https://www.facebook.com/ilakkiyainfo