தலிபான் தலைவர் முல்லா உமருக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அடைக்கலம் அளித்ததாக அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் 2001–ம் ஆண்டு நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
முல்லா உமரின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தப்பிய முல்லா உமர் 2 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்து, அதுபற்றிய தகவல்கள் சமீபத்தில்தான் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், தனது தனிப்பட்ட இ–மெயில் முகவரியை அரசு கடிதப்போக்குவரத்துக்கு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில் அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டபடி, அவர் எழுதிய இ–மெயில்கள், அவருக்கு வந்த இ–மெயில்கள், தொகுதி தொகுதியாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முல்லா உமரை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் பாதுகாத்து வந்தது என ஹிலாரி கிளிண்டனுக்கு சிட் என்ற பெயரில் எழுதப்பட்ட இ–மெயில் தெரிவிக்கிறது.
அதில் முல்லா உமர், குயெட்டா நகரில் பாதுகாப்பான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.எஸ்.ஐ.க்கும், முல்லா உமருக்கும் தொடர்பு கிடையாது என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்ததும், முல்லா உமர் பாகிஸ்தானில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அமெரிக்காவும் கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.