பிரபலங்கள் சமூகவலைதளங்களில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது புதிதல்ல.
பலரை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்நிலையில் டுவிட்டர் சிக்கலில் சிக்கியுள்ளார் பாடகி சின்மயி. ஏற்கனவே டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு மூச்சுத் திணற திணற அடிவாங்கிய அவர் இம்முறை அஜித் – விஜய் ரசிகர்களிடையேயான மோதலில் சிக்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி தனது பேஸ்புக் ஊடாக பதிலடியும் வழங்கியுள்ளார்.
ஆவணி அவிட்டம் அன்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா, மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகனுக்கு ‘தல ஆவணி அவிட்டம்’ என்று தெரிவித்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர் “தல என்ற வார்த்தை எதற்கு எடுத்தாலும் பயன்படுத்தாதீர்கள். தல என்றால் எங்க அஜித் சார் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.
மாதவன் வெளியிட்ட ட்வீட்டையும், ரசிகரின் கருத்தையும் வைத்து பலர் கிண்டல் செய்து வந்தார்கள். இதனை சின்மயி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு ‘கடவுளே’ என்று குறிப்பிட்டார்.
அவர் வெளியிட்ட உடனே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே சின்மயியை கடுமையாக திட்டி தீர்க்க ஆரம்பித்தார்கள்.
தொடர்ச்சியான ரசிகர்களின் தொந்தரவைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார் சின்மயி.
அப்பதிவில் சின்மயி கூறியிருப்பது:
“சமூக வலைதளங்களை இன்று பிடித்திருக்கும் மிகப்பெரிய நோய் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு ரசிகர் அல்லது அவரை பிடிக்காதவர் என்று புரிந்துகொள்ளப்பட்டால், கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் தாக்குதலை எதிர்பார்க்கலாம்.
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் சார்பாக அவமதிப்பை எதிர்கொள்ள அவர்களது எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்கள் (பெரும்பாலும் ஆண் ரசிகர்கள்). தொடர்ந்து ஆபாசமாக வசை பாடி அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
எனக்குத் தெரிந்து இந்த நட்சத்திரங்கள் யாருக்கும் இணையத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அப்படி மோசமாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் டாக்டர்கள், என்ஜினியர்கள் போல படித்தவர்களாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட இளைஞர்கள் கையில் தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “ஒருவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். வழிபாடு செய்யாதீர்கள்” என ஒருவர் பேசினார்.
நாம் எல்லோருமே எதாவது ஒரு விளையாட்டு வீரருக்கோ, நடிகருக்கோ, இசைக் கலைஞருக்கோ, விஞ்ஞானிக்கோ ரசிகராக இருப்போம்.
ஆனால் அந்த ரசிப்புத் தன்மை எல்லை தாண்டி, வேறொருவரின் ரசிகரை மோசமாகப் பேசும்வரை சென்றால், நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நாம் மோசமான எடுத்துக்காட்டாகவே இருப்போம்.
உதாரணத்துக்கு – வாட்ஸாப்பில் நகைச்சுவை மீம் ஒன்றை வேடிக்கையாகப் பகிர்ந்தேன். அது எந்த வரம்பையும் மீறாத நகைச்சுவையே.
எனது நண்பர்களில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர் அதைக் கண்டு சிரித்து, மறந்தும் விட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் உடனே என்னை வசை பாட ஆரம்பித்தார்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு டாக்டர்.
திருமணமாகி, பெண் குழந்தை உள்ளவர். தனக்குப் பிடித்த நடிகரை கிண்டல் செய்வதை பொறுக்க முடியாமல், சமூக வலைதளத்தில், ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவள் என்று தகாத வார்த்தைகளில் ஏசும் அளவுக்கு அவர் எல்லை மீறுகிறார்.
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பிரபலமான ஒருவர், ஒரு நகைச்சுவையைப் பகிர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட ரசிகர் உண்மையான ரசிகரா என்பதை, அவரது பக்கத்துக்குச் சென்று ஆராய்ந்து விட்டு பிறகு பகிர வேண்டும் என்பதா?
நாங்கள் எதாவது சொன்னால் “நீ இதை விளம்பரத்துக்காக செய்கிறாய்” என்ற குற்றச்சாட்டு வேறு.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், நான் பாதிக்கப்பட்ட பெண்ணாக உணரவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என்னைப் போல ஒருவர், “எனக்கு கத்தி ட்ரெய்லர் பிடித்துள்ளது” என ட்வீட் செய்தால் அடுத்த நொடி ஆபாச பின்னூட்டங்களும், வசைகளும் தொடரும்.
இம்மாதிரியான சம்பவங்களில், பெண்களைப் போல ஆண்களும் ஏசப்படுகிறார்களா என்பது தெரியவில்லை. இதே போல கத்தி படம் பிடித்திருந்தது என்று ட்வீட் செய்த ஆலிஷா அப்துல்லா என்ற வீராங்கனையும் இப்படியான வசைகளை எதிர்கொண்டார். பல ரசிகர்கள் இப்படியான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
இணையம் சுதந்திரமான தளமாக இருக்க வேண்டும். ஒவ்வொருக்கும் அதில் தங்களது கருத்துகளை பகிர உரிமை இருக்க வேண்டும். அந்த கருத்து மற்றவர்களை காயப்படுத்தினாலும் அதற்கு பதிலாக ஏன் தவறாகப் பேச வேண்டும்?
நமது தலைமுறை தான் இணையத்தின் வீச்சை, பலன்களை அனுபவித்து வருகிறது. நமது எல்லைகளை நாமே வரையறைத்துக் கொண்டு தனிப்பட்ட அளவில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நமது எதிர்கால சந்ததிக்கு எதை விட்டுச் செல்கிறோம்? நமது தலைமுறை எப்படிப்பட்டது என தெரிந்து கொள்வார்கள்? இதுதான் நாம் எதிர்காலத்தை உருவாக்கும் விதமா? நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையேயான சமூக வலைத்தளப் போர் என்பது தொடர் கதையாகி வருகிறது.