இலங்கையில் 90க்கும் அதிகமான அமைச்சர்களை நியமிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த பிரேரணை 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 143 பேரின் ஆதரவுடன் நிறைவேறியது.

நாடாளுமன்றம் அளித்துள்ள ஒப்புதலின்படி காபினட் அந்தஸ்தில் 48 பேரும், துணை அமைச்சர்களாக 45 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது சட்டத்திருத்தமானது அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே காபினட் அமைச்சர்களாக இருக்க வழி செய்திருந்தது.

ஆனாலும் தேசிய அரசாங்கம் என ஒன்று அமையும்போது, அமைச்சரவையில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கலாம் என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யலாம் எனவும் அதன் பிறகு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம் கூறியது.

அமைச்சரவையின் எண்ணிக்கையை 93 எனும் அளவுக்கு உயர்த்துவதை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் எதிர்த்துள்ளனர்.


எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு

1845981247sampanthan38 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர்:

எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தன் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை வரலாற்றில் 38 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு ஏ. அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version