ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இப்போது தீவிரம் பெற்றிருக்கின்றன.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், பாராளுமன்றத் தேர்தலை அண்டிய காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
அது, அப்போதைய ஆட்சியாளர்களை மடக்குகின்ற முன்னைய ஆட்சியின் போது, நடந்த சம்பவங்களை வாக்காளர்களுக்கு நினைவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய நிலையில், இந்த விசாரணைகளின் போக்கு, அதற்கு அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
அதாவது, இலங்கையின் நீதிப் பொறிமுறையின் மீது நம்பகத்தன்மையை உருவாக்குதல், போரின் போது நடந்த மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக நம்பகமான உள்ளூர் விசாரணையை நடத்தும் ஆற்றல் இலங்கைக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துதல் தான் இந்த விசாரணைகளின் முக்கிய இலக்காக மாறியிருப்பதாகவே தெரிகிறது.
குறிப்பாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நான்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் மூலம், ராஜகிரியவுக்கு வரவழைக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணைகளில் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதற்குப் பின்னர், அப்போது மேஜர் நிலையில் இருந்த கிரித்தல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி ஒருவர் அவரை வெளியில் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
இதனால் தான், பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன, சமயத்தில் கிரித்தல இராணுவ முகாமில் பணியாற்றிய நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்திருந்தது.
இவர்களை விசாரணைக்காக கையளிக்குமாறு இராணுவத் தலைமையகத்துக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு இராணுவத் தலைமை செவிசாய்க்கவில்லை.
அவர்களைப் பாதுகாக்க இராணுவத் தலைமை முற்படுவதாகவும், சந்தேகநபர்களை ஒப்படைக்க மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசுக்குச் சாதகமாக அமையாது போனால், விசாரணைகள் திசை திரும்பும் என்ற நம்பிக்கையில், தேர்தல் முடியும் வரை இழுத்தடித்த இராணுவத் தலைமை கடைசியாக அவர்களை விசாரிக்க அனுமதித்தது.
ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர், குறித்த 4 பேரையும் கைது செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவு முடிவு செய்தபோது, அதற்கு, பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதில் லெப்.கேர்ணல் அதிகாரிகள் இருவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியவர்கள் என்றும், அவர்களைக் கைது செய்யக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களின் அழுத்தங்களைப் புறக்கணித்தே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
இந்தச் சூழலில்தான், கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலும், மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும், பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சந்தியா எக்னெலிகொட காணாமற்போன தனது கணவனுக்கு நீதி கோரி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கும் சென்றிருந்தவர்.
இப்போது அவரை அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்தித்திருப்பது, பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து கேட்டறிவதற்காக எனக் கருத முடியவில்லை.
இம்முறை அவர் ஜெனீவாவுக்கு செல்வதை தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
அல்லது அவரை வைத்து, உள்நாட்டு விசாரணைகளின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அல்லதுநம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
வடக்கு, கிழக்கில் காணாமற்போனோருக்காக நடத்தப்படும் போராட்டங்களைப் போலவே, சந்தியா எக்னெலிகொடவின் போராட்டங்களும் சர்வதேச கவனத்தை ஈர்த்தவை என்பதில் சந்தேகமில்லை.
எனவே, பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் குறித்த விசாரணைகளின் ஊடாக, படையினருக்கு எதிரான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்கிறது என்ற கருத்தை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இதனைக் கருத வேண்டும்.
மிருசுவில் படுகொலை வழக்கில், ஒரு இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நடவடிக்கையாகும்.
இலங்கை மீது உள்ள பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பதாகும்.
தண்டனையில் இருந்து தப்பிக்கும் பாரம்பரியம் இலங்கையில் தொடர்வதாக அமெரிக்காவின் ஒவ்வொரு அறிக்கையிலும் இடம்பெற்றிருந்ததை அவதானித்திருக்கலாம்.
மனித உரிமை மீறல்களுக்கு இணையாக இந்த தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளல் என்ற விடயம் பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வழிகள் இருப்பதால் தான், மனித உரிமைகளுக்கு மதிப்பற்ற சூழல் ஏற்படுவதாக – மனித உரிமை மீறல்களுக்கு ஊக்கமளிப்பதாக மேற்குலக நாடுகள் வலுவாக நம்புகின்றன.
இதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தின் பின்னர், இலங்கையின் நீதிப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியது.
*அதற்கு முக்கியமான காரணம், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தான்.
இதன் ஊடாக, தமது பிரதான திட்டம் அல்லது இலக்கு சுலபமாக நிறைவேறும் என்று அமெரிக்கா கருதுகிறது.
அதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளான எவரையும், நீதியின் முன் நிறுத்தும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி விட்டால், உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளின் மீதான மக்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
அது, உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக தமிழ்மக்களையும் திருப்பி விடும் என்று நம்புகிறது அமெரிக்கா.
பிரகீத் எக்னெலிகொட வழக்கின் மீதான நடவடிக்கைகள், இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு நகர்வேயாகும்.
எனினும், இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் மீது நம்பிக்கையை எற்படுத்தி விட முடியாது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று கருதப்படுவோருக்கு முறைப்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் வரையில், இதன் மீது நம்பிக்கை உருவாகப் போவதில்லை.
ஏற்கனவே, வெலிவேரிய – ரதுபஸ்வெலவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ அதிகாரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு செய்த பரிந்துரையை தற்போதைய அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.
அதற்கு சம்பந்தப்பட்ட படை அதிகாரிகள் போரில் முக்கிய படையணிகளை வழிநடத்தியவர்கள் என்பதே ஒரே காரணமாக இருக்கிறது.
போரில் சம்பந்தப்பட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த படையினர் அல்லது அரசியல்வாதிகள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிங்கள அதிகார வர்க்கத்தின் சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
தமிழர்களைப் பொறுத்தவரையில் மூதூர் படுகொலை உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவோ, நீதி வழங்கப்படவோ இல்லை என்ற குறைபாடு ஆழமாக இருக்கிறது.
இப்படியான நிலையிலும், போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த படையினரும், அரசியல்வாதிகளும் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிங்கள அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படாத நிலையிலும், உள்நாட்டு விசாரணைக்கு சாதகமாக தமிழர்களைத் திருப்புவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது.