முஸ்லிம் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாதையில் பயணிப்பது ஒருபுறமிருக்க, சமகாலத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமக்குள் அடுத்தகட்ட முரண்பாட்டையும் சந்தித்திருக்கின்றன.
பாரியதொரு பிளவையும் அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் அரசியல் செயற்பாட்டுத் தளத்தில் மேலும் பின்னடைவையும் செய்விக்கக் கூடிய அளவுக்கு இம் முரண்பாடுகள் வலுவடைந்திருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என எல்லா சிறு முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறான நிலைமை ஒன்றுக்குள் சிக்குண்டுள்ளமை – திரைமறைவு இரகசியமாகும்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் றிசாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சில அனுகூலங்களை கொண்டுவந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் அதிக்கம் மிகுந்திருந்த அம்பாறை மாவட்டம் போன்ற இடங்களில் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியமை சமூக அடிப்படையில் நோக்கினால் அல்லது வாக்குகள் சிதறுண்டு போகின்றது என்ற அடிப்படையில் நோக்கினால் அது மிகப் பெரிய சமூகத் துரோகமாகும். ஆனால் அது தவிர்க்க முடியாதது.
முஸ்லிம் காங்கிரஸூம் தேசிய காங்கிரஸூம் தம்முடைய கோட்டைகளை பலப்படுத்தாததன் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்து களமிறங்கியது.
மு.கா. தலைவர் தனது சொந்த லாபத்தை முன்னிறுத்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிடும் முடிவை எடுக்காமல் விட்டிருந்தாலோ, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா தனித்து குதிரைச் சின்னத்தில் பந்தயம் கட்டியிருந்தாலோ – மக்கள் காங்கிரஸின் மயிலுக்கு விழுந்த வாக்குகளை குறைத்திருக்கலாம்.
ஆக, தவறு விட்டது ஹக்கீமும் அதாவுல்லாவுமே. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி றிசாட் மயிலாட்டத்தை ஆரம்பித்தார். அரசியலில் இதுவெல்லாம் மிகவும் சகஜனமானதும் கூட.
இத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்டின் பெயரையும் அக்கட்சி தலைவர் றிசாட் போட்டிருந்தார்.
ஆனால் எல்லாம் முடிந்த பிறகு தேசியப் பட்டியலை சுழற்சி முறையில் வழங்குவதற்கு தீர்மானித்த கட்சித் தலைமை முதல் சுற்றிற்காக எம்.எச்.எம். நவவிக்கு வழங்கியிருக்கின்றது. இதனால் வை.எல்.எஸ். ஹமீட் மனமுடைவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.
ஆனால், ஹமீட் ஒரு செயலாளர் என்ற பதவிநிலையை தாண்டி அரசியல் செய்ததை தேர்தல் காலங்களில் காண முடியவில்லை.
தனது வீட்டுச்சுவரில் ‘கல்முனை தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம்’ என்று நான்கைந்து சுவரொட்டிகளை ஒட்டியதை தவிர பெரிதாக வேறெந்த பிரசாரத்தையும் அவர் செய்யவில்லை.
அதாவது போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது போல தேசியப்பட்டியலை பாதுகாப்பதற்கு அவர் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறலாம்.
கல்முனையில் கட்சியில் செயலாளர் இருந்தபோதும் அம்பாறை தேர்தல் களத்திற்கு எல்லாவற்றையும் புதிததாக ஆயத்தம் செய்ய வேண்டியிருந்ததாக தலைவர் றிசாட் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கின்றார்.
இந்த பின்னணியே – நவவிக்கு தேசியப்பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கப்பட காரணமாக இருந்திருக்கும்.
தேசியப்பட்டியல் ஹமீட்டிற்கு கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில், றிசாட் பற்றிய ஊழல்களை வெளியிடப் போவதாக செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்டின் பெயரை மேற்கோள்காட்டி இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆனால் கடைசிநிமிடம் வரைக்கும் இதற்கான மறுப்பறிக்கையை ஹமீட் விடவில்லை என்பதை வைத்துப்பாக்க்கின்ற போது – ஒன்றில் அவர் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்கின்றார், அல்லது அவரது அரசியல் அனுபவ அறிவு முதிர்ச்சியடைவில்லை என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.
கடைசி நிமிடம் என்பது – ஹமீட்டை செயலாளர் பதவியில் இருந்து றிசாட் அறிவிக்க முடிவெடுத்த தருணமாகும்.
கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி, செயலாளரை நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்த சமயத்திலேயே ஹமீட்டிற்கு எல்லாம் விளஙகியது.
‘ஐயோ இந்த செய்திகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று சத்தியமிட்டார். ஆனால் தலைவரின் கணக்கில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. பிளவுக்கு முன்னரான சூழல் தோற்றுவிக்கப்பட்டு விட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை துதித்துக் கொண்டு மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்தமை, முன்னொரு தடவை ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பிரதி கல்வி அமைச்சராக இருந்ததை மறந்துவிட்டு ரணில் விக்கிரமசிங்கவின் பஸ்ஸில் ஏறமாட்டேன் என்று பொதுத் தேர்தல் மேடைகளில் கூறியமை, மஹிந்தவின் சின்னமாக மக்களின் மனதில் பதிந்து விட்ட வெற்றிலையில் போட்டியிட்டமை என்று பல அரசியல் காரணங்களால் அவர் தோற்றுப் போனார்.
அதைவிட முக்கியமாக – பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது வாய்மூடி இருந்தது போதாது என்று சம்பவங்களை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டமை, வாக்காள மக்களுடனான தொடர்பை பேணாமை போன்ற காரணங்களால் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டிருக்கின்றார்கள்.
அதாவுல்லாவின் தோல்வி – தேசிய காங்கிரஸின் இரண்டாம் நிலை தலைவருக்கு சமமான அந்தஸ்தில் இருக்கும் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண அமைச்சருமான உதுமாலெப்பைக்கு, சில விடயங்களை சிந்திக்க தூண்டியிருக்கின்றது.
தன்னைக் கூட தக்கவைத்துக் கொள்ளாத ஒரு தலைவரின் பின்னால் தொடர்ந்தும் இருப்பது தனது அரசியல் எதிர்காலத்தை சூனியத்திற்குள் தள்ளிவிடும் என்று அவர் எண்ணுகின்றார்.
அதாவுல்லாவுக்கே வாக்களிக்காத மக்கள் தமக்கு வாக்களிப்பார்களா என அவர் சிந்திக்கின்றார். மறுபுறத்தில் அவரது ஆதரவாளர்களும் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறுமாறு கடுமையான அழுத்தத்தை பிரயோகித்துள்ளனர்.
ஆனால் தனது சொந்த பிரதேசத்தில் மு.கா.வுக்கு ஆதரவான மக்களே அதிகமிருப்பதால் மு.கா.வுடன் இணைந்து அரசியல் செய்வது அவருக்கு இலகுவானது.
மு.கா., மக்கள் காங்கிரஸ், ஐ.தே.க ஆகிய கட்சிகளிடையே அவரது முதற் தெரிவு முஸ்லிம் காங்கிரஸாகவே இருக்கும். மு.கா.வின் அடிமட்ட நலன்விரும்பிகள் சிலர் இது விடயத்தில் உதுமாலெப்பையை தொடர்பு கொண்டுள்ளனர். மு.கா. மேலிடத்திற்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக நம்பகமாக தெரிய வருகின்றது.
ஒருவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இவரை இணைத்துக் கொள்ள விரும்பினாலும் கூட, உதுமாலெப்பையை கட்சிக்குள் எடுப்பதற்கு அவரது சொந்த ஊரைச் சேர்ந்த மு.கா. மாகாண சபை உறுப்பினரும், எம்.பி. கனவு காணும் வேறு சிலரும் நிச்சயம் எதிர்ப்பார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.
உதுமாலெப்பை போன்ற ஒருவரை உள்ளே எடுப்பது தமது எதிர்காலத்திற்கு ஆப்பாகி விடுமோ என்று அவர்கள் எண்ணுவதாகவும் கூறமுடியும்;. இதே நேரத்தில் மு.கா.வுக்கு உதுமாலெப்பையை உள்ளே எடுக்க வேண்டிய எவ்வித நிர்ப்பந்தமும் இப்போது இல்லை.
ஆனால் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவுக்கு மானசீகமான விசுவாசியாவார்.
எக்காரணம் கொண்டும் அக் கட்சியில் இருந்து அவர் விலகி செல்ல மாட்டார் என்று நம்பப்படுபவர். தனக்கு அரசியல் முகவரி தந்த அதாவுல்லாவை, உதுமாலெப்பை தன்னுடைய சொந்த அரசியலுக்காக விட்டுச் செல்லமாட்டார் என்று இன்னும் நம்பப்படுகின்றது.
உண்மையில் அவரும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றே தெரியவருகின்றது. அண்மையில் அதாவுல்லா மக்களிடையே ஆற்றிய உரையும் அவருடனான சந்திப்பும் உதுமாலெப்பையின் முடிவை தாமதமாக்கியிருக்கலாம் அல்லது இரத்தாக்கி இருக்கலாம்.
ஆனால், அவருடைய ஆதரவாளர்களின் அழுத்தமா அல்லது அதாவுல்லாவின் அன்பா ஜெயிக்கப் போகின்றது என்பதே – தேசிய காங்கிரஸிற்குள் பிளைவை தீர்மானிக்கும் கடைசிக் காரணியாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு மிக முக்கியமானதாகும்.
சிரேஷ்ட – கனிஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான அதிகார போட்டி, எல்லா உறுப்பினர்களுக்கும் பதவி மீது ஏற்பட்டிருக்கும் ஆசை, பணம் உழைக்க வேண்டுமென்ற வியாபார புத்தி என்பனவே பொதுவாக முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்படுவதற்கு வெளிப்படையாக தெரியும் காரணமாகும்.
ஆனால் கட்சித் தலைவரின் பக்குவமற்ற தன்மையும், பிரதேசவாத மனப்பாங்கும், மூத்த உறுப்பினர்களை மதிக்காத தன்மையுமே மேற்சொன்ன பிரச்சினைகள் எழுவதற்கு அடிப்படை காரணமாகும் என்பது விஷயமறிந்தோருக்கு மட்டுமே தெரியும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் கட்சி உறுப்பினர்களிடையே இருக்கின்றன. அஷ்ரஃப் என்ற தலைவர் எதற்காக முஸ்லிம் காங்கிரஸை எதற்காக தொடங்கினாரோ அந்த பாதையில் இருந்து கட்சி விலகிச் செல்வதற்கு ஹக்கீமே அடிப்படை காரணம் என்று மு.கா. ஆரம்பகால போராளிகள் கூறுகின்றனர்.
வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை கையாள்வதற்கே மு.கா. ஸ்தாபிக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய கட்சித் தலைவருக்கு அது பற்றி பெரிதாக அக்கறை இருப்பதாக தெரியவில்லை. வடக்கு கிழக்கிற்கு வாக்குத் தேடி வருகின்ற ஹக்கீமுக்கு அம்மக்களின் பிரச்சினையை பற்றிய அறிவோ அதனை தீர்த்து வைப்பதில் இதய பூர்வமான அக்கறையோ கிடையாது என்று மு.கா. உறுப்பினர்களே கூறுகின்றனர்.
கிழக்கு மாகாண மக்களை விட தமது கண்டி பிரதேச மக்களுக்கே தலைவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
தொழில்வாய்ப்பு தொடக்கம் – அமைச்சுக்குள் இருக்கின்ற பெரிய பதவிகள் வரைக்கும் இதுதான் நடக்கின்றது. ஆரம்பம் தொட்டு ஹக்கீமின் தலைமைத்துவத்தை அவதானித்துக் கொண்டு அதன்கீழ் செயற்பட்டு வந்த உறுப்பினர்கள் இப்போது கடுமையாக மனமுடைந்து போயிருக்கின்றனர்.
ஆனால் வேறு ஒரு பலமான கட்சி இல்லை என்பதாலும் மு.கா.வை மானசீகமாக நேசிப்பதாலும் சில உறுப்பினர்கள் இன்னும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் அங்கம் வகிக்கின்றனர்.
மக்களுக்கும் இது தெரியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தம்முடைய தாய்போன்ற கட்சி என்பதாலும் மறைந்த தலைவர் அஷ்ரஃபிற்காகவுமே மக்கள் அக்கட்சியை ஆதரிக்கின்றனர். தவிர றவூப் ஹக்கீமிற்காக கட்சிக்கு கிடைக்கும் ஆதரவு மிக சொற்பமானதே.
ஆனால் கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை தலைவர் ஹக்கீம் துஷ்பிரயோகம் செய்வதாக முக்கியஸ்தர்கள் சிலர் அங்கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலோ அல்லது குறைந்தபட்சம் கல்முனை கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொடுப்பதிலோ ஹக்கீமுக்கு விருப்பமில்லையாம்.
இம்முறை தேர்தலில் தனியாகச் சென்று ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்தமை, கட்சியின் செயலாளருக்கு தெரியாமலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானித்தமை என ஏகப்பட்ட விடயங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.
ஹக்கீமிடம் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் உறுப்பினர்கள் இவ்விடயங்களை கண்டும் காணாது போல் இருக்கின்றனர். அவரை தட்டிக் கேட்கின்ற மூத்த உறுப்பினர்களை ஹக்கீம் ஓரம்கட்ட பார்க்கின்றார்.
ஆனால், மக்கள் காங்கிரஸ் அல்லது தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு பலமிக்க கட்சியாக உருவெடுத்தால்… மு.கா.விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்ளக முரண்பாடு பிளவாக உருவெடுக்கும்.
– மொஹமட் பாதுஷா