“என்னால் தமரா இல்­லாமல் வீட்டில் இருக்­க­மு­டி­ய­வில்லை. நானும் அவளும் நீண்­ட­காலம் காத­லித்தே திரு­மணம் செய்து­கொண்டோம். ஆயினும், அப்­போ­தி­ருந்தே தம­ராவின் தாய் அனோ­மா­வுக்கு என்னைப் பிடிக்­க­வில்லை.

எங்கள் இரு­வ­ரையும் பிரிப்­ப­தற்கு பல்­வேறு சதித்­திட்­டங்­களை தீட்­டினாள். பிறகு நான் தம­ராவை அவ­ளு­டைய தாய்க்குத் தெரி­யாமல் அழைத்துச் சென்று திரு­மணம் செய்­து­கொண்டு என்­னோடு அழைத்துச் சென்­று­விட்டேன்.

எனினும், அதன்­பின்னும் அவர் எங்கள் இரு­வ­ரையும் நிம்­ம­தி­யாக வாழ விட­வில்லை. தம­ரா­விடம் என்னைப் பற்றி குறை­யாகக் கூறி எனக்கும் தம­ரா­வுக்கும் இடையில் பிரச்­சி­னை­களை உண்­டு­பண்­ணினாள்.

அது தான் தமரா என்னை விட்டு சட்­ட­ரீ­தி­யாகப் பிரிய முடி­வெ­டுத்­த­தற்கு காரணம். இதனால் நான் பெரும் அவமா­னத்­துக்­குள்­ளானேன். எனவே தான் ஆத்­தி­ரத்தில் இரு­வ­ரையும் கொலை செய்யத் திட்­ட­மிட்டேன். “

இது அனோமா என்ற 47 வய­தான பெண்­ணொ­ரு­வரைக் கொலை செய்த சந்­தேக நபர் பொலிஸ் விசா­ர­ணையின் போது வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் ஒரு பகு­தி­யாகும்.

எனினும், இச்­சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போது சந்­தேக நபர் தொடர்­பாக கிடைக்­கப்­பெற்ற தக­வல்கள் சந்­தேக நபர் வழங்­கிய இந்த வாக்­கு­மூ­லத்­துக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்கவில்லை.

எனவே, இச்­சம்­பவம் தொடர்­பாக மிகவும் துல்­லி­ய­மாகத் தமது விசா­ர­ணை­களை கிரி­எல்ல பொலிஸார் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

அதன் அடிப்­ப­டையில், இச்­சம்­பவம் தொடர்­பாக நோக்­கு­வோ­மானால், அனோமா கிரி­எல்ல பகு­தியை வசிப்பிடமாகக் கொண்­டவள்.

திரு­ம­ண­மாகி இளம் வய­தி­லேயே கண­வனை இழந்த நிலையில் தனது ஒரே மகள் தம­ரா­வுடன் தனி­யாக வாழ்ந்தாள்.

ஒரு தனி மனு­ஷியாய் நின்று தம­ராவை வளர்த்து ஆளாக்­கினாள். எனினும், அவள் பட்ட கஷ்­டங்கள் அனைத்தும் “விழ­லுக்கு இறைத்த நீர் போல்” பய­னற்றுப் போனது.

தம­ரா­வுக்கு 19 வய­தா­க­வி­ருக்கும் போது இரத்­தி­ன­புரி பிர­தே­சத்தைச் சேர்ந்த சுகந்­தவின் (பெயர் மாற்றப்பட்­டுள்­ளது.) அறி­முகம் கிடைத்­தது.

ஆரம்­பத்தில் இரு­வரும் நல்ல நண்­பர்­க­ளா­கவே பழக ஆரம்­பித்­தார்கள். எனினும், நாட்கள் செல்லச் செல்ல நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி. இரு­வரும் காதல் எனும் வானில் சிற­க­டிக்க ஆரம்­பித்­தார்கள்.

தமரா சுகந்­தவை கண்­மூ­டித்­த­ன­மாக நம்பிக் காத­லித்தாள். இரு­வரும் அடிக்­கடி சந்­தித்துப் பேசி தமது காதல் உற­வினை வளர்த்துக் கொண்­டனர்.

இவ்­வாறு சுமார் 6 மாதங்கள் தொடர்ந்த இரு­வ­ருக்கும் இடை­யி­லான காதல் விவ­காரம் அனோ­மாவின் காதுகளுக்கு எட்­டி­யது.

எனினும் அனோமா வழ­மை­யாக எல்லா தாய்­மார்­க­ளையும் போல தம­ராவை கண்­டிக்க நினைக்­க­வில்லை. மாறாக, அவ­ளிடம் பக்­கு­வ­மாகக் கேட்டாள்.

இதன்­போது தமரா, “அம்மா நான் சுகந்த என்­ப­வரைக் காத­லிக்­கின்றேன். அவரும் என்னைக் காத­லிக்­கின்றார்.” என்று கூறினாள்.

இத­னைத்­தொ­டர்ந்து அது­பற்றி மேல­தி­க­மாக எதுவும் தம­ரா­விடம் அனோமா கேட்­க­வில்லை. மௌனமாகவிருந்தாள்.

எனினும், அனோமா அத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. ஒரு பொறுப்­புள்ள தாயாக தமரா காத­லிக்கும் நபர் பற்றி விசா­ரித்துப் பார்க்க ஆரம்­பித்தாள்.

அவ்­வாறு விசா­ரித்துப் பார்த்­ததில் சுகந்த தன் மக­ளுக்கு பொருத்­த­மா­னவன் அல்ல என்­பதை அவள் புரிந்துகொண்டாள். எனவே, அனோமா மக­ளிடம் இது­பற்றி பக்­கு­வமாய் எடுத்துக் கூறினாள்.

“ மகள், நீங்கள் சுகந்­தவை விட்டு வில­கு­வது நல்­லது. அவன் உனக்குப் பொருத்­த­மா­னவன் அல்ல. நீ அவனை திரு­மணம் செய்­து­கொண்டால் உன் வாழ்க்­கையே நர­க­மாக மாறி­விடும்.

உனக்கு தெரியும் தானே அம்மா எப்­பவும் உன்­னு­டைய விருப்­பத்­துக்கு குறுக்­காக இருக்க மாட்டேன் என்று. அவன் மட்டும் நல்­ல­வனாய் இருந்­தி­ருந்தால் உன்­னு­டைய காத­லுக்கு எந்­த­வித எதிர்ப்பும் தெரி­விக்­காமல் நான் அவ­னையே உனக்குத் திரு­மணம் செய்து வைத்­தி­ருப்பேன்.

எந்த தாயும் தன் பெற்ற பிள்ளை நல்ல விதமாய் வாழ வேண்டும் என்று தானே நினைப்பாள் ” என்று எல்லாம் தம­ரா­வுக்கு பக்­கு­வமாய் புரிய வைக்க முற்­பட்டாள்.

எனினும், அவை அனைத்­துமே ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் தம­ரா­வுக்கு பய­னற்­ற­தா­க­வி­ருந்­தது. தம­ராவின் வயதும், சுகந்த மீது இருந்த காதலும் அதை ஏற்­றுக்­கொள்ள மறுத்­தது.

அச்­சம்­ப­வத்­துக்கு பின்னர் தமரா, சுகந்­தவை சந்­தித்து தாய் கூறிய அனைத்­தையும் ஒன்­று­வி­டாது அவ­னிடம் கூறினாள். அத்­துடன்,

“எங்கள் அம்­மா­வுக்கு உன்னைப் பிடிக்­க­வில்லை. எனவே, என் அம்­மாவின் சம்­ம­தத்­துடன் எங்­க­ளு­டைய திருமணம் நடை­பெறும் என்­பது இனி சாத்­தி­ய­மில்லை.

எனவே நான் வீட்டை விட்டு உன்­னுடன் வந்­து­வி­டு­கின்றேன். அதைத் தவிர, இனி வேறு வழி­யில்லை” என்று கூறினாள். அதனைத் தொடர்ந்து சுகந்த, ” சரி அம்­மா­வுக்கு விருப்­ப­மில்லை என்றால் பர­வா­யில்லை.

எனக்கு உன் விருப்பம் தான் முக்­கியம். நீ வீட்­டுக்கு தெரி­யாமல் நாளைக்கே புறப்­பட்டு வா நாங்கள் பதிவுத் திரு­மணம் செய்­து­கொள்வோம்.” என்று கூறினான்.

அதற்கு தம­ராவும் உடன்­பட்டாள். அதன்­படி தமரா தாய்க்குத் தெரி­யாமல் வீட்டை விட்டு வந்து சுகந்­தவை திரு­மணம் செய்­து­கொண்டாள்.

அன்­றைய நிலையில் சுகந்­தவும், சுகந்­தவின் காத­லுமே தம­ரா­வுக்கு முக்­கி­ய­மா­க­வி­ருந்­தது. தாயைப் பற்றி அவள் சிறிதும் நினைத்துப் பார்க்­க­வில்லை.

அதன்பின் கால சக்­கரம் விரை­வாக சுழன்­றது. “ஆசை அறு­பது நாள், மோகம் முப்­பது நாள்” என்­பது போல் திரு­ம­ண­மாகி சில நாட்கள் மட்டும் தம­ரா­வுடன் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்த சுகந்த, தனது சுய­ரூ­பத்தைக் காட்ட ஆரம்பித்தான்.

உழைக்­கின்ற பணத்தில் பாதியை மது­பானக் கடைக்­கா­ரர்­களின் வங்கிக் கணக்­கு­களை நிரப்­பினான். அது­மட்டுமின்றி, தம­ராவை தகாத வார்த்­தை­களால் திட்­டு­வது, அடிப்­பது என்று அவ­னு­டைய அட்­டூ­ழி­யங்கள் தொடர்ந்­தன.

இதனால் தம­ரா­வுக்கு பல இர­வுகள் நிம்­ம­தி­யற்ற பொழு­தா­கவே கழிந்­தன. அப்­போது தான் தம­ரா­வுக்கு அன்று தாய் கூறிய அறி­வு­ரை­களும், தாய் எதற்கு தன்­னு­டைய காத­லுக்கு எதிர்ப்பைத் தெரி­வித்தாள் என்­பதும் புரிந்­தது.

ஆனால், அதனால் எந்தப் பயனும் இருக்­க­வில்லை. பல நாள் தனி­மை­யி­லேயே அழுத தமரா, தாய் தன்னை ஏற்­றுக்­கொள்வாள் என்ற நம்­பிக்­கையில் மீண்டும் தாயி­டமே தஞ்சம் புகுந்தாள்.

“அம்மா நீங்கள் கூறி­யது உண்­மைதான். எனக்கு அந்த மனு­ஷ­னுடன் இனி வாழ முடி­யாது, என்னைக் கார­ணமே இல்­லாமல் தினமும் அடித்து, சித்­தி­ர­வதை செய்­கின்றான் ” என்று தாயைக் கட்டிப் பிடித்து அழு­த­வாறு கூறினாள்.

அதற்கு அனோமா “சரி நீ இனி அங்கு போக வேண்­டிய அவ­சியம் இல்லை, இங்­கேயே இரு” என்று தம­ராவை ஆறு­தல்­ப­டுத்­தினாள். எனவே, தம­ராவும் அதற்கு சம்­ம­தித்து தாய் வீட்­டி­லேயே தங்­கினாள்.

எனினும், அது நீண்ட நாட்கள் நீடிக்­க­வில்லை. சிறிது நாட்­களில் மீண்டும் தம­ராவைத் தேடி சுகந்த வந்தான். வந்­தவன் தம­ராவை சமா­தா­னப்­ப­டுத்தி அவ­னுடன் அழைத்துச் சென்றான்.

எனினும், அதன்பின் இரு வாரங்கள் மட்டும் தம­ரா­வுடன் அன்­பாக நடந்­து­கொண்­டவன் மீண்டும் தம­ராவின் உடலைப் பதம் பார்க்க ஆரம்­பித்தான்.

எனவே, சுகந்­தவின் அட்­டூ­ழி­யங்­களை இனியும் பொறுக்க முடி­யாது என்ற நிலையில் இரண்­டா­வது முறையும் தாய் வீட்டை வந்­த­டைந்தாள் தமரா.

எனினும், இந்த முறை தமரா அதை அவ்­வ­ளவு சீக்­கி­ரமாய் விட்டு விட­வில்லை. தாயுடன் கிரி­எல்ல பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று சுகந்­தவின் அட்­டூ­ழி­யங்கள் தொடர்­பாக முறைப்­பாடு ஒன்­றினைப் பதி­வு­செய்தாள்.

இத­னைத்­தொ­டர்ந்து இது ஒரு குடும்ப பிரச்­சி­னை­யா­க­வி­ருப்­பதால், சுகந்­த­வையும் பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­வ­ழைத்து கதைத்து சுகந்­தவை எச்­ச­ரித்­த­துடன் அவர்கள் இரு­வ­ரையும் சேர்த்து வைக்­கவும் முற்­பட்­டனர்.

எனினும், தமரா அதற்கு உடன்­ப­ட­வில்லை. சுகந்­த­வுடன் இனி சேர்ந்து வாழ முடி­யாது என்­பதில் உறுதியாகவிருந்தாள்.

“எனக்கு இனி இவ­னுடன் சேர்ந்து வாழ முடி­யாது. சேர். நான் இவ­னி­ட­மி­ருந்து சட்­ட­ரீ­தி­யாக பிரிந்து செல்­லவே விரும்­பு­கின்றேன் ” என்று சற்றுக் கோபத்­துடன் பொலிஸார் முன்­னி­லையில் கூறினாள்.

அதற்கு சுகந்த ” என்னால் அது முடி­யாது சேர். நான் எப்­போ­துமே இந்த விவா­க­ரத்­துக்கு சம்­ம­திக்க மாட்டேன். எனக்கு தமரா வேண்டும்.

அவ­ளுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். இத்­தனை பிரச்­சி­னைக்கும் இவ­ளு­டைய தாய் தான் காரணம். அவர் சொல்­லிக்­கொ­டுத்து தான் இவள் இப்­ப­டி­யெல்லாம் நடந்­து­கொள்­கின்றாள்” என்று கூறினான். எனினும் தமரா அவ­ளு­டைய முடிவில் உடும்­புப்­பி­டி­யா­க­வி­ருந்தாள்.

“எதற்கு மறு­ப­டியும் உன்­னோடு வா என்று அழைக்­கின்றாய். உன்­னிடம் அடி உதை வாங்­கு­வ­தற்­கா­கவா? நான் எக்­கா­ரணம் கொண்டும் இனி உன்­னுடன் வரப் போவ­தில்லை” என்று கூறினாள்.

அதன்பின் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து இரு­வரும் வெளியில் வர அவர்­க­ளுக்கு பின்­னாலே சுகந்­தவும் வந்­து­சேர்ந்தான். இரு­வ­ரையும் தகாத வார்த்­தை­களால் திட்­டினான். எனினும் அனோ­மாவும், தம­ராவும் அதைச் சிறிதும் கண்­டு­கொள்­ளாமல் வீட்­டுக்கு வந்து சேர்ந்­தனர்.

ஆனால், அதன்­பின்னும் சுகந்த தம­ராவை விடு­வதாய் இல்லை. பொலிஸ் நிலை­யத்தில் பட்ட அவ­மா­னத்தை மனதில் வைத்­துக்­கொண்டு வெறித்­த­னமாய் தம­ரா­வையும் அவ­ளு­டைய தாயையும் பழி­வாங்கத் துடித்தான்.

தமரா செல்லும் இடங்­களில் எல்லாம் சென்று தொந்­த­ரவு கொடுத்தான். பின் பல நாட்கள் அவள் வீட்­டுக்கு சென்று நீ என்­னோடு வா, இல்­லை­யென்றால் உன்னைக் கொன்று விடுவேன், பல­வந்­த­மாக சரி தூக்­கிக்­கொண்டு போவேன். என்­றெல்லாம் அச்­சு­றுத்­தினான்.

அதற்கு தம­ரா­வி­ட­மி­ருந்து ” நான் உன்னை விவா­க­ரத்து செய்­வது என்று முடி­வெ­டுத்து விட்டேன் எனது முடிவில் மாற்­ற­மில்லை.” என்று கூறினாள்.

அதனை தொடர்ந்து ஒரு நாள் முச்­சக்­கர வண்­டியில் இரு நபர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு தம­ராவின் வீட்­டுக்கு வந்­தவன் அவர்­க­ளுடன் சேர்ந்து கொண்டு “நாங்கள் இங்கு வந்­தது உன்னை இங்­கி­ருந்து அழைத்­துக்­கொண்டு செல்ல தான் சீக்­கி­ர­மாகப் புறப்­படு” என்று அச்­சு­றுத்­தினான்.

எனவே அந்­த­நி­லையில் சுகந்­த­வுடன் செல்­லா­விட்டால் பிரச்­சினை பெரி­தா­கி­விடும் என்ற எண்­ணத்தில் அவர்களுடன் சுகந்­தவின் வீட்­டுக்குச் சென்றாள். எனினும், வெகு நாட்கள் அங்கு அவள் இருக்­க­வில்லை. இரண்டு நாட்­களின் பின் சுகந்த வீட்டில் இல்­லாத நேரம் பார்த்து மீண்டும் தாய் வீட்டை நாடி, ஓடி வந்­த­டைந்தாள்.

அவ­ளிடம் அனோமா “மகள் என்ன நடந்­தது?” என்று வின­வினாள். எனினும் அவ­ளி­ட­மி­ருந்து எந்தப் பதிலும் வர­வில்லை. அனோ­மா­வையும் அழைத்­துக்­கொண்டு மீண்டும் கிரி­எல்ல பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்தாள்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் சுகந்த பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்டான். அங்கு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி, ” “உன்­னு­டைய மனைவி உன்­னுடன் வாழ விருப்­ப­மில்லை என்று கூறும் போது நீ அவளை கட்­டா­யப்­ப­டுத்தி வைத்­துக்­கொள்ள முடி­யாது.

நீ விவா­க­ரத்து செய்ய விருப்­ப­மில்லை என்று கூறு­வதில் எந்தப் பய­னு­மில்லை. எனவே, இது ஒரு குடும்ப பிரச்­சினை நீ விவ­கா­ரத்­துக்கு சம்­மதம் தெரி­வித்து இந்த பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்கப் பார்.

மாறாக நீ சம்­ம­திக்­காமல் தொடர்ந்து பிரச்­சினை கொடுத்தால் உன்னை விளக்­க­ம­றி­யலில் வைத்து வழக்குப் போடு­வதைத் தவிர வேறு வழி­யில்லை ” என்று கூறினார்.

சுகந்த அதற்கு, “நான் விவா­க­ரத்­துக்கு சம்­ம­திக்­கின்றேன்.” என்று கூறினான். எனினும் அது அவன் மன­தி­லி­ருந்து வந்த வார்த்­தை­யல்ல என்­பதை எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை.

பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து வெளியில் வந்­தவன் ” நீங்கள் இரு­வரும் என்னை பொலிஸ் நிலை­யத்­துக்கு எல்லாம் அழைத்து வந்து அவ­மா­னப்­ப­டுத்­தி­விட்­டீர்கள். இன்று நீங்கள் இரு­வ­ருமே வீடு செல்ல மாட்­டீர்கள்.” என்று அச்­சு­றுத்­தினான்.

எனினும் அதைத் தம­ராவும் தாய் அனோ­மாவும் பெரி­தாகக் கண்­டு­கொள்­ள­வில்லை. இரு­வரும் பஸ்ஸில் ஏறிக்­கொண்­டார்கள். பின் சிறிது நேரத்தில் அவர்கள் இரு­வரும் ஏறிய இடத்­தி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டி­யொன்றில் இனம் தெரி­யாத நபர் ஒருவர் பின்­தொ­டர்ந்து வரு­வதை தமரா அவ­தா­னித்தாள்.

எனவே அது அவ­ளு­டைய மன­துக்குள் சந்­தே­கத்தை உண்டு பண்­ணி­யது. உடனே 119 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்தின் ஊடாக இச்­சம்­பவம் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு அறி­வித்தாள்.

பின் தன்­னு­டைய வீட்­டுக்கு செல்­வ­தற்­காக இறங்கும் பஸ்­த­ரிப்­பிடம் வந்­ததும் அங்கு இறங்­கி­னார்கள். அப்­போது அந்த முச்­சக்­கர வண்டி அங்கு எங்கும் இருக்­க­வில்லை.

எனினும், பஸ்­த­ரிப்­பி­டத்­தி­லி­ருந்து வீட்­டுக்கு நடந்து செல்லக் கூடிய தூர­மாக இருந்­தி­ருந்தும் எதற்கும் ஒரு பாது­காப்­புக்கு முச்­சக்­கர வண்­டியில் செல்வோம் என்று எண்­ணி­ய­வாறு இரு­வரும் ஒரு முச்­சக்­கர வண்­டியில் ஏறி­னார்கள்.

பின் அவர்கள் இரு­வரும் ஏறிய முச்­சக்­கர வண்டி அவர்கள் வீட்­டுக்கு செல்லும் ஒழுங்­கைக்குள் சிறிது தூரம் செல்­லும்­போது பஸ்ஸின் பின்னால் தொடர்ந்­து­வந்த அதே முச்­சக்­கர வண்டி மீண்டும் தொடர்­வதை தமரா அவ­தா­னித்தாள்.

தம­ரா­வுக்கு என்ன செய்­வ­தென்றே தெரி­ய­வில்லை. அந்த முச்­சக்­கர வண்டி இவர்­களை முந்­திக்­கொண்டு முன்னால் சென்று குறுக்­காக நின்­றது.

பின் அதி­லி­ருந்து சுகந்­தவும், வேறு ஒரு நபரும் இறங்­கி­னார்கள். பின் சுகந்த நேராக தம­ரா­வி­டமும், அனோ­மா­வி­டமும் சென்று எது­வுமே பேசாமல் மறைத்­து­வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து இரு­வ­ரையும் சர­மா­ரி­யாகக் குத்­தினான் இரு­வரும் கீழே வீழ்ந்து துடித்­தனர் அதன்பின் அவன் அந்த முச்சக்கர வண்டியிலேயே அங்கிருந்து தப்பியோடினான்.

பின் கிராமத்தவரின் உதவியுடன் இருவரும் கிரிஎல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் துரதிஷ்டவசமாக அனோமாவின் உயிர் பாதிவழியிலேயே பிரிந்தது.

அதேவேளை தமரா உயிருக்குப் போராடிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றாள். மேலும் சுகந்த விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்,

எனவே, பெற்றோர், பெரியவர்கள், அனுபவசாலிகள் கூறும் அறிவுரைகள் எமது நன்மைக்காகத் தான் இருக்கும் என்பதை சற்றும் சிந்தித்துப் பார்க்காது கண்மூடித்தனமாக எடுக்கும் முடிவுகள் இத்தகைய பாராதுரமான விளைவுகளையே இறுதியில் ஏற்படுத்தும் என்பதற்கு மேற்படி சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

-வசந்தா அருள்ரட்ணம்-
மூலம்: சிங்கள நாளேடு

Share.
Leave A Reply

Exit mobile version