ஒரு பக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும், அவர்களே தமது பிரதிநிதிகள் என்பதையும் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்ற அதேவேளை, மற்றொரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்து கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எப்போதும் போலவே காணப்படும் முரண்பாடுகளும், கருத்து மோதல்களும், அதன் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கலக்கம், கூட்டமைப்புக்கு வாக்களித்த- வாக்காளர்களிடம் இப்போதும் இருப்பது உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் கருத்து மோதல்களை, கூட்டமைப்புக்குள் இருக்கும் உச்சக்கட்ட ஜனநாயகம் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
அதே கருத்தையே, லண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவான, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் கூட, முரண்பாடுகள் இருப்பதும் உண்மை.
அதற்கு தேர்தல் முடிவு அவருக்கு ஏற்படுத்திய ஏமாற்றமாகவும் இருக்கலாம் அல்லது, தேர்தலுக்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறிய உறுதிமொழியாகவும் இருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்த முரண்பாடு இப்போது அவ்வளவாகத் தீவிரம் பெறும் வாய்ப்புகள் தென்படவில்லை.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையில், தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், அதனை வைத்து கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்றே கூறலாம்.
தேசியப் பட்டியல் ஆசனத்தை எதிர்பார்த்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இந்தநிலையில், கொழும்பு வந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனுக்குக் கூட, அமெரிக்கத் தூதரகமே அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கொழும்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அந்தக் கூட்டத்தை நடத்தின.
அந்தக் கூட்டத்துக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தகவல்கள், தமிழரசுக் கட்சிக்கு எச்சரிக்கை விடுப்பதாக அல்லது அதற்கு கிலியூட்டுகின்ற ஒன்றாகவே காணப்பட்டன.
மூன்று கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இது, தமிழரசுக் கட்சி அல்லாத ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி போல சித்திரிக்கப்பட்டது.
ஆனால், இந்த மூன்று கட்சிகளின் கூட்டத்தில், தனியாக கூட்டமைப்பை பதிவு செய்வது பற்றிப் பேசப்படவில்லை என்று பின்னர் கூறப்பட்டது.
நான்கு கட்சிகளும் இணைந்து முரண்பாடுகளை களைந்து செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில், தனியாக கூட்டமைப்பைப் பதிவு செய்யும் திட்டம் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாமல் போயிருக்கலாம்.
அல்லது தமிழரசுக் கட்சிக்கு இன்னும் காலஅவகாசம் கொடுக்கத் திட்டமிட்டிருக்கலாம்.
எது எவ்வாறாயினும், கூட்டமைப்பில் உள்ள கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு இன்னொரு கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளதை, மறுக்க முடியாது.
இப்போதைக்கு இது பெரிய விவகாரமாக வெடிக்காவிடினும், இது ஒரு நீறுபூத்த நெருப்பாகவே இருக்கப் போகிறது.
இந்தக் கட்டத்தில் தான், பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கொரடா பதவி தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது, கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள புகைச்சலை சற்றுத் தணிப்பதற்கான முயற்சியாக – சுரேஷ் பிரேமச்சந்திரனின் குரலைப் பலவீனப்படுத்துகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்கு வலுவான சக்தியாக இருக்க வேண்டும் என்ற தமிழ் மக்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே எதிர்பார்ப்பு கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் இல்லை என்பது உண்மை.
கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளும், நம்பிக்கையீனங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை அதிலுள்ள தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களின் தெளிவான நிலைப்பாடு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதோ அதுபோலவே, கூட்டமைப்புத் தொடர்பான அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது கூட்டமைப்பாக ஒன்றுபட்டு நிற்கும் வரையில் தான், தமிழ்மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற உண்மை, 2010ஆம் ஆண்டு எவ்வாறு வலியுறுத்தப்பட்டதோ, அதுபோலவே இம்முறை தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பிளவுகளை எற்படுத்தி பிழைத்துக் கொள்ளலாம் என்று எந்தவொரு கட்சியாவது் – தலைவராவது நினைத்தால், அதற்கு தமிழ்மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதே வெளிப்படை.
அதேவேளை, கூட்டமைப்பாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தெற்கின் தற்போதைய அரசியல் சூழல், கூட்டமைப்புக்கு சவாலானதாக- நெருக்கடியைக் கொடுக்கின்றதாக இருக்கும் என்று பல மாதங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டது. இப்போதும் கூட அந்தச் சவால்களும் ஆபத்துகளும் நீங்கிவிடவில்லை.
கூட்டமைப்பை உடைத்துப் பலவீனப்படுத்த, உள்ளும் புறமும் பல சக்திகள் காத்திருக்கின்றன. இதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் பலவீனப்படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை, தமிழர்களின் குரலைப் பலவீனப்படுத்தவே எத்தனிக்கிறார்கள்.
இந்த உண்மையை கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்தச் சூழலில் தான் கூட்டமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிட வலுவாக எழுந்துள்ளது.
அதுவும் நிறுவன ரீதியாக- பதிவு பெற்ற ஒரு அரசியல் அமைப்பாக ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதில் நிறையவே சவால்கள் இருப்பது உண்மை. கடந்த காலங்களில் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கு பல தடைக்கற்கள் போடப்பட்டன.
இனியும் அந்த நிலை தொடராமல் கூட்டமைப்பை பதிவு செய்து பலப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டால், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இன்னும் பொறுப்புணர்வை அதிகப்படுத்தும்.
அந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் அல்லது போதாமல் இருப்பது கூட, கூட்டமைப்புக்கு முரண்பாடுகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம்.
கூட்டமைப்புக்கு என்று பெரும் பொறுப்பை தமிழ்மக்கள் ஒப்படைத்துள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், தமிழருக்கான உரிமைக் கோரிக்கைகள் தான் பலவீனப்பட்டுப் போகும்.
சத்ரியன்