பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக உதவ வேண்டும் என்கிற பரவலான, வலுவான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். வளைகுடா நாடுகள் சிரிய அகதிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்காக எதையும் செய்யவும் இல்லை.
அதேசமயம், இதில் தனி நபர்கள் வெளிப்படுத்திய பெருந்தன்மையானது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட நபர்கள் வசூல் செய்த, தானமாக அளித்த தொகை பல்லாயிரக்கணக்கான டாலர்களைத் தொட்டது. உதாரணமாக இந்த நாடுகளின் தேசிய நிறுவன (கடார் பெட்ரோலியம் ஒரு உதாரணம்) ஊழியர்களிடம் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் சிரிய அகதிகளுக்கு உதவத் தரமுடியுமா என்று கேட்டபோது, பலர் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.
வளைகுடா நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அளித்த நிதி உதவியின் அளவு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்.
ஆனால், சிரியாவின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வராமல் நீடித்ததன் விளைவாக, முகாம்களில் வசிக்கும் லட்சக்கணக்கான அகதிகளுக்குத் தேவையான உதவிகள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை.
விளைவு இவ்வளவு பெரிய மக்கள் தொகை ஒரே நேரத்தில் இடம்பெயரும் இந்த சிக்கலுக்கு வேறு வகையான தீர்வுகளைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் உலகத்துக்கு ஏற்பட்டது.
காரணம், போரினால் களைத்து, முகாம்களில் வாழ்ந்துவந்த சிரியர்கள், தமது எதிர்கால வாழ்வு மற்றும் பொருளாதார நம்பிக்கையை முற்றாக இழந்த நிலையில், மோதல் பிரதேசங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள்.
சுருக்கமாக சொல்வதானால், முகாம்களில் இருந்த மக்களுக்கு உணவும் உறைவிடமும் தருவது என்பது நேற்றைய பிரச்சனைகளுக்கான தீர்வு.
இன்றைய அதிமுக்கிய பிரச்சனை என்பது, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்கான இடத்தைத் தேடுவது. இங்கே தான் வளைகுடா நாடுகள் விடை காண முடியாமல் திணறுகின்றன.
ஸ்திரத்தன்மை குறித்த பயங்கள்
வளைகுடா நாடுகள் சிரிய நாட்டவர்களை தம் நாடுகளுக்குள் அனுமதித்திருந்தாலும் (2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து லட்சம் சிரியர்களைத் தனது எல்லைக்குள் அனுமதித்திருப்பதாக சவுதி அரேபியா கூறுகிறது) அவர்களைக் குடியேற்றப் பணியாளர்களாக மட்டுமே இந்த நாடுகள் உள்வாங்கியிருக்கின்றன.
மற்றபடி, பெருமளவிலான அகதிகள் ஒரே நேரத்தில் கிளம்பி வரும்போது, அவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனங்களோ, அவர்களை ஆதரிக்கும் தனி நபர்களோ இல்லாத சூழலில் அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை எப்படி தம் நாட்டுக்குள் உள்வாங்குவது என்பது குறித்து இந்த வளைகுடா நாடுகளிடம் தெளிவான, வரையறுக்கப்பட்ட கொள்கைகள் எவையும் இல்லை.
இதை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், தத்தமது எல்லைகளுக்குள் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து வளைகுடா நாடுகளுக்கு இருக்கும் கவலைகள் பற்றி ஆழமாக உள் சென்று பார்ப்பது அவசியம்.
அதுமட்டுமல்லாமல், இந்த நாடுகளின் சமூக அடையாளம் மற்றும் வளைகுடா நாடுகளின் குடிமகன் என்பதை அந்த நாடுகள் எப்படி பார்க்கின்றன என்கிற கேள்விகளையும் நாம் ஆராய வேண்டும்.
2012 ஆம் ஆண்டு வாக்கில் பஷார் அல் அசாதுக்கு எதிரான போர் என்பது சுன்னி வளைகுடா நாடுகளின் நலன்களுக்கும், இரான் தலைமையிலான அதன் கூட்டணிக்கும் இடையிலானதொரு தெளிவான போட்டியாக உருவெடுத்து நிலைபெற்றது.
அதன் விளைவாக, அசாத்துக்கு ஆதரவான சிரியர்கள் வளைகுடா நாடுகளில் ஊடுறுவி பழிவாங்க முனையக் கூடும் என்கிற ஆழமான அச்சம் வளைகுடா நாடுகளில் பரவத் துவங்கியது.
அதனால் சிரியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வரும் பயணிகளை கடுமையாக சோதனை செய்யும் நடைமுறைகள் அதிகரித்தன.
அது மட்டுமல்ல, வளைகுடா நாடுகளில் வேலை செய்யவரும் சிரிய பணியாளர்களுக்கு அனுமதி கிடைப்பது கடினமாகிப் போனது.
ஏற்கனவே வளைகுடா நாடுகளில் பணியில் இருந்த சிரிய நாட்டுத் தொழிலாளர்களின் பணியாளர் விசாக்கள் புதுப்பிக்கப்படுவதிலும் கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டன.
வளைகுடா நாடுகளின் இந்த கொள்கை இன்னமும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் அசாத் ஆதரவாளர்கள் தம் மீது எதிர்த்தாக்குதல்கள் தொடுக்கக் கூடும் என்று கூடுதலாக கவலைப் படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளில் பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சந்தடியில்லாமல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஏராளமான ஊகங்கள் உலா வருகின்றன.
அதேசமயம், அசாத் ஆதரவாளர்கள் சதி செய்ததற்கான நேரடி ஆதாரங்கள் எவையும் இதுவரை பொதுதளத்தில் வெளியாகவில்லை.
நாட்டின் குடிமக்கள் சமநிலை
அத்துடன், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் வருவது வளைகுடா நாடுகள் இயங்குவதற்கு அவசியமானதாக கருதப்படும் சிக்கலான குடிமக்கள் சமநிலையை புரட்டிப்போடுமோ என்கிற அச்சமும் காணப்படுகிறது.
உதாரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய இருநாடுகளிலும் வசிக்கும் மக்கள் தொகையில் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே. இந்த இரு நாடுகளிலும் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இடைக்கால பணியாளர்களே.
வளைகுடா நாடுகளுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு முழுநேர வேலை இருந்தால் மட்டுமே அங்கே தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வேலைக்கான பணி நியமன காலம் முடிந்ததும், இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பவேண்டும். எனவே வெளிநாட்டவர் வேலையில்லாமல் வளைகுடா நாடுகளில் தங்கியிருக்க முடியாது.
இந்த அணுகுமுறையில் தான் வளைகுடா நாடுகள் செயற்படுகின்றன.
அதாவது பெருமளவிலான உடல் உழைப்புத் தொழிலாளிகள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்களைத் தொடர்ந்து தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதன் மூலம், வளைகுடா நாட்டின் அரபிக் குடிமக்கள் தத்தமது நாடுகளில் தமது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
அத்துடன், மற்ற நாடுகளின் அரபிகளாலோ, தெற்காசியப் பணியாளர்களாலோ தமது மேலாண்மை பறிக்கப்படாமலும் இவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
முணுமுணுப்பான விவாதம்
எனவே, ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் எந்த வேலை உத்தரவாதமும் இல்லாமல், என்று திரும்பப்போகிறார்கள் என்கிற காலக் கெடுவும் இல்லாமல் தமது நாட்டுக்குள் வருவது என்பது வளைகுடா நாடுகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடமான விஷயம்.
வளைகுடா நாடுகளின் குடியுரிமை அடையாளம், சமூக கட்டமைப்பு மற்றும் குடியுரிமை சமநிலை ஆகியவற்றுக்கு சிரிய அகதிகளால் உருவாகக்கூடிய ஆபத்தின் அளவை ஒப்பிட கடந்தகால முன்னுதாரணங்கள் எவையும் இல்லை. 1948 ஆம் ஆண்டின் பெருமளவு பாலஸ்தீனர் வெளயேற்றம் கூட இதற்கு ஈடாகாது.
வளைகுடா நாடுகளின் குடிமக்கள் சமநிலைக்கும், சமூக அடையாளத்துக்கும் இந்த அகதிகளால் ஆபத்து வந்துவிடும் என்கிற ஆழமான பயத்தை போக்குவது மிகவும் கடினம். இது தொடர்பில், வெளிப்படையான அல்லது ராஜதந்திர ரீதீயிலான அழுத்தம், அதிலும் குறிப்பாக மேற்குலக நாடுகளிடமிருந்து கொடுக்கப்பட்டால் அது பலன் தருமா என்பது சந்தேகமே.
இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகளின் ஆளும் குடும்பங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதற்கான வெளிப்படையான விவாதங்கள் எவையும் காணப்படவில்லை.
மேலும், அசாதையும் அவரது அரசாங்கத்தையும் கையாள்வது எப்படி என்று மேற்குலகம் விரைந்து முடிவெடித்திருந்தால் இந்த சிக்கலே இந்த அளவுக்கு தீவிரமடைந்திருக்காது என்று வளைகுடா நாட்டு அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
எனவே, இந்த அகதிகள் பிரச்சனை தொடர்பாக மேற்குலக நாட்டு ராஜதந்திரிகளின் கோரிக்கைகள் அனைத்துமே கேளாக்காதுகளை நோக்கிய கோரிக்கைகளாக மட்டுமே முடியக் கூடும்.