இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ‘பாலிவுட்’ நடிகை கங்கனாரணவத். சினிமாவில் நுழைவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை மனம் திறந்து கூறுகிறார்.
நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஒரு சிறிய நகரத்தில் இருந்து மும்பை வந்தேன். பலமுறை பஸ்சிலும், ரெயிலிலும், டாக்சியிலும், நடந்தும் கூட வந்திருக்கிறேன்.
ஆரம்ப காலத்தில் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று முயன்றபோது எனது வாழ்வின் மோசமான பக்கங்களை சந்தித்து இருக்கிறேன்.
பலர் என்னை குறி வைத்தனர். சிலர் மீது போலீசிலும் புகார் கொடுத்திருக்கிறேன். எனக்கு மும்பையில் வீடு இல்லாத போது பிளாட்பாரத்தில் கூட படுத்து தூங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு எதிராக நடந்த விஷயங்கள் எல்லாம், இப்போது சாதகமாக மாறிவிட்டன.
2 முறை ஜனாதிபதியிடம் விருது பெற்ற நான் இப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்குகிறேன்.
எனது உயரம், கண்கள், அழகு எதையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தது இல்லை. எனக்கு ஏற்பட்ட தடைகளை வரமாக எடுத்துக் கொண்டேன்.
நீங்களும் உங்களை நேசியுங்கள். மற்றவர்களைப் போல் இல்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள். நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு நானே உதாரணம் என்றார்.