இந்து சமயத்திலும் சரி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சரி மதத்துக்கும் மதம் சம்பந்தமான பண்பாட்டு விழுமியங்களுக்கும், மதிப்பும், மரியாதையும் உயர்ந்த அந்தஸ்தும் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை சமயத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதால் சமய விழுமியங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.
எந்தவொரு விடயத்துக்கும் மத அனுஷ்டானங்களே முன்னெடுக்கப்படுகின்றன.
மதகுருமார்கள், மதப்பெரியார்கள், அடியவர்கள் அனைவர் மீதும் மக்கள் பெரும் மரியாதையும், பயபக்தியும் கொண்டுள்ளனர்.
மதப்பெரியார்கள் சமய அறநெறிகளையும், விழுமியங்களையும் போதிப்பதால் இயல்பாகவே அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் அனைவருக்கும் ஏற்படுகின்றது.
மதத்தின் பெயரால் தீயகாரியங்களில் ஈடுபடுவோரையும் மதநிந்தனை செய்வோரையும் எவரும் மதிப்பதில்லை.
ஆனாலும் மதத்தின் பெயரால் மதநெறிகளுக்கு எதிராக செயற்படுபவர்களும் எமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்தியாவில் மதத்தின் பெயரால் ஆச்சிரமங்களை நடத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பொலிஸாரிடம் சிக்கிய மத குருமார்களைப் பற்றி பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.
கொலை, கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பலரைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இது சமயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகவே காணப்படுகின்றது.
மதகுரு, மதத்தலைவர் சமயக்கொள்கைகளையும், ஆன்மீகத்தையும் மக்களிடம் போதிப்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற ஒரு வரைமுறை சகல மதங்களிலும் இருக்கின்றன. குறிப்பாக இந்து சமயத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வரைமுறையை மீறி, சமயக்கொள்கைக்கு எதிராக செயற்படும் ஒரு பெண் சாமியார், – “சாமியாரினி” பற்றி இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
சினிமா நடிகையைப் போன்ற தலையலங்காரம், முக ஒப்பனை, உதட்டுச்சாயம் பூசி, அரைகுறை ஆடையுடன் வலம் வரும் இந்த சாமியாரினி பற்றி தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
சினிமா நடிகைகளுக்கு நிகராக உடை உடுத்தி பக்தர்களையும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தும், ஆசி வழங்கும் இந்த சாமியாரினியின் நடவடிக்கை முற்றிலும் வித்தியாசமானது.
பெண் சாமியாரினி ராதே மாவைப்பற்றி புதுப்புது கதைகளும், சர்ச்சைகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் விடயம் தான் ராதே மா பல பெண்களையும் வைத்து விபச்சாரம் நடத்தி வருகிறார் என்பதாகும்.
பல ஆட்களை கூலிக்கு அமர்த்தி அவர்களூடாக இந்தப் பெண்களை வைத்து விபசாரத் தொழிலை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பவர் பிரபல மொடல் அழகியான அர்ஷிகான் என்பவராவார். இந்த அர்ஷிகான் முன்னர் பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடியுடன் இணைத்துப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஷிகான் இதுபற்றி தெரிவிக்கையில், ராதே மாவின் முகவர் ஒருவர் என்னை அணுகி தங்களுடைய தொழிலில் என்னையும் இணைந்து கொள்ளுமாறு கூறினார். அதனை நிராகரித்து அவரை திருப்பியனுப்பினேன்.
ஆனால் எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. எனவே, இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார். இது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் தொலைக்காட்சி நடிகையான டோலி பிந்த்ரா என்பவர் சர்ச்சைக்குரிய சாமியாரினி ராதே மா மீது ஒரு பரபரப்பான முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.
தன்னை முன்பின் அறிந்திராத ஆண் ஒருவருடன் ஓரிரவை கழிக்குமாறு ராதே மா கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு தாம் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
45 வயதான டோலி பிந்த்ரா தனக்கு குழந்தை வரம் அளித்திருப்பதாக உறுதியளித்திருந்த ராதே மா அநாகரீக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கூறியது தமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் தான் ராதே மா மீது வைத்திருந்த பக்தி மயமான மரியாதையை இது இழக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராதே மா பற்றி முதலில் பொலிஸில் முறைப்பாடு செய்தவர் மும்பையைச் சேர்ந்த நிகி குப்தா என்ற 32 வயதான பெண்ணாவார்.
திருமணம் முடித்த நிகி குப்தா என்ற இந்தப் பெண் தனது கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்.
நிகி பொலிஸில் தெரிவித்த முறைப்பாட்டில், சாமியாரினி ராதேமாவின் பேச்சைக் கேட்டு எனது கணவர் நகுல்குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்தினர்.
எனவே, இது தொடர்பாக ராதே மா உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மும்பை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸாரும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் சட்ட நடவடிக்கையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக முன் ஜாமின் (பிணை) கோரி மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராதே மா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது நீதிமன்றத்தில் நிகியின் சட்டத்தரணி ராதே மாவுக்கு பிணை (ஜாமின்) வழங்கக்கூடாதெனவும் அவ்வாறு பிணை வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி விடக் கூடுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்தே ராதே மாவின் பிணை மனு (ஜாமின்) மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
தவிர ராதே மா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். வரதட்சணை வாங்கி வரச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாகவும் ராதேமா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் விமானப் பயணங்களின் போது ராதே மா கையில் சூலாயுதத்துடன் பயணிப்பதாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜ்குமார் ராஜ்ஹன்ஸ் என்பவர் மும்பை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
பாதுகாப்பு விதிகளை மீறியதாக ராதே மா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொலிஸாரிடம் ராஜ்குமார் வலியுறுத்தினார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்துவார்களென்று எதிர்பார்ப்பதாகவும் ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
(இவ்வாறு ராதேமாவிற்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸில் செய்யப்பட்டுள்ளன.)
இவ்வாறான பல்வேறு சர்ச்சைக்குரிய பெண் கடவுளான அதாவது சாமியாரினியான ராதேமாவின் வரலாற்றுப் பின்னணி சுவாரஷ்யமானது.
ராதே மாவின் உண்மையான பெயர் சுக்விந்தர் கவுர் என்பதாகும்.
பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள டோரன்கலா கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தற்போது வயது 50 ஆகும்.
இவர் சிறுமியாக இருக்கும்போது தனது ஊரிலுள்ள காளி கோவிலில் அதிக நேரத்தை செலவிட்டு வந்தாரென்று அவரைப் பின்பற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும், தமது இளமைப்பருவத்தில் ஆன்மீக ரீதியான எந்தவொரு அதிசயத்தையும் அவர் நிகழ்த்திக்காட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள சுக்விந்தர் கவுர் (ராதே மா) தனது 17 வயதில் மோஹன் சிங் என்பவரை திருமணம் முடித்தார்.
கவுரின் கணவரான மோஹன் சிங்குக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கணவனுக்கு உதவும் வகையில் ஊரிலுள்ளவர்களின் ஆடைகளை தைத்துக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைகுடும்ப செலவுக்கு கவுர் கொடுத்தாள்.
இந்த நிலையில் கவுரின் கணவர் மோஹன்சிங் தொழில் வாய்ப்பு பெற்று டோஹா கட்டாருக்கு சென்றான்.
சுக்விந்தர் கவுர் தனது 23 ஆவது வயதில் மஹான் ராம்தீன் தாஸின் பக்தையானார். அதனைத் தொடர்ந்து மஹான் ராம்தீன் தாஸ் சுக்விந்தர் கவுருக்கு தீட்சை வழங்கியதுடன் அவருக்கு “ராதே மா” என்ற பெயரைச் சூட்டினார். “ராதே மா” என்றால் “தாய் ராதா” என்று அர்த்தமாகும்.
அதன் பின்னர் மும்பைக்குச் சென்ற ராதே மா, அங்கு குப்தா என்ற வர்த்தகரின் என்பவரின் வீட்டில் தங்கினார். இந்த குப்தா குடும்பத்தைச் சேர்ந்தவரே நிக்கி குப்தா என்ற பெண். இவரது கணவரான நகுல் குப்தாவும் வேறு ஆறு பேரும் ராதே மாவுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதாக நிக்கி குப்தா மும்பை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராதே மாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. ஆன்மீகத்தின் பெயரால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ராதே மா குட்டைப் பாவாடை (ஸ்கேர்ட்) அணிந்து, திரைப்பட இசைக்கு ஏற்ப நடனமாடும் வீடியோக் காட்சிகளும் வெளியாகியுள்ளதுடன் அதனைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
குறிப்பாக ஒரு பக்தர் ராதே மாவை அப்படியே தூக்கிச் சுற்றி வட்டமடிக்கும் வீடியோ காட்சியும் பிரசித்தமாகும். பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாக கூறி அவர்களைக் கட்டிப்பிடித்து தழுவி, முத்தமிட்டு ஆசி வழங்கும் முறை பக்தி நிறைந்த செயற்பாடாகத் தெரியவில்லை.
இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அருவருப்பையும், அதிருப் தியை யும் ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப் படுகிறது.