புதுடெல்லி: சாலையில் இரவு நேரத்தில் நடந்து சென்ற உஸ்பெகிஸ்தான் நாட்டு இளம்பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை அடித்து உதைத்து,கால்பந்தாட்ட வீரர்கள் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. அதனால் டெல்லி, இரவு நேரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இல்லை என்பதை சமீபத்திய பல நிகழ்வுகள் உணர்த்தி உள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி இரவு 10 மணியளவில், தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் சாலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசியவாறு நடந்து சென்றார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்த இளைஞர், அவரிடமிருந்து செல்போனை பறிக்க தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அந்தப் பெண், இளைஞரிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டவாறு போராடி உள்ளார்.
இதனால் தகாத செயலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண்ணின் கூச்சலைக் கேட்டு, அருகில் இருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த அந்த பகுதிவாசிகள் அந்த இளைஞரை விரட்டிச் சென்று, அடித்து உதைத்து தூக்கி வந்தனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தத் தெருவில் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.