இலங்கை யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 20 வருட நிலைமைகள் பற்றி தெளிவற்ற நபர்களால் குளீரூட்டப்பட்ட அறையில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய ஊழல், மோசடி, அரச சொத்து, வரப்பிரசாதம் மற்றும் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

´ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களின் அவசியத்திற்கு ஏற்ப அறிக்கை தயாரித்துள்ளது.

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் சிவிலியன்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. கொல்லப்பட்டவர்கள் சிவிலியன்கள்தானா என்று யாருக்குத் தெரியும்? புலிகள் சீருடை அணிந்துகொண்டா யுத்தம் செய்தனர்? இல்லை, சிவில் உடையிலும் யுத்தம் செய்தனர்.

யுத்தம் நடந்தபோது இருந்த நாட்டுத் தலைவர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை தண்டிக்க வேண்டிய தேவை புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அதனையே ஐ,நா அறிக்கை மூலம் செயற்படுத்த நினைக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் அதற்கு இடமளித்து இணக்கம் தெரிவிக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் இராணுவ வீரர்கள் எவரேனும் தவறு செய்திருந்தால் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். அதனை விடுத்து முழு இராணுவத்தையும் இராணுவத்தின் கட்டளையிட்ட செயல்களையும் தவறு என்று சொல்ல முடியாது.

எனவே அறிக்கையில் உள்ள சகல குற்றச்சாட்டுக்களையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் நிராகரிக்கிறேன்.

ஒரு இனத்தை இலக்கு வைத்து ஒருபோதும் தவறான கட்டளைகளை நாம் பிறப்பிக்கவில்லை. யுத்தத்தின் போது பாலியல் துன்புறுத்தலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டு இடத்திற்குச் சென்று பெண்கள் பலரை இராணுவம் எப்படி வல்லுறவுக்கு உட்படுத்தும்?

ஆக இலங்கையில் 20 வருடங்கள் ஏற்பட்ட நிலைமை குறித்து தெளிவு இல்லாதவர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய தகவலை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடித்து வைத்த எம்மை இன்று விசாரணைக்கு என்று அழைத்து அலையவைக்கின்றனர்.

நேற்று எப்சிஐடி இன்று ஜனாதிபதி ஆணைக்குழு. இதற்கு யுத்த காலமே பரவாயில்லை.

ஏன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று உள்ளது. யுத்தம் முடியாமல் இருந்திருந்தால் இப்படி வர வேண்டிய அவசியல் இல்லை தானே´ என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version