கணவன் – மனைவியைக் கொலை செய்து, அவர்களின் ஒரேயொரு பெண் பிள்ளையை கிணற்றுக்குள் போட்டு, படுகொலை செய்த சம்பவம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும்.
இந்தச் சம்பவம், கம்பஹா, நய்வள, கல்பொத்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. வீடுபூராகவும் தனது பிஞ்சுக் கால்களால் உலாவித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறிய குழந்தையின் சடலம், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட போது, அங்கு குழுமியிருந்தவர்களையே கண்ணீர் மல்கச் செய்துவிட்டது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள், கல்பொத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, விக்கிரமஆராச்சிகே தர்மசேன பெரேரா (52 வயது), கல்ஜிந்த கும்புறகெதர விமலாவதி (42 வயது), இவர்களுடைய ஒரேயொரு குழந்தையான ஜலத்தி கவிந்தியா (4 வயது) ஆவர். சமந்த என்ற பெயரிலேயே தர்மசேன, அக்கிராமத்தில் அறியப்பட்டிருந்தார்.
நான்கு ஏக்கர் விசாலமான தோட்டத்தின் நடுவிலேயே அவர்களது வீடு அமைக்கப்பட்டிருந்தது. விசாலமான கோழிப் பண்ணைக்குச் சொந்தக்காரரான தர்மசேன, அன்னாசித் தோட்டத்தையும் கொண்டிருந்தார்.
அதற்கு மேலதிகமாக அவர், வட்டிக்குப் பணம் கொடுத்தும் வந்துள்ளார். வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடம் இருக்கின்ற பெறுமதியான பொருட்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு, அவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார்.
சமந்தவிடம் தினந்தோறும் கோழிகளை விலைக்கு வாங்குகின்ற ஒருவர், கடந்த 10ஆம் திகதி காலை, லொறியுடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கருகில் சென்ற போது, மூக்கை அரிக்கும் துர்நாற்றம் கிளம்பியது.
இது தொடர்பில், அக்கம்பக்கத்தவர்களிடம் தெரிவித்துவிட்டு, கம்பஹா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கும் அவர் கொண்டு வந்தார்.
பொலிஸ் குழுவினர், சமந்தவின் வீட்டை நோக்கிச் சென்ற போது, ஜீரணித்துக் கொள்ள முடியாத துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது.
அங்கு கிடந்த சடலங்கள், பழுதடைந்த நிலையில் இருந்தமையை உணர்ந்து கொள்ள முடிந்தது. வீட்டின் முன்பக்கமாகவுள்ள ஜன்னலிலொன்று திறந்திருந்ததுடன், முன்கதவு மூடப்பட்டிருந்தமையைப் பொலிஸார் கண்டனர்.
வீட்டிலிருந்த ஒவ்வொரு அறையிலும் கறுப்பு இறப்பர் சீற்றினால், ஏதோவொன்று மூடப்பட்டிருந்தமையை அவர்கள் ஒவ்வொரு அறையின் ஜன்னலூடாக எட்டிப் பார்த்தபோது உணர்ந்து கொண்டனர்.
இந்த வீட்டில், ஏதோவொரு விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்து கொள்வதற்கு, அங்கு சென்ற பொலிஸாருக்கு வெகுநேரம் எடுத்திருக்கவில்லை.
றொட் வைலர் வகையைச் சேர்ந்த நாய், அந்த வீட்டின் சிறிது தூரத்திலிருந்து பொலிஸ் குழுவைப் பார்த்துத் தொடர்ந்தும் குரைத்தது.
பொலிஸார், வீட்டின் முன் கதவைத் திறந்துகொண்டு உட்செல்லும் போது, பாய்ந்து வந்த அந்த நாய், பொலிஸ் அதிகாரிகளைக் கடிப்பதற்கு முயன்றுள்ளது.
கடும் முயற்சியின் பின்னர், அந்த நாயை மடக்கிப் பிடித்து, மற்றொரு அறையில் போட்டுப் பூட்டிய பொலிஸார், கறுப்பு இறப்பர் சீற்றுகள் போடப்பட்டிருந்த அறைகளைத் திறந்தனர்.
அங்கு, கணவனையும் மனைவியையும் சடலமாகக் கண்டனர். பொலிஸாரினால் அறையில் போட்டுப் பூட்டப்பட்ட அந்த நாய், தர்மசேனவால் அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியென்று, அங்கிருந்தவர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது.
இந்த வீட்டில் சிறிய குழந்தையொன்று இருந்தது. அந்தக் குழந்தைக்கு என்ன நடந்ததோ என்று, அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.
இந்த வீட்டில் சிறிய ரக லொறியொன்று இருந்தது. அந்த லொறியையும் காணவில்லையென, அங்கிருந்தவர்கள் கூறினர்.
இதனையடுத்து, கணவன் – மனைவியைக் கொலை செய்ததன் பின்னர், கொலையாளி, அந்தக் குழந்தையைக் கடத்திக் கொண்டு லொறியில் தப்பிச் சென்றிருக்கலாமென பொலிஸார் ஊகித்தனர்.
கோழிப் பண்ணை மற்றும் அன்னாசித் தோட்டத்தில் ஒருவர் வேலை செய்ததை, நாம் கண்டோம். அவர்- நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் இவ்வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அவர், அக்கம் பக்கத்தவர்களோடு அவ்வளவாக ஒட்டி உறவாடுவதில்லை.
அதனால், அவர் யாரென்று, தங்களுக்குத் தெரியாதென, அங்கிருந்தவர்கள் கையை விரித்தனர்.
எனினும், அந்த மனிதன், சின்னக் குழந்தையுடன் விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம். அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.
கிராமத்திலிருந்தவர்கள் கூறிய அந்தத் துருப்பைப் பயன்படுத்தி, இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தவர், இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
பொலிஸ் குழுவினர் அவ்வீட்டுத் தோட்டத்தைச் சோதனை செய்தபோது, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலிருந்த கிணற்றின் மீது, அவர்களின் பார்வை பட்டது.
அந்தக் கிணற்றுக்குள்ளே, சின்னக் குழந்தையின் உடல் குப்புற மிதந்து கொண்டிருந்தது. விரைந்து செயற்பட்ட பொலிஸார், கம்பஹா நகரசபையின் தீயணைப்புப் பிரிவின் கிறேனின் மூலம், குழந்தையின் சடலத்தை மேலெடுத்தனர். கணவன் – மனைவியின் சடலங்கள் மற்றும், அக்குழந்தையின் சடலத்தை, மேற்கண்டவாறே பொலிஸார் மீட்டனர்.
இக்கொலைகளைப் புரிந்த கொலையாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் அலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் இலக்கம் ஆகியவற்றை, அந்த வீட்டிலிருந்து பொலிஸார் திரட்டிக் கொண்டனர்.
இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, கம்பஹா வலய பாரிய குற்றங்கள் தொடர்பான பிரிவு, விசாரணையை முடுக்கி விட்டது.
பஸ்யால பிரதேசத்திலுள்ள வீட்டிலிருந்த ஒருவர், பல நாட்களுக்கு முன்னர், வந்திருக்கிறார். அவரது நடவடிக்கையில் சந்தேகம், பகல் வேளைகளில் வெளியே நடமாடுவதில்லை, யாரொருவருடனும் முகங்கொடுத்தும் பேசுவதும் இல்லை, இந்த நபர் தொடர்பில் கொஞ்சம் தேடிப் பாருங்கள்.
ஏதாவதொரு குற்றத்தைச் செய்துவிட்டு, அவர் இவ்வாறு இருக்கிறாரோ தெரியவில்லை என, பொலிஸாருக்குத் தொடர்புகொண்ட ஒருவர், அந்த நபர் தொடர்பில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
அதனையடுத்தே அங்கு விரைந்த பொலிஸார், இந்த முக்கொலை தொடர்பில், குருத்தலாவ இங்குருகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அம்புகேன வத்த மங்கள வசந்த குமார (வயது 35) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இவரிடம், கம்பஹா வலய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி குமாரகே, வாக்குமூலம் பெற்றார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘பத்திரிகையிலிருந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.
அதனடிப்படையில், நிட்டம்புவ – பஸ்யால பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணைக்கு வேலைக்கு வந்தேன். அந்தக் கோழிப் பண்ணையில் கொஞ்ச நாட்கள் நான் வேலை செய்த போது, தர்மசேன என்பவருக்கு நான் அறிமுகமானேன்.
தர்மசேன, நான் வேலை செய்யும் அந்தப் பண்ணைக்கு கோழித் தீவனம் பெறுவதற்காகத் தினமும் வருவார். அவ்வாறு அறிமுகமான நான், ஒருநாள் அவருடன் உரையாடியபோது, ‘உனக்கு விருப்பமாகவிருந்தால், என்னுடைய கோழிப் பண்ணைக்கு நீ வேலைக்கு வரலாம்’ என்றார்.
நானும் அதற்கு இணங்கினேன். இன்றைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் நான், தர்மசேனவிடம் வேலைக்குச் சேர்ந்தேன்.
அவரின் கோழிப் பண்ணை மற்றும் அன்னாசித் தோட்டத்தில் வேலை செய்தேன். சில நாட்களுக்கு முன்னர், நான் தர்மசேன மனைவியுடன் கள்ளத் தொடர்பை வைத்துக் கொண்டேன்.
நான் திருமணமாகாதவன். தனியாக வாழ்க்கையை கொண்டுசென்றேன். ஒருநாள் இரவு, கோழிப் பண்ணைக்கு அருகில் வைத்து, விமலாவின் கையைப் பிடித்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தேன்.
இதனை தர்மசேன, கையும் களவுமாகக் கண்டுகொண்டார். நன்றாக ஏசினார். ஒருநாள் அவர், வீட்டைவிட்டு வெளியேறி, பயணம் சென்றுவிட்டார்.
அவர் வெளியேறியதன் பின்பு நானும் விமலாவும் அறைக்குச் சென்றோம். நான் விமலாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்த போது, தர்மசேன திடீரென வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.
நாங்களிருவரும் அறையிலிருந்ததைக் கண்டுகொண்டார். எங்களிருவரையும் அவர் கண்டித்தார். கூடுதலாக, விமலாவையே ஏசினார். எனினும், வீட்டிலிருந்து போகுமாறு என்னை ஒருபோதும் சொல்லவேயில்லை.
எனவே, நான் வீட்டிலிருந்தேன். எங்களிருவரின் தொடர்பும் நீடித்தது. எங்கள் தொடர்பு தர்மசேனவுக்குத் தெரிந்ததன் பின்பு, விமலா நோனாவுக்கு ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்தார்.
சில நாட்களில், கடுமையாகத் தாக்கினார். அந்த நாட்களில் நான் எதனையும் செய்ய நினைக்கவில்லை. இந்தச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று காலையில் தர்மசேன, குண்டாந்தடியை எடுத்து, நோனாவைக் கடுமையாகத் தாக்கினார். நோனா அழுதார். நோனாவைத் தாக்குவதை என்னால் தாங்க முடியவில்லை.
அப்போது, தர்மசேனவிடமிருந்த அந்தக் குண்டாந்தடியைப் பறித்து, அதனால் அவரைத் தாக்கினேன். ‘ஐயயோ ஐயயோ, மாத்தையாவை அடிக்காதீர்கள்’ எனக்கூறிக் கொண்டே நோனா, தர்மசேனவின் முன்னால் பாய்ந்தார்.
கடும் கோபத்துடன், தர்மசேனவின் மீது, நான் தாக்கிக் கொண்டிருந்த போது, அதிலொரு பலமான அடி எங்கள் இருவருக்கிடையில் சிக்கிய நோனாவின் மீது பட்டது. அந்த அடியின் காரணமாக வெளியேறிய இரத்தம், நிலத்தில் கொட்டியது.
அதன் பின்னரே, சாகும் வரை இருவரையும் தாக்கினேன். இந்தச் சம்பவத்தை நோனா, பொலிஸில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் தான், அவரை அடித்துக் கொன்றேன்.
இந்தச் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சின்னக் குழந்தை வீட்டிலிருக்கவில்லை. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.
அதன் பின்னர், அவ்விருவரின் சடலங்களையும் போர்வையால் போர்த்தி, கறுப்பு இறப்பர் சீற்றினால் முடினேன்’. வாக்குமூலங்களை எடுத்துக் கொண்டிருந்த பொலிஸார் இடைமறித்து, ‘இவ்விருவரையும் கொலை செய்த பின்னர், அந்தச் சின்னக் குழந்தையை என்ன செய்தாய்?’ எனக் கேட்டனர்.
‘அவ்விருவரின் சடலங்களையும் மூடிவிட்டு, பதற்றத்தில் வெளியே வந்து பார்த்தேன். அதன் போது தனியாகக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
உடம்பிலிருந்த இரத்தங்களைக் கழுவிக் கொண்டு, குழந்தைக்கருகில் ஓடினேன். அவளுக்கு என் மீது கடுமையான பாசம். என்னருகிலேயே இருப்பாள். நான், அக்குழந்தையருகில் சென்று, சிறிது நேரம் விளையாடினேன். அவளைத் தூக்கிக்கொண்டு, லொறி நிறுத்தப்பட்டிருந்த கராஜுக்கு வந்தேன்.
பின்னர், பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று, பால் பக்கற்றொன்றை வாங்கிவந்து, குழந்தைக்குப் பருகக் கொடுத்தேன். பின்னர், லொறிக்குள் வைத்து, குழந்தையை உறங்கச் செய்தேன். நானும் உறங்கிவிட்டேன்.
இரவு வேளையில் எழும்பி, வீட்டுக்குள் சென்று, தேநீர் தயாரித்துக் குடித்தேன். குழந்தைக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தேன்.
அதன் பின்னர் காலையில் எழுந்த குழந்தை, அம்மா – அப்பா எங்கேயெனக் கேட்டது. அடிக்கொருதடவை கேட்டது.
மாமியின் வீட்டுக்குச் சென்றிருப்பதாக நான் கூறினேன். காலையில் எழும்பியவுடன், தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன்.
ஆரம்பத்தில் நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்ல யோசித்தேன். எனினும், குழந்தையைக் கூட்டிக்கொண்டு சென்றால், பாரிய பிரச்சினை வருமென நான் நினைத்தேன்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் கொஞ்சினேன். கிணற்றுக்கருகில் கொண்டுசென்றேன். அவளைத் தூக்கிக் கிணற்றுக்குள் வீசிய போது, ‘மாமா’ என்று கத்தினாள்.
நான் அவளை வீசிவிட்டேன். கிணற்றுக்குக் குறுக்காகப் போடப்பட்டிருந்த தடியில் பட்டு, அக்குழந்தை காயமடைந்ததைக் கண்டேன்.
அவள், கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. அதன் பின், அங்கிருந்து திரும்பிவிட்டேன். அதன் பின்னர், வீட்டிலிருந்த கைக்கடிகாரம், காசோலை, பிறேஸ்லெட், டி.வி.டி, ஹெட்‡போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, லொறியையும் எடுத்துக் கொண்டு, பஸ்யாலவுக்கு வந்துவிட்டேன்.
பஸ்யாலயிலுள்ள மற்றொரு பெண்ணுடன் நான் கள்ளத் தொடர்பைக் கொண்டிருந்தேன். அந்த வீட்டுக்கு நான் சென்றேன்.
அந்தப் பெண்ணிடம், இந்தச் சம்பவம் தொடர்பில் எதனையும் கூறவில்லை. அதன் பின்னர் ஒருநாள், லொறியை எடுத்துக் கொண்டு, தர்மசேனவின் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்கருகில் செல்லும் போது, பாரிய பயமேற்பட்டது.
ஆகையால், லொறியைத் திருப்பிக்கொண்டு, பஸ்யாலயிலுள்ள எனது கள்ள மனைவியின் வீட்டுக்கு வந்தேன்’ எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர் தூங்கவில்லையென்றும், நன்றாகச் சாப்பிடவில்லையென்றும், அடிக்கொரு தடவை பயந்த சுபாவத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இது, சந்தேகநபர் கூறிய கதையாகும். இதில், உண்மை, பொய் எதுவென்று, தர்மசேனவும் அவரது மனைவியான விமலாவதியும் உயிருடன் இருந்தால் மாத்திரமே கண்டறிய முடியும்.